குறை கூவி, நிறை காணும் நம் சமூகம்...!
(Zuhair Ali (Ghafoori - UoC)
பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, சிறு,சிறு தவறுகளை குறை கூறி நிறை கண்டு எம் முஸ்லிம் சமூகத்தை பின்தள்ள முயற்சிக்கும் ஒரு கதவு என்று கூட சொல்லலாம்.
பொதுவாக எம்மிடத்தில் ஒரு அற்ப விடயத்தை எடுத்தாலும் சரி ஏதேனும் ஒரு குறை கூறியே நிறை காண்பவர்கள் எம்மில் அதிகம். அது இன்று அரசியல் ரீதியான, கொள்கைரீதியான இன்னும் பல சமூக ரீதியான குறைகளாக இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அது உண்மைதான், தனி மனித குறை கூவல் இன்று சமூக குறைகளாக மாற்றி ஒரு சமூகத்தையே அளிப்பதற்கும், அம்பலப்படுத்தும் பழக்க, வழக்கில் எடுத்துக்கொண்டனர்.
‘’குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.’’(அல் குர்ஆன் 104:1)-என்றெல்லாம் இஸ்லாம் அழகுற எடுத்துச் சொன்னாலும் நமக்குள் குறை கூவி நிறை காணும் வியாதி ஆளப்பதிந்தே இருக்கின்றது.
சில வேளைகளில், சில சம்பவங்களும் சில வார்த்தைகளும், நம்முடைய வாழ்க்கையே திசை திருப்பிவிடக்கூடியவை நம்மை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் சந்தனங்களையும் சகதிகளையும் நமது உடலிலும் முகத்திலும் பூசிவிட்டுத்தான் செல்கிறார்கள். அப்போது நமது உண்மைத்தோற்றம் வெளிப்பட வாய்ப்பே இல்லை,இந்நிலையில் சந்தனமும் சகதியும் ஒன்றுதான்.
தன்னை உணர்ந்த ஒருவனால்தான், மற்றவர்களின் உணர்வுகளையும் உணர முடியும். தன்னை புரிந்து கொண்டவனால்தான், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். ஒருவனுக்கு, அவனுக்கு வெளியில் இருக்கும் உலகை விட உள்ளே இருக்கும் உலகம் மிகப்பெரியது. அதைத்தான் சுயம் என்பது. அவனது சுயத்தை அவன் அங்குதான் உணர முடியும்
. வெளி உலகில் இருந்து வரும் சில புகழ்ச்சிகளும், இகழ்ச்சிகளும் நமது உள் உலகை காண விடாமல் தடுத்துவிடுகிறது. நமக்கு வெளியில் நிகழும் சம்பவங்களையும் வார்த்தைகளையும் நம்மால் தடுக்க முடியாது,புகழ்ச்சி என்பது வேறு. உற்சாகப்படுத்துதல், பாராட்டுதல் என்பது வேறு.இகழ்ச்சி என்பது வேறு, தவறை உணரசெய்தல் என்பது வேறு. குறை கூறல் என்பது வேறு, தவறை சுட்டிக்காட்டுதல் என்பது வேறு. நம்மை நோக்கி வருபனவை இவற்றில் எவை, என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்வது மட்டுமல்லாது, நாம் மற்றவர்களுக்கு செய்பவை மேற்கண்டவற்றில் எவை, என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.? (விவேகானந்தர்) தவறு,பிழை,குறை மனித வாழ்வில் இல்லாமலில்லை என்றாலும் நாம் முடியுமான அளவு அவற்றை தவிர்த்துக் கொண்டால் நமக்குள் இருக்கும் சொற்ப பிரச்சினைகளை இலகுவாகவும்,விவேகமாகவும் தீர்த்துக் கொள்ள வாய்ப்புண்டு.
இங்கு ஒரு தத்துவக் கதை ஒன்றை சொன்னால் பொருத்தம் என்ற எண்னத்துடன் ‘’ சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?" வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார்.
"ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?" அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...." "நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?" "அதில்லை..." "இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?" "இல்லை" "இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?" "அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.
"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்’’.
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா..?
சமகால அரசியல்,கொள்கை,கோட்பாடு,பிளவு போன்ற இன்னோரன்ன வேண்டாத வியாதிகளை பாம்பு சட்டை மாற்றிக் கொள்வது போல் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு காலத்தில் இருக்கின்றோம்..! ஆக,ஒரு சமூகம் விடியலையும்,வினோதத்தையும் நோக்கிச் செல்ல வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனியாக சிந்திக்க வேண்டும் அப்போதுதான் நமக்கான தனித்துவத்தை வென்றடுக்கலாம் ''உன் உள்ளம் திருந்தாத வரை சமூகம் திருந்தாது'' என்ற பொன் மொழி உறுதிப் படுத்தும்.. ’ ‘
‘உன்னை திருத்து உலகம் தானாக திருந்தும் ‘ஆதலால் நிறை கூறி குறைகளை வீசி விடுவோம் நம் சமூக ஒற்றுமைக்காகவேனும்..!
Post a Comment