Header Ads



குவைட் நிதியுதவியில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி வீடுகள் மக்களிடம் கையளிப்பு


(அபூ முஸ்னா)

புத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 20 வீடுகளைக் கொண்ட “பைத்துஸ் ஸகாத்” வீடமைப்புத் திட்டம் நேற்று திங்கட்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான குவைட் நாட்டின் உயர்ஸ்தானிகர் யாகூப் யூசுப் அல் அதீகி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த வீடமைப்புத் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இயங்கும் பைத்துஸ் ஸகாத் நிதியத்தினால் இந்த வீடமைப்புத் திட்டத்திற்குரிய காணி மணல்குன்று பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்டு இக்காணியிலேயே இந்த வீடமைப்புத்திட்டம் குவைட் நாட்டின் பைதுஸ் ஸகாத் நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியினால் அமைக்கப்பட்டது.  புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் தெரிவு செய்யப்பட்ட வீடுகளற்ற வறிய குடும்பங்களுக்கு உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  “குவைட் அரசின் சகோதர உறவுக் கொள்கையின் ஓர் அங்கமாக குவைட் பைதுஸ் ஸகாத் நிதியத்தினால் இந்த இருபது வீடுகள் அன்பளிப்புச் செய்யப்படுகின்றன. இதேபோல இன்னும் இருபது வீடுகள் இந்த ஊருக்கு அன்பளிப்புச் செய்யப்படும்” என வைபவத்திற்குப் பிரதம அதிதியாகக் கலந்து வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது வீட்டைத் திறந்து வைத்ததோடு வீட்டுரிமையாளர்களுக்கு உரிமமம் பத்திரங்களையும் வழங்கிய பின்னர் அங்கு உரையாற்றிய குவைட் நாட்டுத் தூதுவர் யுசுப் அல் அதீகி கூறினார்.

இந்நிகழ்வில் புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் எம். ஆர். எம். மலிக்,  புத்தளம் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசோக பெரேரா,  மணல்குன்று பொம்மக்கா கோவிலின் சந்திர குருக்கள், மணல்குன்று மன்பவுல்  ஸாலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரியின் அதிபர் எம். றியாஸ் ஹாபிஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.



No comments

Powered by Blogger.