Header Ads



தமிழ் தேசிய கூட்டமைப்பின் யுத்தத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராகிவிட்டோம்..!

வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக எம்மீது மீண்டும் யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த யுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் அதனை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகிவிட்டோம். பிரபாகரனுக்கே அச்சப்படாத நாங்கள் விக்கினேஸ்வரனுக்கு அச்சப்படமாட்டோம்
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளை தோற்கடிக்க நாட்டு மக்களை இணைத்துக்கொண்டு களத்தில் இறங்க தயாராகிவிட்டோம் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இவ்வளவு அழிவுகள் இடம்பெற்ற பின்னர் கூட தமிழ்க் கூட்டமைப்பு மாற்றமடையவில்லை . அவர்கள் தமது மூன்றாவது யுத்தத்தை தற்போது ஆரம்பித்துள்ளனர் . இதற்கு பின்னரும் எம்மால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஆயுதங்களை ஏந்துமாறு தமிழ்த் தலைவர்கள் கூறும்போது நாங்கள் வெறுமனே இருந்து கொண்டிருக்க முடியாது என்றும் ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது .
மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு வடக்குத் தேர்தலுக்கு முன்னர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டதால் அககுழுவிலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துவிட்டோம் . இனி பாராளுமன்றத்துக்கு வெளியேயிருந்து பிரிவினைவாதத்துக்கு எதிராக போராடப்போகின்றோம் என்றும் ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது . பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிடுகையில்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது . இதனை பார்க்கும்போது கூட்டமைப்பு இன்னும் தமது பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை என்பது நன்றாக புரிகின்றது . தமிழ்க் கூட்டமைப்பு இவ்வாறு நாட்டை பிரிக்கும் வகையில் செயற்படும் என்பதும் பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் செயற்படும் என்பதும் எமக்குத் தெரிந்தமையினாலேயே 13 ஆம் திருத்தச் சட்டத்தை திருத்தாமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டாம் என்று நாங்கள் கூறினோம் . இல்லாவிடின் 13 இல் உள்ள முக்கிய விடயங்களை அகற்றுமாறு கோரினோம் . ஆனால் அது தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது .
தமிழ்க் கூட்டமைப்பு தனது விஞ்ஞாபனத்தில் கடந்த 30 வருடங்களாக யுத்தத்தில் 150000 தமிழ் மக்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இறுதிக் கட்ட யுத்தத்தில் 70000 பேர் இறந்துள்ளதாக கூட்டமைப்பு கூறுகின்றது . இது முற்றுமுழுதுமான பொய்யான தகவலாகும் . பாதுகாப்புத்தரப்பின் கணிப்பீடுகளின் பிரகாரம் 2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 7000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் புலிப் போராளிகளும் உள்ளடங்குகின்றனர் .
ஆனால் , புலிகள் கொலை செய்த தமிழ்த் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் குறித்து கூட்டமைப்பு தனது விஞ்ஞாபனத்தில் வாய்திறக்கவேயில்லை . அமிர்தலிங்கம் நீலன்திருச் செல்வம் , யோகேஸ்வரன் , உமா மகேஸ்வரன் , பத்மநாபா மற்றும் சபாரட்ணம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை புலிகள் கொலை செய்துள்ளனர் .அத்துடன் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கூட்டமைப்பு எதனையும் கூறவில்லை . அந்த வகையில் பார்க்கும்போது கூட்டமைப்பின் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை . 1949 ஆம் ஆண்டு 1977 ஆம் ஆண்டு செய்தவற்றையே தற்போது 2013 ஆம் ஆண்டிலும் மேற்கொண்டுள்ளனர் .
அவர்களின் தனிநாடு என்ற நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேயில்லை .வடக்கு , கிழக்கு மாகாணங்கள் தமது தாயகம் என்றும் தமக்கு சுயநிர்ணயம் உள்ளது என்றும் கூறியுள்ளனர் . சுயநிர்ணய உரிமை என்பது தனிநாட்டுக்கான முக்கிய பண்பாகும் . அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணம் தெளிவானது . நாட்டை மீண்டும் யுத்தத்தில் தள்ளிவிடவும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்லவுமே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது . அவர்களின் அந்த சவாலை நாங்கள் ஏற்கின்றோம்.
எனவே , கூட்டமைப்பின் பிரிவினைவாத செயற்பாட்டை எதிர்ப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் தயாராகவேண்டும் . இதன் பின்னர் கூட்டமைப்புடன் நல்லிணக்க செயற்பாடுகளோ சமாதான பேச்சுக்களோ அவசியமில்லை . இந்தியாவிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் எவ்வகையான அழுத்தங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாது கூட்டமைப்பின் பயணத்துக்கு எதிராக செயற்பட அனைவரும் முன்வரவேண்டும் . நாட்டின் இராணுவத்தினருக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதுடன் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதே கூட்டமைப்பின் நோக்கமாகவுள்ளது . அந்த சவாலை ஏற்று கூட்டமைப்பின் முயற்சியை தோற்கடிக்க நாங்கள் தயாராகிவிட்டோம் . இவர்களுக்கு எதிராக மக்கள் எழும்பவேண்டும்.
இவ்வாறு நடைபெறும் என்பது எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தது . அதனால்தான் முதலில் 13 ஆம் திருத்தத்தில் உள்ள ஐந்துவிடயங்களை நீக்குமாறு கோரினோம் . ஆனால் அது குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது . அதில் கலந்துகொண்டோம் . ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக வடக்குத் தேர்தலுக்கு முன்னர் எதுவும் நடைபெறாது என்பது உறுதியாகிவிட்டது .எனவே , தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துவிட்டோம் . இனி பாராளுமன்றத்துக்கு வெளியேயிருந்து பிரிவினைவாதத்துக்கு எதிராக போராடப்போகின்றோம் .
இந்தியாவும் தமிழ்நாடும் என்ன வகையான அழுத்தங்களை கொடுத்தாலும் அதனை பொருட்படுத்தாது நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும் . ஜனாதிபதி என்ன நிலைப்பாட்டில் இருந்தாலும் வெளிச்சக்திகள் நிலைமைகளை குழப்பிவருகின்றன .வடக்கில் கூட்டமைப்பு மாகாண சபையை அமைத்தால் நிச்சயம் யுத்தக் குற்றம் குறித்து ஆராய ஆணைக்குழுவை நியமிப்பார்கள் . அது இறுதியில் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்புக் குழுவிலேயே வந்து முடியும் . எனவே , கூட்டமைப்பின் முயற்சிக்கு எதிராக மக்களை திரட்டி செயற்படவேண்டியது அவசியமாகும் . இந்த விடயத்தில் இந்தியா எமக்கு எதிராக செயற்பட்டால் நாமும் அந்நாட்டுக்கு எதிராக செயற்பட நேரிடும் . மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான தொடர்புகளை ஐக்கிய தேசிய கட்சியும் கைவிடவேண்டும் என்று கூறுகின்றோம் .
அதாவது தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் எம்மீது மீண்டும் யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . அந்த யுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் அதனை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகிவிட்டோம் . பிரபாகரனுக்கு அச்சப்படாத நாங்கள் விக்கினேஸ்வரனுக்கு அச்சப்படமாட்டோம் . எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளை தோற்கடிக்க நாட்டு மக்களை இணைத்துக்கொண்டு களத்தில் இறங்க தயாராகிவிட்டோம் என்றார் .

No comments

Powered by Blogger.