தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் மட்டுமே தீர்வுகாண முடியும்
மாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி, பெருநிலப்பரப்புப் பகுதியொன்று புனித பூமியாக தற்போது நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பிபிசி யிடம் தெரிவித்தனர்.
கடந்த வருடம் பௌத்த கடும்போக்காளர்களினால் இந்த பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. ஏற்கனவே அடையாளமிடப்பட்ட பகுதியில் மக்கள் குடியிருப்புகளும், கட்டிடங்களும், நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டு அந்த பகுதியில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்தில், பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடி அகலமான நான்கு வழி நெடுஞ்சாலையொன்றை நிர்மாணிக்கும் வகையில் அடையாளமிடப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் கூறுகின்றது.
ஏற்கனவே யாழ்ப்பாணம்-கண்டி ஏ-9 நெடுஞ்சாலை சாலை போக்குவரத்திற்கு வசதியாக உள்ளது.
அப்படி இருந்தும் புதிதாக மற்றுமோர் நெடுஞ்சாலையை நிர்மாணிக்க உத்தேசித்திருப்பதானது அந்த பகுதியில் குடியிருக்கும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே கருத வேண்டியிருப்பதாக பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த எஸ். வை. எம். சலிம்தீன் கூறுகின்றார்.
28 தமிழ் குடும்பங்கள் நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் தலா ஒரு இலட்சம் ருபாய் கொடுப்பனவு வழங்கி வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்றும் அதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகளை இழந்த நிலையில் இக்குடும்பங்கள் தற்போது நிர்கதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்தப் பிரச்சினை ஏற்பட்ட போது ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் உறுதிமொழியையும் ஜனாதிபதி தங்களுக்கு வழங்கியுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்கள் எனவும் சலீம்தீன் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக மத விவகார அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கருத்தை பெற மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகள் பலனளிக்கவில்லை.
ஆக, ஜனாதிபதியும், முஸ்லம் அமைச்சர்களும் இப்பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை இப்போது அப்பட்டமாகவே மறுத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
ReplyDeleteஇந்நிலையில் வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு இவர்களால் தேர்தல் மேடைகளில் வழங்கப்பட்டு வருகின்ற வாக்குறுதிகளுக்கு என்ன உத்தரவாதம்?
குறைந்த பட்சம் வட மகாண முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து த.தே.கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவாறான ஒரு உத்தியோகபூர்வ தேர்தல் அறிக்கையினையாவது ஆளுந்தரப்பு இது வரையில் வெளியிட்டு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பேணுவது தொடர்பாக உத்தரவாதம் அளித்துள்ளதா?
இவர்கள் அரசியல் மேடைகளில் பேசுகின்ற உரிமைப் பேச்சுக்கள் எல்லாம் ஒலிபெருக்கிகள் மூலமும், ஊடகங்கள் வாயிலாகவும் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு கடைசியில் காற்றோடு காற்றாக வெறும் கைதட்டல்களோடு மங்கி மறைந்து போகக்கூடியதுதான்.
எனவே, த.தே. கூட்டமைப்பினர் போல் எழுத்து மூலம் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை உறுதிப்படுத்த வேண்டியது அரசியல்கட்சிகளினதும், மக்களின் வாக்குகளைக் கொரும் வேட்பாளர்களினதும் பொறுப்பும் கடமையாயுமாகும். அந்தக் கடமையை உரிய முறையில் செய்யாமல் தொண்டை கிழிக் கத்துவதில் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் மீறப்படும் பட்சத்தில் குறத்த கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பவும் முடியம் என்பதை வாக்காளர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-