Header Ads



தெற்காசிய கால்பந்து - முதன்முறையாக ஆப்கானிஸ்தான் சாம்பியன்

தெற்காசிய கால்பந்து பைனலில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானிடம் பரிதாபமாக தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணி, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நேபாள தலைநகர் காத்மண்டுவில், ஆண்களுக்கான 10வது தெற்காசிய கால்பந்து தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில், சர்வதேச ரேங்கிங்கில் (தரவரிசை) 145வது இடத்தில் உள்ள இந்திய அணி, 139வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இந்திய வீரர்கள் துவக்கத்தில் இருந்தே சொதப்பலாக ஆடினர். மறுபக்கம் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு முஸ்தபா ஆசாத்ஜாய்(9வது நிமிடம்) முதல் கோல் அடித்தார். இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த "கார்னர்' மற்றும் "பிரி கிக்' வாய்ப்புகளை வீணடித்தனர். முதல் பாதி முடிவில் இந்திய அணி 0-1 என பின்தங்கி இருந்தது.

இரண்டாவது பாதியிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 60வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் செத்ரி களமிறங்கினார். இவரது கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. ஆப்கானிஸ்தானின் சான்ஜார் அகமதி, 62வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

முடிவில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் "நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை கோட்டைவிட்ட இந்திய அணி, மூன்றாவது முறையாக (1995, 2008, 2013) இரண்டாவது இடம் பிடித்தது. போரின் பாதிப்புகளை கடந்து அசத்திய ஆப்கானிஸ்தான் அணி, முதன்முறையாக கோப்பை வென்றது. தவிர, கடந்த முறை (2011) நடந்த பைனலில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

பைனலில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக தெற்காசிய கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது. கடைசியாக நடந்த இரண்டு (2009, 2011) தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

நேற்றைய பைனலில் கேப்டன் சுனில் செத்ரியை மிகவும் தாமதமாக களமிறக்கி தவறு செய்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் விம் கூவர்மென்ஸ். 60வது நிமிடத்தில் வந்த செத்ரி, கோல் அடிக்க பெரும் முயற்சி செய்தார். இவர், முதல் பாதியில் களமிறங்கி இருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

நேற்று மதியம் நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு வந்த ஆப்கானிஸ்தான் எம்.பி.,க்கள் சிலர், தங்கள் அணி வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தினர். கோப்பை வெல்லும் பட்சத்தில், ஒவ்வொருவருக்கும் "அப்பார்ட்மெண்ட்' மற்றும் 16 லட்சம் பரிசு தருவதாக தெரிவித்தனர். தவிர, போட்டியின் போது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் நிறைய பேர் மைதானத்தில் திரண்டு, தங்கள் அணியினரை ஊக்கப்படுத்தினர்.

No comments

Powered by Blogger.