Header Ads



கண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் விருப்புவாக்குகளையே மீள எண்ண கோரிக்கை

(Tm) மாகாண சபை தேர்தலுக்கான விருப்பு வாக்குகளை மீள  எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் விருப்புவாக்குகளையே மீள எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட எம்எஸ்.ஜவாஹிர் சாலி, எப்.எம்.முபாறக், ஐ.ஐனுதீன், ஜே.எம்.முஹார்ஸ், எச்.எம்.எம்.யாசீன், எம்.எப்.எப்.பாரிசா, எம்.பி.றமீஸ், எம்.யு.அனீஸ்தீன் மற்றும் எம்.ஏ.எம்.றசான் ஆகிய ஒன்பது வேட்பாளர்களினாலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலிக்கு குறித்த ஒன்பது வேட்பாளர்கள் கையொப்பமிட்டு கடிதமொன்றை நேற்று புதன்கிழமை அனுப்பிவைத்துள்ளதாக வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.ஜவாஹிர் சாலி தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கண்டி மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது. இதற்கமைய அக்கட்சி சார்பாக முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் தெரிவானார்.

இந்த நிலையிலேயே இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தேர்தல் வாக்கெண்ணும் நிலையத்தில் முடிவுகளை அறிக்கும் இடத்திற்கு ஒரு கட்சிக்கு இரண்டு முகவர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். குறித்த அனுமதி அட்டையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கண்டி மாவட்ட தலைமை வேட்பாளர் தனக்கும் தனது நெருங்கிய ஆதரவாளர் ஒருவருக்கும் பெற்றிருந்தார்.

இந்த விடயம் தேர்தல் தினத்திற்கு முதலன்றான வெள்ளிக்கிழமையே எமக்கு தெரியவந்தது. கட்சியின் நடு நிலையாளர்கள் இருவரை வாக்கெண்ணும் நிலையத்தில் முடிவுகளை அறிக்கும் இடத்திற்கு செல்வதற்கு அனுமதியினை பெற்றுக் கொடுக்குமாறும் தலைமை வேட்பாளரையோ அல்லது அவரின் நெருங்கிய ஆதரவாளரையோ செல்வதற்கு கட்சி அனுமதிக்க கூடாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமா ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்திருந்தோம்.

இதற்கான அனுமதியினை கட்சியின் நடுநிலையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்காவிட்டால் தேர்தலில் இருந்து வாபஸ் பெறுவோம் எனவும் தலைவரிடம் கூறினோம். கட்சியின் செயலாளர் ஹசன் அலியை அந்த இடத்திற்கு அனுப்பி அதற்கான அனுமதியினை இரண்டு பேருக்கு பெற்றுத்தருவேன் என தலைவர் வாக்குறுதி அளித்தார்.

இதனையடுத்து தொடர்ந்து தேர்தலில் வேலை செய்தோம். எனினும் அந்த வாக்குறுதி வாக்கெண்ணும் நிலையத்தில் இடம்பெறவில்லை.விருப்பு வாக்கின் முடிவுகளில் எமக்கு பாரிய சந்தேகமுள்ளதால் உடனடியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸல் போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை மீள எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்" என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.