தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும், முஸ்லிம் விவகாரமும்
ஆயுதப்படைகள் இராணுவ சாதனங்கள் மற்றும்
உயர்பாதுகாப்பு வலயங்கள் ஆகியவற்றை வடக்கு கிழக்கிலிருந்து அகற்றுவதன் மூலம்1983
இல் நிலவிய யுத்தத்திற்கு முந்திய சூழ்நிலை மீண்டும் ஏற்படும் வகையில் செயற்படப்
போவதாக கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினில் தெரிவித்துள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை
இன்று செவ்வாய்க்கிழமை யாழ்நகரின் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி
அலுவலகத்தினில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேசிய பிரச்சனையின் தீர்வுக்கு மிக முக்கியமானதென
த.தே.கூ கருதுகின்ற கோட்பாடுகளும் விசேட அரசியலமைப்பு ஏற்பாடுகளும் பிரதானமாக இத்
தீவில் வாழுகின்ற மக்களின் மத்தியில் பகிரப்பட்டதொரு இறையான்மையின் மூலம் ஆட்சி
அதிகாரங்களை பகிர்வது தொடர்பானதாகும். உண்மையான நல்லிணக்கத்தையும் நீடித்து
நிலைக்கக்கூடிய சமாதானத்தையும் இலங்கை மக்கள் அனைவருக்குமான அபிவிருத்தியையும்
எய்துவதற்கு அதிகாரப் பகிர்வின் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடிப்படையாக
அமைகின்றன.
• தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க
தேசியமாகும் என்பதோடு சிங்கள மக்களோடும் ஏனையவர்களுடனும் சேர்ந்து இலங்கைத் தீவில்
வாழ்ந்தும் வந்துள்ளனர்.
• புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும்
தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதுமான ; வடக்கு கிழக்கு
மாகாணங்களே; தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும்.
• தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கு
உரித்துடையவர்களாவர்.
• தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்றுக்
கொள்ளக்கூடிய ஒரு முறையில், சமஷ்டி கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த
வடக்கு கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட
வேண்டும்.
• அதிகார பரவலாக்கமானது காணி, சட்டம் ஒழுங்கு,
சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி
அதிகாரங்கள் ஆகியவற்றின் மீதானவையாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்கள்
1996 ஆம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில்
வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுpகளில் பாரம்பரிய குடிகளாக இருந்துள்ளனர்.
அவர்கள் தமது சொத்துக்களைக் கைவிட்டு, நாட்டின் ஏனைய பாகங்களுக்குச் சென்று
சொல்லொனாத் துன்பங்கள் அனுபவிக்க நிர்பந்திக்கப்பட்டமை வருந்தத் தக்கதாகும்.
வட மாகாணத்திலிருந்து வெளியேறிய அனைத்து
முஸ்லிம்களும் இயன்றவரை விரைவாக தத்தமது பகுதிகளுக்கு திரும்பிச் சென்று தமது
வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் நாம் பற்றுறுதி
கொண்டுள்ளோம். அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவதோடு, தமது
வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு
வழங்கும்.
முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப்
பிரச்சனைக்கும் வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சனைகளுக்கு
வழங்கப்படும் அதேயளவு கவனிப்பு வழங்கப்படும். இம் மாகாணத்தில் வாழும் அனைத்து
சமூகத்தவருக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான கவனிப்பு கிடைக்கப்பெறுவதை இம் மாகாண
நிர்வாகம் உறுதி செய்யும்.
சர்வதேச ஈடுபாட்டின் வாயிலாக அடையப்பெற்ற
குறைந்தபட்ச முன்னேற்றத்தையும் இல்லாமல் செய்ய இலங்கை அரசு தற்போது முயன்று
வருகிறது. இது, இலங்கையில் தமிழர்கள் ஒரு மக்கள் கூட்டமாக இருப்பதை இல்லாமல்
செய்வதற்கே இட்டுச் செல்லும். இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களுக்குமான நீதியும்
நிரந்தர சமாதானத்தின் மூலம் அடையப்பெறும் உண்மையான நல்லிணக்கமும் சர்வதேச
அனுசரணையின் கீழேயே அடையப் பெறலாம் என்ற உறுதியான கருத்தை ததேகூ கொண்டுள்ளது.
முடிவுரை
ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமக்கேயுரிய
தனித்துவத்தை பேணுகின்ற அதேவேளை, எமது மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பப்பட
வேண்டும். ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமது அரசியல் உரிமைகளையும் நாம்
மீட்டெடுக்க வேண்டும். எனவே, இலங்கைத் தமிழரசரசு கட்சி என்ற பெயரின் கீழ் அதன்
வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து இத்
தேர்தலில் தமது உறுதியை எடுத்துக்காட்ட தைரியத்துடன் எழுந்து நிற்குமாறு தமிழ்
பேசும் மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
Post a Comment