ஆட்சியாளர்களால் எங்களை ஜீரணிக்க முடியாதுள்ளது - ரவூப் ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியமான போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாது ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களில் அக்கறையற்று இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கையை தேர்தல் முடிவடைந்ததும் கட்சி முன்னெடுக்கும் என்றும் அதன் மூலம் கட்சி புடம்போடப்படும் என்றும் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இப்பொழுது பிரதான கட்சிகள் இரண்டும் தமது கட்சிக்கு எதிரிகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் முன்னாள் அமைச்சர் எம் எச் எம் அஷரப் நிகழ்வு திங்கட் கிழமை (16) இரவு புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் நடைபெற்றபோது உரையை நிகழ்த்திய போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார். புத்தளம் மற்றும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் உட்பட நாடெங்கிலுமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திரண்டு வருகை தந்திருந்த தினக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து சிறப்புரையாற்றும்போது மேலும் குநிப்பிட்டதாவது,
மறைந்த நமது தலைவர் வாழ்ந்த யுகத்துக்கும் இன்று நாங்கள் முகங்கொடுக்கின்ற இந்த வித்தியாசமான யுகத்துக்கும் அடையிலான வித்தியாசமான மாற்றங்களைத் திரும்பிப்பார்த்தால் எவ்வாறு அக்கால இடைவெளியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு ஏற்ற வகையில் எங்களை நெறிப்படுத்திக் கொள்ளலாம் எனச் சிந்திப்பது சிறப்பாக இருக்கும். தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் மறைந்த எம் பெரும் தலைவரின் நினைவுகளை இரை மீட்டிக்கொண்டிருக்கின்றோம்.
பன்னிரண்டு வருட இயங்குகின்ற அரசியலில் அவர் படைத்த சாதனைகளை ஆறுவருட கால எதிர்க்கட்சி அரசியல், ஆறு வருட கால ஆளும் கட்சி அரசியல் என்ற குறுகிய காலப் பரப்பில் அவர் விட்டுச் சென்ற படிப்பினைகள் ஏராளம். அவைபற்றி பலர் இங்கு எடுத்துக் கூறியிருந்தார்கள்.என்டைய பார்வையில் மறைந்த தலைவர் மாபெரும் தலைவர் ஒரு ஜனாதிபதிக்கான வெற்றியை எதிர்க்கட்சியிலிருந்து பெற்றுக் கொடுத்தார். அதன் பிறகு இன்னும் ஒரு ஜனாதிபதியை ஆக்கும் பணியை ஆளும் கட்சியில் இருந்து கொண்டு சாதித்தார்.
தலைவரின் மறைவுக்குப் பிறகு ஜனாதிபதி ஒருவரை ஆக்கும் பணியில் நாம் தோல்வியையே அடைந்திருக்கின்றோம். இந்த வித்தியாசம்தான் இன்று நாம் எதிர்நோக்குகின்ற வியாதிகளுக்கெல்லாம் காரணமாகும். என்னைப் பொறுத்தவரை இன்று நாங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு எங்களது உறுதியான கொள்கைப் பிடிப்புத்தான் இன்றைய ஆட்சியாளர்களை எங்களை எதிரியாகப் பார்க்க வைக்கின்றது. எங்களது அடிப்படைச் சித்தாந்தங்களில் நாங்கள் சரணாகதி அரசியலில் செல்வதற்குத் தயாரில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்துதான் ஆட்சியாளர்களால் எங்களை ஜீரணிக்க முடியாதுள்ளது.
அதன் விளவாக நாங்கள் மாறி மாறி ஒவ்வொரு கட்டத்திலும் எங்களின் கட்சியின் ஊடாக அரசியல் முகவரி பெற்றவர்களை பறிகொடுத்து வருகின்றோம். இந்தத் தேர்தல் சமயத்திலும் சிலர் இந்தக் கட்சிக்குக் கழுத்தறுப்புச் செய்து விட்டு ஆளும் கட்சிக்குச் சோரம் போயிருக்கின்றார்கள். இந்த நிலைமை மறைந்த பெருந் தலைவரின் காலத்திலும் இருந்திருக்கின்றது,. அப்பொழுது நடக்காத விஷயமல்ல இது. அவரது காலத்தில் நடக்காத பல விஷயங்கள் கடந்த பதின் மூன்று ஆண்டு காலத்துள் மட்டுமே நடந்ததாகக் கூற முடியாது.
அன்று அவர் அனுபவித்த சோதனைகளையும் வேதனைகளையும் இன்னும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அவற்றில் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. ஏன்றாலும் அவரிடம் காணபபட்ட விடயங்களை ஒன்றிணைக்கின்ற தீவிரப் போக்கு எங்களிடம் ஓரளவு குன்றிப் போயுள்ளதாக அடையாளம் காண்கின்றோம். ஏந்த விடயமாக இருந்தாலும் அவருடைய காலத்தில் ஒரு காரியம் நடைபெறுவதானால் குறிப்பிட்ட நிகழ்வுக்கு முன்தினம் நள்ளிரவைத் தாண்டிக் கூட ஓர் ஒத்திகை நடப்பது வழக்கம். யாருமே பிழை விட முடியாது. ஏதும் தவறுகள் ஏற்பட்டால் தலைவர் அதில் மிகவும் கண்டிப்பாக இருந்திருக்கின்றார். அவர் காட்டிச் சென்ற இவ்வாறான வழி முறையை நாங்கள் படிப்படியாக கைவிட்டு விட்டோம் என்ற கைசேதத்தில் இருக்கின்றோம்.
ஆனால் இன்று எதிர் நோக்குகின்ற பிரச்சினகளுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான மிகத் தீவிரமான இனவாதப் போக்கு தலை தூக்கியிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அவரிடம் இருந்த அசாமான்யமான தைரியம் எங்களிடம் இருந்து அற்றுப்போய்விட்டதா என மக்கள் கேட்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள். மறைந்த தலைவரின் காலத்தில் அவரது அரசியல் சாணக்கியம் தன்னை சவாலுக்கு அழைத்த யாரையும் சும்மாவிட்டுவிடாது, அதில் வெற்றிகண்டவராக இருந்தார் என்பதை நாமனைவரும் எங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய முக்கிய அம்சமாகும். இன்று அவரது பாசறையில் வளர்ந்ததாகச் சொல்பவர்கள் எத்தனைபேர் அவரின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவரைத் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் இன்று அவரது தலைமைத்துவத்தின் சிறப்பை சிலாகித்துப் பேசுகின்றனர் என்றால் அந்த மாமனிதரின் குறுகிய கால அரசியல் வாழ்வில் எதிரிகளைத்தான் அவர் சம்பாதித்திருந்தார் என்ற எண்ணப்பாட்டை தோற்றுவித்திருக்கும். அவரைத் தூற்றியவர்கள் இப்போது புகழாரம் சூட்டுகின்றனர்.
அந்தத் தலைவரின் பாசறையில் இருந்து இன்று கட்சியோடு எஞ்சியிருக்கும் போராளிகள் மறைந்த தலைவரின் அரசியலை மீண்டும் திரும்பிப் பார்க்கின்ற பொழுது - இவ்விரு காலப்பகுதிக்கும் இடையிலான வேறுபாட்டை உற்று நோக்குகின்றபோது - இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் மீது பார்வை முன்னர் எப்போதையையும்விட மேலோங்கி இருப்பதைக் காணலாம். முஸ்லிம் சமூகத்தின் மீது கட்விழ்த்து விடப்பட்டுள்;ள அநியாயங்கள், அட்டூழியங்கள் என்பன மீது சர்வதேசத்தின் அவதானம் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. மறைந்த தலைவரின் காலத்தில் இருந்ததைவிட சர்வதேசத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டிய மிகவும் இக்கட்டான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ்ச் சமூகம் கடந்த பல ஆண்டுகளாக சர்வதேசத்தில்தான் தங்கியிருக்கின்றது. அவர்கள் உள்நாட்டுச் சக்திகளை விட வெளிச் சக்திகளின்பால்தான் தங்கள் அவதானத்தைக் கூடுதலாகச் செலுத்தி இருக்கின்றனர். அதனால் வெளிச் சக்திகளின் அவதானம் தமிழ்ச் சக்திகளின்பால் கூடுதலாகத் திரும்பியுள்ளது.
வடக்கில் முதன்முறையாக அரசாங்கம் ஒரு தோல்வியைத் தழுவப்போகின்றது என்ற சூழ்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட அரசியல் தீர்மானங்களின் பெறுமானம் குறித்த ஒரு அச்சம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். தலைவரின் காலத்தில் அம்பாறையில் மூன்று ஆசனங்களைப் பெறமுடியவில்லை. ஆனால் அவரது மவைவுக்குப் பிறகு அது நடந்தேறியிருக்கின்றது. அது மட்டுமல்ல கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் மூன்று பெரும்பான்மை முஸ்லிம் தொகுதிகளையும் நாம் அமோகமாக வென்றிருக்கின்றோம். இவை இந்தக் கட்சியின் வீரியம் குன்றிப்போகவில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.
ஆயினும் இந்தக் கட்சிக்குள் இருந்து அதிகாரத்தைப் பெறுகின்றவர்கள் நெருக்கடியைக் கட்சிக்கே கொடுக்கின்ற சாபக் கேட்டை நாம் காண்கின்றோம். இது ஒவ்வொரு தேர்களின் சமயத்திலும் நாம் சந்திக்கின்றவைகள். கடந்த மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து கட்சியின் உள் முரண்பாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி கட்சியைக் கருவறுப்பதற்கான சதிகள் முடுக்கிவிட்ப்பட்டன. இவ்வாறான சதிகளுக்கு எங்களில் சிலரும் சோரம்போய் விடுகின்றனர். இவற்றில் இருந்து மீண்டுகொள்வதற்காக உள்ளூராட்சித் தேர்கலின்போது உறுதிப்பாடுகளைக் கொடுத்தவர்கள் அவற்றைச் செய்கின்றனரா என்பதை அடுத்த சில மாதங்களுள் கண்டுகொள்ள இருக்கின்றோம்.
அந்தச் சந்தர்ப்பத்தினபோதும் இதே மாதிரியான சவால்களை நாம் முகங்கொடுக்க வேண்டிவருமா என்கின்ற கேள்வி எங்கள் போராளிகள் மத்தியில் எழலாம். ஆனால் கட்சியன் கொள்கைகள், கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் என்பனவற்றோடு அதற்கு உரியவர்கள் இருக்கின்றனரா என்பதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் வரவிருக்கின்றது. அதன்போது எந்த வேறுபாடும் பாகுபாடும் இல்லாமல் நேர்மையாக தலைமை நடந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. சில பிரதேசங்களில் தலைமைத்துவப் போட்டிகள் உருவாகி ஆளுக்கு ஆள் முரண்பட்டுக் கொண்டாலும் போராளிகள் தங்களுக்கு விருப்பமான சிலருக்கு விசுவாசமாக நடந்து கொண்டாலும் அவர்கள் கொள்கையில் மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளனர்.
இந்தக்கடசியைப் பலவீனப்படுத்துவதற்கு அரசு எந்த முயற்சியை எடுத்தாலும், அதனை முறியடிக்கக் கூடிய சக்தி இந்த இயக்கத்துக்கு இருக்கின்றது என்பதில் எல்லோரும் நம்பிக்கை கொள்ள வேண்டும். வடக்கில் தழிழ்ச் சகோதர சமூகம் தனது சமூகத்தின் மீத காட்டும் அதே ஈடுபாட்டை முஸ்லிம்களும் தங்கள் சமூகத்'தின் மீது வெளிக்காட்டப் போகின்றதா என்பது பற்றி மிகவும் உன்னிப்பாக நோக்கப்படுகின்றது. கட்சிக்கு எதிரான பல சதிகளை எமது மக்கள் முறியடித்துக்காட்டிய வரலாறுகள் ஏராளம்.
என்னை பொறுத்த வரையில் எங்கள் மத்தியில் ஒற்றுமையை நிலை நாட்டுவதன் மூலம்தான் இந்தச் சதிகளை மேலும் மேலும் நாம் முறியடிக்க முடியும். சதிகளை முறியடிப்பதற்கு கட்சியின் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் செய்கின்ற பங்களிப்புக்களை விடவும் தலைமை சோர்வடைகின்றபோதும் போராளிகள்தான் தலைமையை உற்சாகப்படுத்துகின்றனர். ஏங்கள் ஆதங்கங்களை நாம் பிரச்சாரமாக முன்கொண்டு செல்லுகின்றபோது இந்தக் கட்சியைப் பாதுகாத்தாக வேண்டும் என்ற உணர்வு நம்மக்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் பதவியில் இருப்பவர்கள் தமது பதவிகளில்தான் கண்ணாக இருக்கின்றார்களே தவிர போராளிகளின் உணர்வுகளைப் பற்றிச் சரிவரசந் சிந்திக்காது சோரம்போகின்ற நிலைமை அடிக்கடி ஏற்பட்டாலும் அவ்வாறு சோரம்போகின்றவர்களால் கட்சியின் வீரியம் குன்றிப் போக மாட்டாது.
எந்தச் சதியாக இருந்தாலும் சரி இன்று அரசாங்கத்துக்குள் முஸ்லிம் காங்கிரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதன் உண்மையான அரசியல் செல்வாக்கை குன்றச் செய்ய வேண்டும் என எடுக்கப்படும் முயற்சியின் பின்னணியில் அதிகாரப்போட்டிதான் காரணம். குட்சியில் பதவியில் இருப்பவாகள் தங்கள் அதிகாரத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்கின்ற சதிகார வேலைகள் என்னைப் பொறுத்த மட்டில் போராளிகளால் உன்னிப்பாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த கட்சி ஒரு நாடகமேடை போன்று போராளிகளால் பார்க்கப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் சிலர் சொல்வதைப்போல கட்சித் தலைமைத்துவத்துடனான முரண்பாடுகள் எல்லாம்வெறும் நாடகம் என்பதான ஒரு மாயையைத் தோற்றுவிக்கினறது. ஆனால் உண்மை அதுவல்ல என்பது போராளிகளுக்குத் தெரியும். ஆனால் அந்தஸ்துக்கான போட்டி, அதிகாரத்தக்கான போட்டி என்பன இந்தக் கட்சியை அழித்து விடுமோ என்ற அச்சம் இன்று போராளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து கட்சியைப் பாதுகாக்கும் பணியை பொராளிகள்தான் செய்ய வேண்டும் என்று தலைமை எதிர்பார்க்கின்றது.
ஏதாவது பொருத்தம் கொடுக்கப்பட்டால் அது நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இன்றும் கூட இந்தத் தேர்தல் பிரசார வேலைகள் தொடர்பில் கட்சியில் இருந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆகக் குறைந்த பொறுப்புக்கள் கூட தட்டிக்களிக்கப்பட்டுள்ளன. இது சம்மந்தமாக ஏதும் சாக்குப் போக்குகளைக் கூட சொல்லலாம். ஆனால் அதில் மிகுந்த அலட்சியப் போக்கோடு நடந்து கொண்ட பலர் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி மறைந்த தலைவரின் நினைவு நாளில் நான் மிகவும் வேதனையோடு பேச வேண்டிய நிலையில் இருக்கின்றேன். வெறும் சாட்டுக்காக - இந்தத் தேர்தலை நாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில், இரண்டு பிரதான கட்சிகளும் எங்களை எதிரிகளாக நோக்குகின்ற நிலையில் அவர்கள் பொடுபோக்காக நடந்து கொள்வது கண்டிக்கவும் தண்டிக்கவும் தக்கது.
முன்னர் ஒரு பிரதான கட்சி நேச சக்தியாக இருந்தது. இப்போது இரு கட்சிகளும் எதிரிகளாக மாறியிருக்கும் சூழ்நிலையில் இந்தக் கட்சியின் வீரியமான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாது தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களில் அறவே அக்கறையற்று இருப்பவர்கள் விஷயத்தில் போராயிகள் மிகக் கவனமாக அருக்க வேண்டும். அவர்கள் மீதான கடும் நடவடிக்கையை இக்கட்சி தேர்தல் முடிவடைந்த கையோடு முன்னெடுக்கும். அதனூடாக இக்கட்சி புடம்போடப்படும். ஒரு புதிய யுகத்துள் கட்சி பிரவேசித்திருக்கும் பொழுது மறைந்த எமது மாபெருந் தலைவருக்குச் செலுத்துகின்ற மிகப் பெரிய நன்றிக் கடனாக அதுவாகத்தன் இருக்கும். கட்சியின் கட்டமைப்பில் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் தருணமாக இதனை ஆக்கிக் கொள்வோம் என்றார்.
Post a Comment