உடுநுவரயில் இரு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை
(அஸ்-ஸாதிக்)
உடுநுவர பகுதியில் நேற்றிரவு 27.09.2013 இரு பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு பதின்மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா ரொக்கப் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
எலமல்தெனிய மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தெல்லங்கை மஸ்ஜிதுல் லாஹ்லா பள்ளிவாசல் என்பவற்றிலேயே இக்கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ் பள்ளிவாசல்களுக்கும் இடையிலான தூரம் ஒன்றரைக் கிலோ மீற்றர் எனபதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சம்பவம் நேற்றிரவு இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசலில் புகுந்த கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காட்டி பதின்மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்.
பள்ளிவாசலின் வாசலினை உடைத்துக் கொண்டு பள்ளிவாசலில் உட்புகுந்த கொள்ளையர்கள் பள்ளிவாசலின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர். இப்பள்ளிவாசலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்ததும் அடகு கடன் முறைமையின் கீழ் வைக்கப்பட்டிருநததுமான பொதுமக்களின் நகைகள் மற்றும் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரொக்கப் பணம் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நகைகளில் சுமார் 25 பவுண் பெறுமதியான தங்க மாலைகள் , வளையல்கள் உட்பட ஆபரணங்கள் என்பனவும் அடங்கியிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
மேலும் நேற்றிரவு தெல்லங்கை மஸ்ஜிதுல் லாஹ்லா பள்ளிவாசலில் யன்னலை உடைத்துக் கொண்டு புகுந்த கொள்ளையர்கள் பள்ளிவாசல் உண்டியலை உடைத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தவுலகல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் பொலிசார் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகள் தவுலகல பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன துவேசம் ஒருபக்கமிருக்க நாட்டில் பொதுவாக தலைவிரித்தாடும் பஞ்சம் பட்டினியும் ஒரு மிகப்பெரும் காரணி, இப்படியான ஈனச்செயல்களுக்கு.ஆட்சியை மாற்றியமையுங்கள், எல்லாமே சரியாகிவிடும்.
ReplyDeleteபள்ளிவாசலில் அடகு வைத்து மக்கள் பணம் பெறுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யமாயுள்ளது இது பள்ளியள்ள வங்கி கோவில்கள் போல சாமிக்கு நகை போடுகிறார்களா.
ReplyDeleteஅண்மைக்காலமாக இவ்வாறான செய்திகளை அடிக்கடி கேட்கக்கூடியதாக இருக்கிறது, பொதுமக்களின் சொத்துக்களை பதுகாப்பவர்களின் (ட்ரஸ்டிகளின்) கவனக்குறைவுதான் இவ்வாறான சம்பவங்களுக்கு காரணம், பல லட்சாதிபதிகள் வாழும் இவ்வூரில் தங்களின் வீடுகளுக்கு காவல்காரன் என்றும், CCTV கமரா என்றும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தியவர்கள் பள்ளிவாசல் விடயத்தில் பாராமுகமாக இருந்ததின் விளைவுதான் இது. இதனை ஒரு படிப்பினையாக எடுத்து, நாட்டில் உள்ள அணைத்து பள்ளிவாசல்களிலும் CCTV கமரா மற்றும் ALARM சிஸ்டம்களை நிறுவி அல்லது காவலுக்கு ஆட்களை நியமித்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும், நாட்டில் தற்போதைய நிலையில் பொலிசாரைநம்பி பிரயோசனமில்லை
ReplyDelete