"வைரஸ்' அரக்கன் :-இன்று உலக ரேபிஸ் தினம்-
ரேபிஸ் நோயால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும், அதை முற்றிலும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். இவரது மறைந்த தினம் செப்., 28. இவரை கவுரவிக்கும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால் உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசிகள் உள்ளன. இவற்றின் விலை அதிகமாக இருப்பதால், வளரும் நாடுகளில் இது குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.
நாய் முதல் எதிரி:
ரேபிஸ் என்பது ஒரு விதமான வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாய் ஆகியவற்றையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், நேரடியாக மனிதர்களை கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது. நாய்கள் மூலமே அதிகளவில் ரேபிஸ் பரவுகிறது. ரேபிஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடனேயே, டாக்டரிடம் காட்டி உரிய சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.
டாக்டர்கள் கூறுவது என்ன?
"நாய்க்கடித்தவுடன் தடுப்பூசி அவசியம்' :என்கின்றனர், மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பாலாஜி நாதன், நாய் கடித்தாலோ, நகத்தால் பிராண்டினாலோ குழாய்த் தண்ணீரில் நேரடியாக காயத்தை காண்பித்து, ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கழுவ வேண்டும். சோப்பாலும் கழுவலாம். நாய் கடித்த அன்றே, முதல் தடுப்பூசி போட வேண்டும். அதன் பின், 3, 7வது நாட்களிலும், 21 அல்லது 28வது நாட்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போட வேண்டும். நாய் கடித்தால் தான் "ரேபிஸ்' பரவும் என்பதில்லை. அதன் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் நோய் பரவலாம். உடலில் எங்காவது சிறுகீறல் இருந்து, அதன் உமிழ்நீர் பட்டால் "ரேபிஸ்' வைரஸ் தாக்கும். நோய் தாக்கிய பின், மருத்துவ சிகிச்சை இல்லை. அவர்களிடம் நெருக்கமாக பழகிய அனைவருமே, தடுப்பூசி போடுவது அவசியம், என்றார்.
வளர்ப்பவர்களே... உஷார்:
நாய் வளர்ப்பவர்களும் ஆண்டுக்கொரு முறை, நாய்க்கு தடுப்பூசி போட வேண்டும். நகத்தால் பிராண்டினாலோ, நக்கினாலோ அலட்சியமாக இருக்கக்கூடாது. அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் நாய்க்கடிக்கு தடுப்பூசி போடப்படுகிறது. காயம் ஆழமாக இருந்தால், "இம்யுனோ குளோபுலின்' மருந்து, கூடுதலாக செலுத்தப்படும். எல்லாம் "ரேபிஸ்' தான் காட்டு விலங்குகள் மூலம் "ரேபிஸ்' பரவும். நாய் மட்டுமல்ல... பூனை, குரங்கு, குதிரைகள் போன்ற விலங்குகள் மூலமும் "ரேபிஸ்' வைரஸ் பரவும். இந்த ஆண்டில், பூனையிடம் கடிபட்ட இரண்டு பேர், தொடர் சிகிச்சை பெறாமல், அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். எனவே, எந்த விலங்கு கடித்தாலும், தடுப்பூசி, தொடர் ஊசி போடுவது அவசியம்.
அமைதியும் ஆபத்தே:
"ரேபிஸ்' தாக்கிய நாய்கள், ஆக்ரோஷமாக பல்லை காண்பித்து, நாக்கை தொங்கவிட்டு தான் அலையும் என்பதில்லை. பூனைக்குட்டி போல அமைதியாக இருக்கும். நாய்களைப் பார்த்தவுடன், சிலர் அதன் தலையை தடவி கொடுப்பர். உடனே கடித்துவிடும். கிராமப்புறங்களில் தான் நாய்க்கடி அதிகம். அதிகாலை, மாலை நேரங்கள் தான் அதிக இலக்கு. குப்பையில் நாய்கள் சுற்றித் திரிந்தால், விலகிச் செல்ல வேண்டும். இரவுநேர அசைவ ஓட்டல்களில் விழும் எச்சில் இலைகளை கடந்து செல்லும் போது, கடிபடலாம்.
Post a Comment