Header Ads



ஒருசிலரின் செயற்பாட்டால் முஸ்லிம் சமூகம் தலைகுனிய வேண்டிய நிலை - என்.எம். அமீன்

போதை பொருட்களைக் கடத்துதல் போன்ற இஸ்லாம் வெறுக்கின்ற நடவடிக்கைகளீடுபடும் ஒரு சில முஸ்லிம்களின் செயற்பாட்டினால் முஸ்லிம் சமூகத்துக்கு தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் கூறினார்.

தம்பதெனிய பனாவிட முஸ்லிம் கிராமத்தில் சஜியா ஊடக வலையமைப்பு அஹதியா பாடசாலையுடன் இணைந்து நடத்திய ரமழான் வினாவிடைப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சஜியா ஊடக வலையமைப்பின் தலைவர் பதுர்தீன் சகில் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து பேசிய அல்ஹாஜ் அமீன் கூறியதாவது, 

அண்மையில் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஆகக்கூடுதலான போதைப்பொருட்கள் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் பக்கம் விரல் நீட்டப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலில் எடுபிடிகளாக ஓரிரு முஸ்லிம்கள் இருந்துள்ளனர். இந்தப் பாரிய மோசடியில் சில பின்னணிகள் இயங்கிய போதும் முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டைப் போட முற்படுகின்றனர். கடும் போக்கு பௌத்த அமைப்பொன்று முஸ்லிம் சமூகம் தொடர்பாக அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி ஊடகவியலாளர்கள் மகாநாடொன்றை நடத்தியது. இவர்களது குற்றச்சாட்டுக்களை கேட்ட போது எனக்கு மெய் சிலிர்த்தது. இஸ்லாம் அங்கீகரிக்காத, இஸ்லாம் வெறுக்கின்ற இது போன்ற செயற்பாடுகளில் சம்பந்தப்பட்ட ஒரு சில முஸ்லிம்கள் முழுச் சமூகத்தையுமே காட்டிக் கொடுக்கிறார்கள்.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஏனைய சமூகத்தவர்களோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள். எனக்கு முன் பேசிய ததவ விஹாராதிபதி சோபித தேரர் தெரிவித்த தகவலின்படி இந்தக் கிராமத்தின் பெயர்கூட தம்பதெனிய மன்னருக்கு சீப்புக்களை வழங்கியதன் காரணமாக பனாவிட என்ற பெயர் வந்தது. இவ்வாறு எமது மூதாதையர்கள் கட்டி எழுப்பிய தொடர்பினைச் சீர்குலைக்க சில சக்திகள் கங்கனங்கட்டி செயற்பட்டு வருகின்றன. இந்த சதிகளில் சிக்காது பெரும்பான்மை சமூகத்துடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணிக் காக்கும் வகையில் எம்மவர்களது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

முஸ்லிம் சமூகம் தனித்து போகின்றது என்ற ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. இந்தக் குற்றசாட்டில் உண்மை இருக்கின்றதா? எமது செயற்பாடுகளில் ஏதும் தவறுகள் இருக்கின்றதா என நாம் மீளாய்வு செய்து பார்க்க வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் மத்தியில் பாரிய பொறுப்புள்ளது.

உயர் கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எம்.வை.எம். நவவி, முன்னாள் கல்வி அதிகாரியும் அஹதியாவின் பரீட்சை ஆணையாளருமான அல்ஹாஜ் செயினுல் ஆப்தீன் பிரதேச விஹாராதிபதி சோபித தேரர் உட்பட பலர் இங்குரையாற்றினர்.

1 comment:

  1. குற்றம் எல்லோரும் செய்யக்கூடியதுதான் அதை நாம் எல்லோரும் எதிர்க்கின்றோம் வெறுக்கின்றோம்.

    தற்போது இலங்கையில் முஸ்லிம்கள் அந்தளவு பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுபோன்ற காரியங்களை செய்பவர்களை சட்டம் தண்டிக்கவேண்டும் என்பதுதான் எமது எண்ணம். இருப்பினும் ஏனையவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது முஸ்லிம்கள் அந்தளவு குற்றச்செயல்களில் ஈடுபடுவதில்லை என்பதனால் பழியைக்கூட எம்மால் சுமந்து கொள்ள முடியவில்லை. அதேவேளை பெரும்பன்மை இனத்திலுள்ள பயங்கரவாதிகள் பலர் பாரியளவில் சகலவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றார்கள் அதை நாம் ஒரு போதும் சுட்டிக்காட்ட விரும்பமாட்டோம் ஆனாலும் எம் ஒழுக்கத்தின் மீதும் முஸ்லிம்களின் நன்னடத்தையில் பொறாமை கொண்டவர்கள் பொறுக்கமுடியாமல் நம்மீது வீண்பழிகளைச்சுமத்துவது எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னவோ நாட்டிலுள்ள ஆட்சி மாறும் வரைக்கும் இதுபோன்ற குழறுபடிகளும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும் ஏதோ சமாளிப்போம், அல்லாஹ்விடம் துஆச்செய்வோம், எமது பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும்.

    ReplyDelete

Powered by Blogger.