Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை சமூக நல்லிணக்கத்திற்கான முதல் வெற்றி!

வடக்கு முஸ்லிம் சமூகத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக நிலவி வரும் முரண்பாடுகளை நீக்கி அவ்விரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி அமையப் போகும் வட மாகாண சபையில் இணக்க அரசியல் பங்களிப்பினை ஏற்படுத்துவதற்காகவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முன்வந்ததாக நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா மொஹமட் தெரிவித்தார்.

இவ்வாறு நாம் முயற்சி எடுத்துக் கொண்டதன் விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அதன் வட மாகாண சபைக்கான தேர்தல் அறிக்கையில் அம்மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட எமது முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம், இருப்பு, பாதுகாப்பு, வாழ்வாதாரம் முதலான பல்வேறு விடயங்களுக்கும் முழுமையான உத்தரவாதம் வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் கடந்த 06ம் திகதி வெள்ளிக்கிமை மாலை நடைபெற்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் அவ்வாறு கூறினார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அஷ்ஷெய்க் நஜா மொஹமட் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வட மாகாண சபைத் தேர்தலே இன்று உள்நாட்டிலும், சர்வதேச சமூகத்திலும் அதிக கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கின்றன. தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் வட மாகாண மக்களுக்கு குறைந்த அளவிலேனும் நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை அதிகாரங்களைப் பெறக்கூடிய ஒரு தேர்தலாக இத்தேர்தல் அமைந்துள்ளது.

நாட்டிலுள்ள ஆறு மாகாண சபைகளிலும் ஆளுந்தரப்பினர் ஆட்சியமைத்துள்ளனர். நடைபெறவுள்ள மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைத் தேர்தல்களிலும் ஆளுந்தரப்பினர் ஆட்சியமைக்கின்ற வாய்ப்புக்கள் காணப்படுகின்ற சூழ்நிலையில் வட மாகாணத்தில் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான மாகாண அரசு அமையும் வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இந்த நிலையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான எமது கூட்டமைப்பானது, மற்றொரு வகையில் இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தது. வட மாகாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வந்த எமது முஸ்லிம் சமூகம் 1990களில் அம்மாகாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டது. கடந்த 23 வருடங்களாக வடக்கிற்கு வெளியே அவர்கள் அகதி அந்தஸ்தும் பெற்றிராத அவல நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வட மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு எங்களால் என்ன பங்களிப்பினைச் செய்ய முடியும் என நாம் சிந்தித்தபோதுதான், முரண்பட்டிருக்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களை இந்தத் தேர்தலின் ஊடாக ஒரு உடன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையுடன் வட மாகாண தேர்தல் களத்தைப் பயன்படுத்துவது என நாம் தீர்மானித்தோம். 

அதனடிப்படையில் நாம் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களைச் சந்தித்துப் பேசினோம். எமது நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவர் கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களையும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார்.

அவர்களுடனும் நாம் சந்தித்துப் பேசினோம். காத்தான்குடியிலிருந்தும், கண்டியிலிருந்தும் சென்றிருந்த நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவன் மூலம் எங்களுக்கு என்ன பதவிகளைத் தருவீர்கள் என்றோ அல்லது எந்தவிதமான வரப்பிரசாதங்களை வழங்குவீர்கள் என்றோ அவர்களுடன் பேசவில்லை. எமது வட மாகாண முஸ்லிம்களை அமையவுள்ள வட மாகாண சபையினூடாக எவ்வாறு கையளப் போகிறீர்கள் என்றுதான் அவர்களிடம் நாம் வினவினோம்.

அதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள், முஸ்லிம்களின் சுயமரியாதையையும், கௌரவத்தையும் பாதுகாக்கக்கூடிய சலுகைகளுக்குச் சோரம் போகாத வேட்பாளர் ஒருவரை எம்மிடம் தாருங்கள். அவர் மூலமாக நாம் வடக்கு முஸ்லிம்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவோம் என எம்மிடம் கூறினார். அதன்படி நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதற்கு பொருத்தமான வேட்பாளர் ஒருவரைத் தருவதாகக் கூறியிருந்தோம்.

எமது எண்ணங்களின் தூய்மையை உணர்ந்த அழ்ழாஹ், யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அஷ்ஷெய்க் அஸ்மின் ஐயூப் நளீமி அவர்களையே எமக்குத் தெரிவு செய்து தந்தான். அவர் தனது 11வது வயதிலேயே பெற்றோருடன் அனைத்தையும் வட மாகாணத்தில் கைவிட்டு விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர். அகதி முகாம்களிலும், நலன்புரி நிலையங்களிலும் பல வருட காலமாக துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தவர். வட மாகாண முஸ்லிம் சமூகத்தின் எண்ணங்களையும், இலட்சியங்களையும் நன்கறிந்தவர். வட மாகாணத்தில் நலன்புரிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்னார் ஆயரைச் சந்திக்கச் சென்ற வேளையில் மன்னார் மாவட்ட வேட்பாளர்களை கூட்டமைப்பின் தலைவர்கள் அறிமுகப்படுத்தியபோது, எமது வேட்பாளர் அஸ்மின் அவர்களை அவர் ஏற்கனவே அறிந்திருப்பதாகவும், பொருத்தமான வேட்பாளர் எனச் சான்றுரைத்ததையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர் மன்னார் மாவட்டத்திலேயே கூட்டமைப்பின் தனியொரு முஸ்லிம் வேட்பாளராக இத்தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் இணைக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் சக்தியாகும். அதில் மிதவாதப் போக்குடைய தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் உள்ளன. ரெலோ, ஈரோஸ், புளொட் போன்ற ஆயத இயக்கங்களாக இருந்து ஜனநாயக அரசியலுக்கு வந்த கட்சிகளும் இருக்கின்றன. இதனால் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகளும், அபிப்பிராய பேதங்களும் இருப்பது தவிர்க்க முடியாததாகும்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் தரப்பொன்று இணைந்து கொள்வதை எடுத்த எடுப்பிலேயே அதில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் ஏற்றுக் கொள்வதில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான எமது கூட்டமைப்பின் எண்ணங்களையும், இலட்சியங்களையும் அவர்களுக்கு பல சந்திப்புக்களின் ஊடாகவே தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. 30 வருடங்களாக முஸ்லிம் மக்களுடன் முரண்பட்டிருந்தவர்களை உடன்பாடு காணச் செய்வதில் நாம் பல வாரங்களாக இரவு பகலாக உழைத்தோம். எம்மையும், வட மாகாண முஸ்லிம்களின் நிலவரங்களையும் அவர்களுக்குப் புரிய வைப்பதில் அர்ப்பணத்துடன் செயற்பட்டோம்.

இறுதியில் எமது முயற்சி வீண் போகவில்லை. அழ்ழாஹ் பொருந்திக் கொண்டதால் இறுதியில் அவர்களும் எம்மைப் புரிந்து கொண்டு பொருந்திக் கொண்டார்கள். வரும் 21ம் திகதியன்று தேர்தல் நடைபெற்று எமது பிரதிநிதி வெற்றி பெறுவதற்கு முன்னதாகவே இறைவன் எமக்கு பாரிய வரலாற்று வெற்றிகளைப் படிப்படியாகத் தந்து கொண்டிருக்கின்றான்.

கடந்த 04ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட வட மகாண சபைக்கான அவர்களின் தேர்தல் அறிக்கையில் 10ம் பக்கத்தில் முஸ்லிம் மக்கள் என்ற தலைப்பில் எமது வட மகாண முஸ்லிம்களை அவர்களது வட மாகாண சபை நிர்வாகத்தில் எவ்வாறு கையாளவுள்ளனர் என்பதை மிகத் தெளிவாக அவர்கள் வெளிப்படுத்தி இருப்பது எமது இந்த அரசியல்களப் பயணத்தில் கிடைத்திருக்கின்ற முதலாவது வெற்றியாகும்.

'1990ம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் பாரம்பரியக் குடிகளாக இருந்துள்ளனர்' என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதில் இருந்து வட மாகாணமானது வடக்கு முஸ்லிம்களுக்கும் பூர்வீகத் தாயகம் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

'அவர்கள் தமது சொத்துக்களைக் கைவிட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று சொல்லொணாத் துன்பங்கள் அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை வருந்தத்தக்கதாகும்' என அத்தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகமானது, வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

'வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களும் இயன்றவரை விரைவாக தத்தமது பகுதிகளுக்குத் திரும்பிச் சென்று தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் நாம் பற்றுறுதி கொண்டுள்ளோம்' என கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதில் இருந்து, 23 வருடங்களுக்கு முன்னதாக 24 மணி நேர அவகாசத்தில் விரட்டப்பட்ட வட மாகாண முஸ்லிம் மக்களை வடக்குத் தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் மீண்டும் வரவேற்று தம்மோடு இணைந்து வாழ்வதற்கு காட்டியிருக்கும் அக்கறையும், அவசரமும் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும்  உணர்த்தப்பட்டுள்ளது.

'அவர்கள் திரும்பி வருவதற்கு ஊக்கப்படுத்துவதோடு, தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு வழங்கும்' என்பதிலிருந்து மூன்று தசாப்தகாலமாக இவ்விரு சமூகங்களுக்கும் இடையில் நிலவி வந்த துருவ நிலை உறவு முற்றாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது.

'முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப் பிரச்சினைக்கும், வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதேயளவு கவனிப்பு வழங்கப்படும். இம்மாகாணத்தில் வாழும் அனைத்து சமூகத்தவருக்கும் நீதியானதும், சமத்துவமானதுமான கவனிப்பு கிடைக்கப் பெறுவதை இம்மாகாண நிர்வாகம் உறுதி செய்யும்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் அமையப் போகும் வட மாகாண சபையானது முழு இலங்கையிலுமே முன்னுதாரணமான ஒரு மாகாண சபையாகத் திகழும் என்பது ஐயந்திரிபற அனைத்து வட மாகாண வாக்காளர்களுக்கும், இந்நாட்டின் அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் எழுத்து மூலம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்! எமது ஐந்து வார அயராத முயற்சிக்கு இது அழ்ழாஹ் தந்தருளிய முதல் வெற்றி. இருந்தும் இந்தத் தேர்தல் அறிக்கைக்குப் புறம்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கம் காணப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் சார்பான எட்டு அம்சங்கள் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையையும் அடுத்த சில நாட்களில் நாம் செய்து கொள்ள இருக்கின்றோம். அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் அதனை நாம் மூடி மறைக்காது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் பகிரங்கப்படுத்துவோம்.
காத்தான்குடி மக்கள் 1996ல் அடித்தளமிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது இன்று தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் வியப்புடன் பார்க்கப்பட்டு, பாராட்டப்பட்டு, பரவலாகப் பேசப்படும் ஒரு சமூக அசியல் இயக்கமாகப் பரிணாமம் பெற்றுள்ளது. இந்தப் பெருமையும், சிறப்பும் இந்த ஊர்மக்களுக்கு வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாங்கள் வட மாகாணத்தில் பல இடங்களுக்கும் சென்று தேசிய, பிராந்திய சமூக நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசி வருகின்றோம். மன்னாரில், முல்லைத்தீவில், கிளிநொச்சியில், வவுனியாவில், யாழ்ப்பாணத்தில் பல மேடைகளில் இதுவரை பேசி இருக்கின்றோம். எமது பேச்சுக்களும், கருத்துக்களும் வடக்குத் தமிழ் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

வட்டுக்கோட்டையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் மக்களின் தானைத் தளபதியாக மதிக்கப்படும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். 1976ல் தமிழீழத்திற்கான பிரகடனம் செய்யப்பட்ட மண். அங்கு ஒரு முஸ்லிம் கூட இன்று இல்லை. அந்த மண்ணுக்கும் நாம் சென்று திரண்டிருந்த தமிழ் மக்கள் மத்தியில் எமது தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் பற்றியும், சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்தும் பேசினோம். அவர்கள் வான் பிளக்கும் கரகோஷம் மூலம் எமது கருத்துக்களை வரவேற்றனர்.

சுன்னாகம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலும் நாம் பேசினோம். மக்கள் கரகோஷமெழுப்பி வரவேற்புத் தெரிவித்தனர். அம்மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மிக வெளிப்படையாகவே வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு கவலை தெரிவித்து உரையாற்றினார். தமிழ் மக்கள் தாம் விட்ட பிழைகளை இன்னமும் மூடி மறைக்காமல் வெளிப்படையாகவே தவறுக்கு வருந்தும் மனப்பக்குவத்தைப் பெற வேண்டுமென வேண்டினார். 

சர்வதேச சமூகம் இன்று தமிழர்கள் நமக்காக நீதி கேட்டு சிங்களப் பேரினவாத அரசாங்கத்தை நெருக்கி வரும் சூழ்நிலையில், நாம் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்குச் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி வருந்தாமல் நிலையான நீதியை ஒருபோதும் பெற முடியாது என்ற யதார்த்தத்தை அங்கே பகிரங்கமாக வலியுறுத்தினார். அவரது பேச்சுக்கும் பெருவாரியான மக்களின் கரகோஷம் எழுந்தபோது வடக்குத் தமிழ் மக்கள் எதிர்பாக்கும் நல்ல மாற்றத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொணடோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த பின்னரே நீங்கள் எம்முடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எம்மிடம் நேரடியாகக் கூறியிருந்தனர். எனினும் நாம் அவர்களுடன் நடாத்திய சுமார் 15 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் அவர்களைப் புரிந்து கொண்டோம். அதனால் எமது வேட்பாளரைக் கையளித்த நிமிடத்திலிருந்து எமது செயற்பாடுகளையும், பிரச்சாரங்களையும் நாம் முன்னெடுத்தோம். பிரச்சாரக் கூட்டங்களில் அவர்களின் முன்பாகவே நின்று எமது இலட்சியங்களையும், எண்ணங்களையும் நாம் வெளிப்படுத்தியபோது தமிழ் மக்கள் அளித்த வரவேற்பானது எமது இணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விவாதிக்கப்பட இருந்த சில விடயங்களையும் இலகுபடுத்தி எல்ரோரையும் இயங்கச் செய்வதற்கும் வழி வகுத்தது.

நாம் வட மாகாண முஸ்லிம்களின் நலன்களையும், தேசிய மற்றும் பிராந்திய சமூக நல்லிணக்கத்தையும் முன் வைத்தே இந்தப் பெரும்பணியில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். அதற்கான கூலி அழ்ழாஹ்விடம் மாத்திரம்தான் எமக்குள்ளது என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே இந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை நிறுவிய காத்தான்குடி மக்களும் வடக்கு முஸ்லிம்களின் எதிர்கால சுபீட்ச வாழ்வைக் கருத்திற் கொண்டு இன்னமும் விமர்சகர்களாகவும், வெறும் பார்வையாளர்களாகவும் இருக்காது களமிறங்கிச் செயற்படக்கூடிய பங்காளிகளாக மாற வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.

வட மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர்கள், வியாபாரிகள் தமது வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான வியாபாரத் தொடர்புகளின் மூலமாக என்றாலும் வட மாகாண சபையில் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏக முஸ்லிம் பிரதிநிதியாக நிறுத்தப்பட்டிருக்கும் எமது வேட்பாளர் அஸ்மின் ஐயூபின் வெற்றிக்காக உழைப்பதற்கு நீங்கள் முனவர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். -இவ்வாறு அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி, சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். பழுலுல்ஹக் ஆகியோரும் உரையாற்றினர்.

1 comment:

  1. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தூர நோக்குடனான, முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்த இஹ்லாஸான நடவடிக்கைகளை கோழைத்தனமாக, (சொந்தப் பெயரிலேயே எழுத தைரியமில்லாமல் ) விமர்சித்த கையாலாகாதவர்களேல்லாம் இப்போ என்ன சொல்லப்போகிறார்கள்?
    அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நோக்கிய அனைத்து முயற்சிகளையும் நிச்சயம் அல்லாஹ் வெற்றியடையச் செய்வான்.
    யா அல்லாஹ், இந்த சகோதரர்களது நல்ல எண்ணங்களை நிறைவேற்றி, இவர்களது ஆயுளையும் நீடித்து, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைக் கொடுப்பாயாக.

    ReplyDelete

Powered by Blogger.