Header Ads



அஷ்ரப் எனும் விடிவெள்ளி அஸ்தமித்துப் போன பின்னர்..!

 
(சுஐப் எம். காஸிம்)
ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாய் இந்நாடு
அமைதி சமாதானம் அபிவிருத்தி காண்பதற்கு
அரிய பணி செய்து வரும் சிறுபான்மை மக்கள் நாம்
அரசியலில் அறிவியலில் பின்னடைந்து வாழுகின்றோம்

ஒற்றுமையைக் கைவிட்டு ஒருகட்சி கொள்கையின்றி
மற்றவரின் மகுடிக்கு அடங்கி நிற்கும் மந்தநிலை
போக்க விழைந்தார் புருஷோத்தமர்அஷ்ரப்
ஆக்கமளித்தார் அதற்காய் உயிர் கொடுத்தார்

அரசியலில் விழிப்புணர்ச்சி பெறுவதற்கு வித்தூன்றி
அபிமானக் காங்கிரசில் அனைவரையும் ஒன்றிணைத்தார்
அறிவியலில் நம்மிளைஞர் மேலோங்க வழி சமைத்தார்
அற்புதமாய் அரசியலில் நம் பலத்தை வெளிக்கொணர்ந்தார்

செந்தமிழில் சிங்களத்தில் சிறப்பு மொழி ஆங்கிலத்தில்
தங்குதடை ஏதுமின்றித் தம் கருத்தை முன் வைத்தார்
எந்தப் பிரச்சினையையும் இனிய முகத் தோடணுகும்
சிந்தைக் கினியவராய் சிறந்து விளங்கி நின்றார்

பகைவருமே போற்றுகின்ற பேராற்றல் பெற்றவராய்
பயன் கருதாப் பணிபுரிந்து பார்போற்ற வாழ்ந்து நின்று
தான் சார்ந்த சமூகத்தின் உரிமைகளை வென்றெ டுக்க
தன்னலமே கருதாது உழைத்த பெரும் மேதை அவர்

போரொழிந்து நாடு புதுப்பொலிவு காண்பதற்குத்
தீர்வொன்றின் தேவை உணர்ந்து செயல்பட்டார்
ஆர்வமுடன் சந்திரிகா அரசில் இணைந்து நின்று
தீர்வுப் பொதி அமைக்கச் செயல்பட்ட சிற்பி அவர்

சந்திரிகா ஆட்சியிலே சர்வகட்சி மாநாட்டை
சரியாய் வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார்
மாநாட்டுத் தீர்மானம் மக்கள் அறிவதற்கு
மாதலைவர் இரவிரவாய் பத்திரிகைத் தொடர்பு கொண்டார்

பத்திரிகைப் பணி எனக்குப் பலர் தொடர்பைத் தந்ததுகாண்
அத்தனையிலும் சிறந்த அருந் தொடர்பு அஷ்ரபுடன்
முத்தார வித்தகனார் முழுமதியின் தண்ணிலவாய்
இத்துறையில் என்னை ஊக்குவித்த பேராசான்

பற்றுறுதி நேர்மையுடன் பத்திரிகைப் பணிசெய்தேன்
குற்ற மிழைக்காமல் குத்து வெட்டுக் காளானேன்
உத்தமராம் அஷ்ரப் இவ்வுலகில் இன்றிருப்பின்
எப்பொழுதோ எனக்குரிய நீதி கிடைத்திருக்கும்

பழகுதற்கு இனியவராய் பண்பின் உறைவிடமாய்
எழுதிசையில் ஒளி காலும் இளம்பரிதியாய் வளர்ந்து
வழுவாத கொள்கையுடன் வற்றாத வாஞ்சையுடன்
தெளிவான இலட்சியத்தை கைக்கொண்ட பெருமகனார்

வடபுலத்தில் வாழ்ந்த நாம் வாழ்விழந்து வீடிழந்து
வக்கற்ற சூழ்நிலையில் வருந்தித் தவிக்கையிலே
அஞ்சற்க! என்றே அமைச்சின் நிதி அளித்து
அகதிகளைப் போஷித்த அஷ்ரப் எங்கள் இதயமலர்

மானுடத்தை நேசித்தார் மகிமை மிகும் உள்ளத்தார்
தேனினிக்கப் பேசித் தெம்பூட்டி அன்பு கொண்டார்
தீனின் வழிநின்று திருவாழ்வு வாழ்ந்த அவர்
வானுயர்ந்த பேரிழப்பால் வருந்தி மனம் நொந்தோமே

அஷ்ர பெனும் விடிவெள்ளி அஸ்தமித்துப் போனபின்னர்
அரசியலில் நமதுரிமை மாறுபட்டு போன தம்மா
தேசிய இனமான முஸ்லிம்கள் இந்நாட்டின்
சிறப்புக் குழைத்தகதை மறந்தகதை யான தம்மா

அரசியல் சார் தலைவர் பலர் நம்மவரில் உண்டெனினும்
அஷ்ரபைப் போல் தனித்துவம்சேர் தலைமை இன்று வேண்டுமம்மா!
அரசியலில் நமதுரிமைப் போராட்டம் முன்னெடுக்க
ஆற்றல் துணிவு மிக்க தலைமை இன்று தேவையன்றோ!

அஷ்ர பெனும் திருநாமம் நம் மனதில் அழியுமோ
அவர் செய்த பெரும் பணியை மறக்குமோ நம்மனசு
அஷ்ர பெனும் பொன்மகனார் அல்லாவின் அருள் பெறவே
அகம் உருகி வேண்டுகிறேன் அல்ஹம்து லில்லாஹ்

No comments

Powered by Blogger.