Header Ads



அமெரிக்காவுக்கு நட்புக்கரம் நீட்டுகிறது ஈரான்..!

(IDN)  ‘எங்களுக்கு எங்கள் மக்களின் அமைதி தான் முக்கியம்; போர் அல்ல... மத்திய கிழக்கு நாடுகளின் ஒற்றுமை தான் முக்கியம்; மோதல் அல்ல...’ என்று ஈரான் புது அதிபர் ஹசன் ரோஹானி சொன்ன சில நிமிடங்களில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் மகிழ்ச்சி ரேகை பரவ ஆரம்பித்தது. ஆம், அமெரிக்கா , ஈரான் இடையே இருந்து வரும் நாற்பதாண்டு பகை ஓயுமா? நமக்கும் பிரச்னை தீருமா? என்று  ஏங்கிய நாடுகளுக்கு இப்போது நிம்மதி பெருமூச்சுக்கு வழி பிறக்கப் போகிறது.

கடந்த ஜூன் மாதம் ஈரானில் அதிபர் தேர்தல் நடந்தது. பல ஆண்டாக வெறுப்பு ஒன்றையே கண்டு வந்த ஈரானுக்கு, இப்படி ஒரு பாதை இருக்கிறது; சமாதானம் எதையும் சாதிக்கும் என்று அந்த தேர்தலில் தான் மக்கள் மூலம் தெரிந்தது. சமாதானம், அமைதியை விரும்பிய மக்கள் தங்களுக்கு பிற்போக்குவாத தலைவர் அதிபராக தேவையில்லை என்று முடிவு கட்டினர். விளைவு, மிதவாத தலைவர், பிஎச்டி ஆராய்ச்சி பட்டம் பெற்ற ரோஹானி புதிய அதிபரானார்.

சமீபத்தில் அமெரிக்காவின் என்பிசி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி, உலகையே, குறிப்பாக அமெரிக்காவை திடுக்கென திருப்பி பார்க்க வைத்தது. ‘எங்களுக்கு எதற்கு போர்? அமைதியும், சமாதானமும் தானே உலகத்தை வாழ வைக்கும். எங்கள் மக்கள் புதிய பார்வையை வைத்துள்ளனர். அது தான்  என் பாதையும்’ என்றாரே பார்க்கலாம்.

இந்த சேனல் பேட்டியை தொடர்ந்து, வாஷிங்டன் போஸ்ட் உட்பட சில அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தார். ‘மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட்டால் எல்லாருக்கும்தானே பலன். ஏன், சிரியாவுடன் உள்ள பிரச்னையை தீர்க்க நான் வேண்டுமானால் உதவ தயார்’ என்றாரே பார்க்கலாம்.

கடந்த 1979ம் ஆண்டு ஈரான் புரட்சிக்கு பின்தான் அமெரிக்காவுடன் ஈரான் பகை ஆரம்பித்தது. சில அமெரிக்கர்களை கடத்தி பிணைக் கைதிகளாக வைத்தது முதல் அதிபர் அயதுல்லா கொமைனி முதல் சமீபத்திய அதிபர் முகமது அகமதின்ஜாட் வரை எல்லாருமே அமெரிக்க எதிர்ப்பு ஜுவாலையை உமிழ்ந்தவர்கள் தான். ஐநா கூட்டத்தில் பேச்சு என்று வந்தாலே, ஈரான் பேச ஆரம்பித்தவுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டு தூதர்கள் வெளியேறி விடுவர். அந்த பேச்சும் பகைமைக்கு இன்னும் தூபம் போடும்.
ஆனால், வரும் செவ்வாயன்று ஐநா பொது சபை கூட்டம் நடக்கிறது.

அதில் புதிய அதிபர் ரோஹானி பேச உள்ளார். இந்த முறை கண்டிப்பாக அமெரிக்கா உட்பட  எந்த பணக்கார நாட்டு பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள்.  ஏன், புதிய அத்தியாயத்தை ஈரான் ஏற்படுத்தும் என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் உட்பட மீடியாக்கள் இப்போதே கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.

ஈரான்  அதிபர் ரோஹானியின் ஐநா பேச்சு, அமெரிக்கா , ஈரான் இடையே இருந்து வரும் நாற்பதாண்டு பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.  ‘நான் ஐநா சபையில் பேசப் போகிறேன். என்னை எந்த நோக்கத்துக்காக ஈரான் மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ,

அந்த நோக்கத்தை என் சக நாட்டு தலைவர்களும் புரிந்து கொண்டு அந்த பலனை ஏற்படுத்த  முன்வருவர் என்று எதிர்பார்க்கிறேன். திடமான, கட்டுக்கோப்பான பேச்சுக்கு ஈரான் தயாராக இருக்கிறது. நாங்கள் நட்புக்கரம் நீட்டி விட்டோம். நீங்கள் தான் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று வாஷிங்டன் போஸ்ட் பேட்டியில் அவர் கூறியிருந்தது அமெரிக்க அதிபர் ஒபாமா வரை ஒரு புதிய வடிகால் பாதையை ஏற்படுத்தி விட்டதாகவே தெரிகிறது.

வெள்ளை மாளிகை அதிகாரி ஜே கார்னி நேற்று கூறுகையில், ‘இது சாத்தியமானது தான்; கண்டிப்பாக நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்போதுமே சாத்தியமாகத்தான் இருந்தது; இப்போது புதிய பாதை கிடைத் துள்ளது’ என்று பட்டும்படாமல் கூறினார்.

எக்ஸ்ட்ரா தகவல்

அதிபர் ரோஹானி மேற்கத்திய நாடுகளுடன் 16 ஆண்டு,  ஈரான்  அணு ஆயுதம் குறித்து பேச்சு நடத்தி, ‘ டிப்ளமேட் ஷேக் ’ என்று  செல்லமாக அழைக்கப்பட்டவர். மிதவாத தலைவர் கையில் ஆட்சி போவது இதுவே முதன் முறை.

1 comment:

  1. இதுதான் இந்த வழிகெட்ட ஷீஆக்களின் உண்மையான முகம், இவ்வளவு காலமும் நம்மை எல்லாம் சும்மா அமெரிக்காவுடன் பகை என்று ஏமாற்றிக்கொண்டு இருந்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.