Header Ads



சோமாலியாவில் பாராளுமன்றம் அருகே குண்டு வெடிப்பு

ஆப்பிரிக்க நாடான சோமாலியா ஒரு புறம் வறுமையில் வாடினாலும் மறுபுறம் முஸ்லிம் போராளிகளின் தாக்குதலால் சிதறுண்டு கிடக்கிறது. இந்நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் பாராளுமன்றம் அருகே அமைந்துள்ள ஒரு பிரபல கிராம உணவு விடுதியில் இன்று மதியம் மிகப்பெரிய குண்டு ஒன்று வெடித்தது.

இதில் உணவு விடுதியின் கூரை இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். பாராளுமன்றம் அருகே அமைந்துள்ள இந்த உணவு விடுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என நிறைய பேர் தினந்தோறும் உணவருந்த வருவது வழக்கமாகும். குறிப்பாக பத்திரிக்கையாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த உணவு விடுதிக்குள் முதலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் இதை பார்க்க மக்கள் கூட்டம் கூடியபோது வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டு ஒன்று வெடித்தது என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர். இருந்தும் இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. முன்பு இதே இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

1991-ம் ஆண்டு அதிபராக இருந்த சையத் பார்ரே பதவியில் இருந்து தூக்கிவீசப்பட்டார். அதனையடுத்து அவரது வாரிசுகள் தலைமையில் தொடர்ந்து அரசுக்கு எதிராக ஒரு புறமும், அல் ஷபாப் போன்ற முஸ்லிம் போராளிகள் இயக்கம் ஒரு புறமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இயக்கம் சோமாலியாவின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் ஆளுமை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.