ஹெல்மெட் போடவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது
இந்தியா - குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பணியாற்றும் வாகனப் போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதற்கு புதுமையான முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளனர்.
போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று நகரத்தின் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள், நிர்வாக மற்றும் சங்க உறுப்பினர்களை கடந்த இரண்டு நாட்களாக சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் இறுதியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்ற முடிவெடுக்கப்பட்டது.
அங்கு செயல்படும் 148 நிலையங்களில் 133 உரிமையாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றனர். இருக்கை பெல்ட்களோ, ஹெல்மெட்டோ அணியாதவர்கள் ஓட்டிவரும் வாகனங்கள், ஹெல்ப்லைன் எண்கள் எழுதப்படாத ஆட்டோக்கள், ஆடம்பரமான எண் பலகைகள் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கண்ணாடிகளில் அடர்த்தியான பிலிம் பேப்பர் ஒட்டப்பட்ட கார்கள் போன்றவற்றிற்கு எரிபொருள் அளிக்க வேண்டாமென்று இந்த உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
வண்டி ஒட்டுபவர்களிடம் ஓட்டுனர் உரிமமும், மூன்றாம் நபர் காப்பீடும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறையின் கூடுதல் கமிஷனர் எச்.ஜி. பட்டேல் அபராதம் விதிப்பது விதிமீறல்களைக் குறைக்கவில்லை என்று கூறினார். ஆண்டுதோறும் போக்குவரத்து அபராதம் பெருகிவருவது குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை குறிப்பிடுகின்றது. போக்குவரத்துத் துறையின் கடுமையான செயல்பாடுகளோ, விழிப்புணர்வு பிரச்சாரங்களோ எதிர்பார்க்கும் அளவு பலனை அளிக்கவில்லை. எனவே வாகனங்களுக்கான அடிப்படைத் தேவையான எரிபொருளை இலக்காக வைத்தோம்.
பெட்ரோல் நிலையங்களுக்கு நகர காவல்துறையினரே அனுமதி வழங்குவதால் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment