Header Ads



”அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கோர் பகிரங்கக் கடிதம்”

வடமாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்கின்ற நிலையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிஸியாக இருப்பீர்கள் என்று எமக்குத் தெரியும். இருந்தாலும் எங்களைப் போன்ற சாதாரண பொது மக்கள் உங்களிடம் சொல்ல வேண்டிய சில கருத்துக்களை சொல்வதற்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பமும் இல்லை.

ஏனெனில் அரசியல் வாதிகள் என்போர் தேர்தல் காலத்தின் போது மாத்திரமே பொது மக்களின் பக்கம் தமது கண்களையும் காதுகளையும் திருப்புகின்றனர்.

இந்நாட்டில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களில் நீங்களும் ஒருவர். இருந்தாலும் மற்றைய இருவரையும் விட  நீங்களே அரசாங்கத்தில் அதிகம் செல்வாக்குள்ளவர் என்றும்  கருதப்படுகிறது.

எனவேதான் இந்நாட்டு முஸ்லிம்கள் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களிடம் இக்கடித மூலமாக சில கருத்துக்களையயும் கேள்விகளையும் பகிரங்கமாக முன்வைக்க நினைக்கிறேன்.

01.   இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு கௌரவமான தீர்வுகளைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடே SLMC  உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்பகால கொள்கைகள், அதனை வளர்ப்பதற்கு மக்கள் செய்த தியாகங்கள் என்பனவெல்லாம் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் 1994 ஆம் ஆண்டுகளில் PA கட்சியின் அமைப்பாளராக அரசியலைத் தொடங்கிய நீங்கள் சந்தர்ப்ப வசமாகவே SLMC யில் இணைந்து கொண்டீர்கள். அந்தக்கட்சியில் தொடர்ந்தும் இருந்து  அதனை சக்தி மிக்கதாக மாற்றி அதன்  மூலம் முஸ்லிம்களுக்கான  தீர்வுகளை வென்றெடுக்கப் பாடுபடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் வடமாகாண மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள். அதன் மூலமாகத்தான் நீங்கள் பாராளுமன்றம் சென்றீர்கள்.

ஆனாலும் பாராளுமன்றம் சென்று ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே உங்களை உருவாக்கிய கட்சியயை விட்டுப் பிரிந்து இன்னும் சிலரையும் கூட்டிக் கொண்டு சந்திரிகா அரசுடன் இணைந்தீர்கள். அதற்கு பரிசாக நல்ல அமைச்சுப் பதவிஒன்றையும் பெற்றுக் கொண்டீர்கள்.

SLMC முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவில்லை சுயாதீனமாக செயற்படவில்லை; பதவிகளுக்காக சோரம் போய்விட்டது; எவ்வித எழுத்து மூல ஒப்பந்தமும் இல்லாமல் அரசாங்கங்களுடன் இணைந்து தனித்துவத்தை இழந்துவிட்டது என்றெல்லாம் காரணங்களைக் கூறியே உங்களின் கட்சி தாவும் முடிவை அப்போது நியாயப்படுத்தியிருந்தீர்கள். பின்னர் தனிக்கட்சி யொன்றைத் தொடங்கி அதற்கு தலைவராகவும் மாறினீர்கள்.

இவ்வாறு நீங்கள் செய்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் SLMC யினுடைய போக்கிற்கும் உங்களது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகளுக்குமிடையில் ஏதும் வித்தியாசங்கள் இருப்பதாகவும்தெரியவில்லை.சுருக்கமாகச் சொன்னால் முஸ்லிம்களின் ஆணையைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு சேவகம் செய்து சொந்த நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் நீங்களும் அவர்களும் ஒன்றாகவே செயற்படுகின்றீர்கள்.

முஸ்லிம்களுக்காக ஒன்றுபட்டு குரல்கொடுக்கவேண்டிய விடயங்களில் மாத்திரமே முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றீர்கள்.

இந்நிலையில் SLMC செய்யத்தவறியதாக உங்களால் கூறப்பட்ட என்னயென்ன விடயங்களை நீங்களும் உங்களது அரசியல் கட்சியும் இத்தனை காலமாக நிவர்த்தி செய்திருக்கிறது என்பதனை இப்போதாவது மக்களுக்கு கூறமுடியுமா..?அத்தோடு இதுவரை காலமும் நீங்கள் இணைந்து பல தேர்தல்களிலும் உங்களால் ஆதரவு வழங்கப்பட்ட பெரும்பாண்மைக் கட்சிகளோடு முஸ்லிம்கள் சார்பாக நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எவை என்பதனை இப்போதாவதுசொல்ல முன் வருவீர்களா..?

02.   வடமாகாண மக்களின் நலன்களை வென்றெடுப்பதனை இலக்காகக் கொண்டே அரசியல் செய்வதாக நீங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றீர்கள். அம்மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஆளும் கட்சியுடன்இணைந்திருப்பதுவே ஒரேயொரு தீர்வு எனவும் கூறுகின்றீர்கள்.

மத்திய அரசாங்கத்தில் வடமாகாண மக்களுக்காகவே இணைந்திருப்பதாக நீங்கள் கூறும் வாதத்தின்படி பார்க்கும் போது வட மாகாண சபையில் TNA அரசாங்கத்திலும் நீங்கள் அங்கம் வகித்தாக வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான்வடமாகாண சபை ஆட்சியை அமைக்கப்போகிறார்கள். இருப்பினும் நீங்களோ தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகளோடு தொடர்ந்தும் முரன்பாட்டு அரசியலையே மேற்கொண்டு வருகின்றீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும்அரசாங்கதலைமைகளை சந்தோசப்படுத்தும் முகமாகவே இதனைச் செய்கின்றீர்கள் என்றும் புரிகிறது.

சில மாதங்களின் முன்பு நீங்களும் தமிழ் அரசியல் தலைமைகளை வழி நடாத்தும் கத்தோலிக்க மத குருமார்களும் ஒரே சபையில் அமர்ந்து பிரச்சினைகளைப் பேசி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என உலமாக்கள் சிலரால்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளை இறுதிக்கட்டத்தில் அதிலிருந்து நீங்கள் ஒதுங்கிக் கொண்டீர்கள்.

அது போன்றவர்களுடன் நேரில் பேசினால் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை பகைக்கவேண்டி வரும் என நீங்கள் அதற்கு காரணம் கூறியிருக்கின்றீர்கள்.

வடமாகாண முஸ்லிம் மக்களின் நலன்களுக்காகவே இத்தனை இழிவுகளுக்கு மத்தியிலும் மத்திய அரசாங்கத்தில் உங்களால் தொடர்ந்தும் அங்கம் வகித்து அதன் ஒரு பங்காளி அமைச்சராக இருக்க முடியும் என்றால் அதே மக்களுக்காகவடமாகாணத்தில் தமிழ் தரப்பு அரசாங்கத்துடன் அல்லது அவர்களது பிரதி நிதிகளுடன் ஒரு கௌரவமான பேச்சு வார்த்தையை மேற்கொள்ளவோ இணக்கப்பாட்டு அரசியல் ஒன்றையோ மேற்கொள்ள ஏன் உங்களால் முடியவில்லை?

03.   வட மாகாண மக்களின் மீள் குடியேற்றத்தில் இந்திய அரசாங்கம் வழங்கும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் மிக முக்கியமானதாகும். இந்த வீட்டுத் திட்டத்தில் வட மாகாண முஸ்லிம்களுக்குரிய பங்கு இதுவரை நியாயமானமுறையில் உறுதி செய்யப்படவில்லை. இதனையே நீங்களும் உங்களது அரசியல் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கின்றீர்கள்.

முஸ்லிம்களுக்கு உரிய பங்கு இத்திட்டத்தில் கிடைக்காமல் போனதற்கு காரணம் தமிழ் இனவாதிகளே என்றும் பிரச்சாரம் செய்ய முற்படுகின்றீர்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. இவ்வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டகாலத்தில் பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்வது என தீர்மாணிக்கப்பட்ட நிபந்தனைகளே இதற்கு காரணமாகும். உண்மை என்னவென்றால், இந்த நிபந்தனைகளை தயாரித்தது தமிழ் அரசியல் வாதிகள் அல்ல. அரசாங்கம் நியமித்தகுழுவும் இந்திய தூதரக அதிகாரிகளுமே இந்த நிபந்தனைகளை தயாரித்தனர்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம் வடமாகாண முஸ்லிம்களில் 90 வீதமானோர் இத்திட்டத்தில் வீடொன்றைப் பெறுவதற்கு தகுதி பெற தவறி விடுகின்றனர். உண்மையில் இம்மக்கள் தகுதி பெறும் வகையில்இந்நிபந்தனைகள் உருவாக்கப்பட்டிருந்தால் மிக இலகுவாகவே இவர்கள் வீடுகளைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.


நீங்கள் அங்கம் வகிக்கும் உங்கள் அரசாங்கம் வடமாகாண முஸ்லிம்கள் தகுதி இழக்கும் வகையில் இவ்வீட்டுத் திட்டத்திற்கான பயனாளி நிபந்தனைகளை தயாரித்தபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்..? இம்மக்கள் மீது உண்மையானஅக்கறை இருந்திருந்தால் இதனை நீங்கள் சரிவர அப்போது ஏன் பேசவில்லை..?

பேச வேண்டிய தருணங்களில் மௌனமாக இருந்துவிட்டு அடுத்தவர்களை குற்றம் சுமத்துவதில் என்ன பலன் இருக்கிறது? கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்தின்போது அவசர அவசரமாக ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்நீங்கள் அனுப்பியதாக செய்திகள் வந்தது. 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என அக்கடிதத்தில் வேண்டு கோள் விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. உங்கள் கடிதத்திற்கு கிடைத்தபலன் என்ன..? அதுவும் கூட தேர்தல்கால தந்திரங்களில் ஒன்றாக கொள்ளப்படலாமா..?


04. வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளை சிங்கள இனவாதிகள் அதற்கு பலமான எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த எதிர்ப்பு அணியில் நீங்களும் இணைந்து கொண்டீர்கள். வடமாகாண சபைத் தேர்தல் நடந்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் அவர்கள் காணி அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவார்கள் எனவும், அது முஸ்லிம்களின் நலன்களுக்கு பாதகமாக அமையும் எனவும் சுட்டிக் காட்டினீர்கள். ஆனால் கிழக்குமாகாண சபை அதிகாரம் தற்போது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களது பிரதிநிதி ஒருவர்தான் அங்கு முதலமைச்சராகவும் இருக்கிறார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றனவட மாகாண சபையில் எந்த காணி அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு சென்று விடும் என்று நீங்கள் அச்சப்படுகின்றீர்களோ அதேஅதிகாரம் இப்போது கிழக்கு மாகாண சபையில் உங்கள் கைகளில் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் நூற்றுக்கணக்கான காணிப்பிரச்சினைகளில் ஒன்றையாவது இதுவரை உங்களால் தீர்த்துவைக்க முடிந்திருக்கிறதா..? இதனை பகிரங்கமாக மக்களுக்கு சொல்ல முடியுமா..? உங்களைப் போன்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக அடுத்த சமூகத்தின் மீது குற்றம் சுமத்துவதுஎந்த வகையில் நியாயமானதாகும்…?


05.   இந்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கின்ற எதேர்சையதிகாரமான, சிறுபாண்மை மக்களின் உரிமைகளுக்கு மரியாதை இல்லாத அரசியல் சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு எது முக்கிய காரணம் என்பது உங்களுக்குத் தெரியும்.
 தங்களின் அரசியல் பிடிக்குள் அத்தனை பேரையும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கம்

நிறைவேற்றிய 18 ஆவது திருத்த சட்டமூலமே இதற்கான அடிப்படைக் காரணமாகும் என்பதனை நீங்களும் மறுக்கமாட்டீர்கள்.

இந்த 18ஆவது திருத்த சட்ட மூலம் காரணமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சர்வாதிகார ஜனாதிபதி முறையாக மாறியிருக்கிறது. பாராளுமன்ற பிரதிநிதிகளின் அதிகாரம் செல்லாக்காசாக மாறியிருக்கிறது. எதிர்கட்சி சிதைக்கப்பட்டிருக்கிறது. சிறுபாண்மை மக்களுக்கான கட்சிகள் சீரழிக்கப்பட்டிருக்கின்றன.

சட்டமும் ஒழுங்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மாத்திரமே பயனளிக்கும் என்ற நிலை தோன்றியிருக்கிறது. ஒரு நாட்டின் சட்டவாட்சிக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவசியமான நீதித்துறைக்கும்காவல்துறைக்கும் இருக்க வேண்டிய சுதந்திரம் நசுக்கப்பட்டிருக்கிறது. ஊழலும் மோசடியும் வீண்விரயமும் தலைவிரித்தாடுகின்றன. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை சுமை பயங்கரமாக கூடியிருக்கிறது. உலகின் பயங்கரமான நாடுகளின் வரிசையில் இலங்கை முக்கிய இடம் பிடித்திருக்கிறது

இப்படியெல்லாம் பயங்கரமான விழைவுகளை ஏற்படுத்திய 18 ஆவது திருத்த சட்டத்திற்கு நீங்களும் உங்களது கட்சியும் இந்நாட்டின் நலன்களை துளியும் கணக்கெடுக்காமல் கண்களை மூடிக்கொண்டு பொறுப்பற்ற முறையில்ஆதரவளித்தீர்கள். அது போலவே இந்நாட்டின் சிறுபாண்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களை இல்லாமல் செய்யக்கூடிய திவி நெகும சட்ட மூலத்திற்கும் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கினீர்கள்.

எமது மக்களின் நலன்களுக்கும் இந்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த நலன்களுக்கும் எதிரான விடயங்களை இந்ந அரசாங்கம் செய்கின்ற போது அதற்கு எதிராக உங்களால் ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை? இன்றுஇந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தோன்றியிருக்கும் பயங்கரமான சூழ்நிலைகளுக்கு பின்னணியாக செயற்படும் அரசியல் சூழ்நிலைகளை உருவாக்கியதில் உங்களுக்கும் கனிசமான பங்கிருக்கிறது என்பதனை உங்களால் மறுக்கமுடியுமா..?

06.   வட மாகாண முஸ்லிம்களின் சுமூகமான மீள்குடியேற்றத்திற்கு தடையாக தமிழ் இன வாத சக்திகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். அது போலவே சிங்கள இன வாதசக்திகளும் கூட தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்கில் நிம்மதியாக குடியேறி வாழுவதைத் தடுப்பதற்கான அத்தனை காரியங்களையும் செய்து வருகின்றார்கள் என்பதும் உண்மை.

இந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது என்பதும் உண்மையாகும். இதன் காரணமாகவே தமிழ் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களிலெல்லாம் தெற்கிலிருந்துகொண்டுவரப்படும் சிங்கள் மக்கள் அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் குடியேற்றப்படுகின்றார்கள்.

கிழக்கிலும் இது மேற் கொள்ளப்படுகின்றது. வட கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு அரசியல் பலமுள்ளவர்களாக இருப்பதனை சிதைத்து விடுவதற்காகவே இதனை அரசாங்கம் செய்கிறது என்பதுஉங்களுக்கும் தெரியும். அது போலவே வட கிழக்கு பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பாதுகாப்பு வலயம் என்றும்இ தொல்பொருள் ஆராய்ச்சி வலயம் என்றும், ஏனைய அபிவிருத்திகளை காரணம் காட்டியும் இந்தஅரசாங்கம் அநியாயமாக பறித்து வருகிறது. இதனையும் நீங்கள் அறிவீர்கள்.

உண்மையில் எமது மக்கள் மீது நேர்மையான அக்கறை உங்களுக்கு இருந்திருந்தால் இந்த விடயங்கள் பற்றியும் நீங்கள் கண்டணங்களைத் தெரிவித்து அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நீங்களோ முஸ்லிம் மக்களின் குடியேற்றத்திற்கு தமழ் அரசியல் வாதிகள் மாத்திரமே தடையாக இருக்கின்றார்கள் என்ற பொய்யான தோற்றப்பாட்டை உருவாக்கி நிரந்தரமாக தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை மேலும் மோசமாக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றீர்கள்.

வட மாகாண முஸ்லிம் மக்களின் நலன்களை கடுமையாகப் பாதிக்கும் சிங்களக் குடியேற்றங்க் மற்றும் அரசாங்கத்தின் காணி சுவீகரிப்பு போன்ற விடயங்கள் பற்றி நீங்கள் இன்னமும் மௌனம் காப்பது ஏன்..?

07.       இஸ்லாத்தின் பார்வையில் அரசியல் என்பது தனிநபர் வளர்ச்சிக்கானதோ அல்லது குடும்ப அபிவிருத்திக்கானதோ அல்ல. அது முழுக்க முழுக்க சமூக நலன்களுக்கானதாக அமைய வேண்டும். ஆனாலும் அரசியல் என்பது இன்றுபெரும் வியாபாரமாகவும் குடும்ப சொத்தாகவும் மாறியிருக்கின்றது. நம் சமூகம் மாத்திரமின்றி முழு நாடுமே அரசியல் மூலம் விமோசனம் பெறாமல் சீரளிவதற்கான காரணம் இதுவேயாகும்.

இம்முறை வட மாகாண சபைத் தேர்தலில் உங்கள் சகோதரனை ஒரு முன்னணி வேட்பாளனாக களம் இறக்கியிருப்பதன் மூலம் இந்நாட்டின் சாபக்கேடாக மாறியிருக்கின்ற  குடும்ப அரசியல் கலாசாரத்தை வட மாகாணத்தில்தொடங்கி வைத்திருக்கின்றீர்கள்.

உங்கள் சகோதரனை விடவும் நன்கு கல்வி கற்ற, மார்க்கப்பபற்றுள்ள, நேர்மையான அத்தோடு வட மாகாண மக்கள் மீது உண்மையான அக்கறையும் நேசமும் உள்ள எத்தனையோ இளைஞர்கள் இப்பிரதேசத்திலே இருக்கிறார்கள்.அப்படி இருந்தும் அவர்களை ஒரு முதன்மையான வேட்பாளராக இறக்கி வெற்றி பெற உழைக்கும் மனோ நிலை உங்களுக்கு ஏன் வரவில்லை..?

வட மாகாண முஸ்லிம்களின் தலைமைத்துவம் தொடர்ந்தும் உங்களின் பிடிக்குள் இருக்க வேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புகின்றீர்களா..?

கடந்த தடைவ சகோதரர் உனைஸ் பாறூக் அவர்கள் எதிர்பாராத விதமாக தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உருவாகிவிட்ட நிலையில் இது உங்களின் அரசியல் இருப்புக்கு நீண்ட காலத்தில் அச்சுறுத்தலாகஅமையும்என நம்புவதனால்தான் உங்கள் சகோதரனை அடுத்த அரசியல் வாரிசாக உருவாக்க நினைக்கின்றீர்களா..?

08.   கடந்த மூன்று வருடங்களாக இந்நாட்டில் முஸ்லிம்களின் மத கலாசார உரிமைகளுக்கும் பொருளாதார நலன்களுக்கும் எதிராக ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆபத்துக்களை நீங்களும் அறிவீர்கள்.

இது வரை பள்ளிவாயல்கள் மீது மேற் கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் அல்லது தாக்குதல்கள் என்ற 25 சம்பவங்களோடு சேர்த்து முஸ்லிம்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட ஏறத்தாள 300 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் எவற்றுக்கும் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதில் பல தாக்குதல் சம்பவங்கள் பொலிஸாரின் அல்லது இராணுவத்தினரின் கண்முன்னாலேயே நடந்து முடிந்திருக்கின்றன.

இறுதியாக நடந்து முடிந்த மஹியங்கன மற்றும் கிரான்பாஸ் சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளில் ஒருவரான நீங்களும் உங்களது கட்சியும் இவற்றைத் தடுப்பதற்கு இது வரை காத்திரமாக எதையும் செய்ததாகவும் தெரியவில்லை. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றாகச் சென்றுஜனாதிபதியைச்சந்தித்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்த வேண்டும் என நீங்களும் சேர்ந்ததான் முடிவெடுத்தீர்கள். ஆனாலும் உங்கள் வேண்டுகோளை ஏற்று இது பற்றி உங்களோடு பேசுவதற்கு ஜனாதிபதி இதுவரை தயாராகஇல்லை.

கிரான்பாஸ் சம்பவத்தில் தொடர்புபட்டோர் பற்றிய விபரங்களை ஆதார பூர்வமாக திரட்டி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் இது வரை ஒன்றும் நடக்கவில்லை.(ஒரு கண்துடைப்புக்காக இரு நபர்கள் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டதைத் தவிர). இந்நாட்டின் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான ஜனாதிபதியும்கூட உங்கள் வேண்டு கோளை கணக்கெடுக்கவில்லை.

இந்த சூழலில்தான் வட மாகாண சபைத்தேர்தலும் வந்தது. முஸ்லிம்களின் வாக்கு அரசாங்கத்திற்கு தேவைப்பட்டது. அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் எவையும் தனியாகச் சென்று தேர்தலில்போட்டியிட்டுவிடக்கூடாது என்று அரசாங்கம் பெரிதும் விரும்பியது. அந்த விருப்பத்தை நிறைவு செய்வதிலும் நீங்கள்தான் முன்நின்று உழைத்தீர்கள்.

இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது ஏன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி உங்களால்ஜனாதிபதியுடன் ஒரு சீரியசான பேச்சு வார்த்தையை நடாத்த முடியாமல் போனது?

நாட்டு மக்களுக்கு ஓரளவாவது மரியாதை கிடைக்கும் தேர்தல் காலங்களிலாவது அரசாங்கத்துடன் எமது மக்களுக்காக கொளரவமாகவும் மரியாதையாகவும் பேசுகின்ற சுதந்திரமும் துணிச்சலும் உங்களுக்குக் கிடையாதா..? இந்தசந்தர்ப்பத்தை விட்டால்வேறு எப்போதுதான் இந்த மக்களுக்காக நீங்கள் பேசப்போகின்றீர்கள்…?

09.    இறுதியாக உங்களிடம் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.
 எந்த அகதி மக்களின் விடிவுக்காக அரசியல் நடாத்துவதாக நீங்கள் சொல்லுகின்றீர்களோ அம்மக்களின் வாழ்வும் அவலமும் துயரங்களும் உங்களுக்குத் தெரியும்.

கடந்த 23 வருடங்களாக இம்மக்கள் வீடிழந்து, தொழில் இழந்து, வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி அடிப்படை வாழ்க்கை வசதிகள் கூட இல்லாமல் படும் துயரம் முழு உலகும் அறியும்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் இம்மக்கள் வாழும் சில முகாம்களில் மலசலகூட வசதிகள் கூட இல்லாமல் இன்றும் கூட தமது இயற்கை கடன்களை கழிப்பதற்காக வயது வந்தபெண்பிள்ளைகளும் முதியோர்களும் கூட காலைப் பொழுதுகளில் கியூ வரிசைகளில் நற்கின்ற துயரக் காட்சிகள் இன்னும் தொடர்கின்றன.

இம்மக்களின் பெயரால் அரசியல் செய்யும் நீங்களும் கூட இம்மக்களைப்போலவே ஆரம்ப நாட்களில் ஒரு அகதியாக வாழ்க்கையின் அடி மட்டத்திலேயே இருந்தீர்கள். இவர்களின் நாளாந்த துயரங்களே உங்களின் துயரங்களாகவும் இருந்தன.

ஆனாலும் அரசியலுக்கு வந்ததன் பின்னர் இன்று நீங்களும் உங்கள் குடும்பமும் பொருளாதாரத்திலும் வாழ்க்கை வசதிகளிலும் வானுயர்ந்து நிற்கின்றீர்கள். உங்களின் இந்த அதீத பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் அரசியலே காரணம்என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

மக்களின் வாக்குரிமையை கோடிகள் பல கொடுத்து பேரம் பேசும் அளவுக்கு பொருளாதாரத்தின் உச்சத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள்.தேர்தல் காலங்களில் தண்ணீராய் தாங்கள் இறைக்கும் பணத்தொகைகளைப் பார்க்கின்றபோது எப்படிஉங்களால் இத்தனை கோடிகளை செலவழிக்க முடிகிறது என்பதனை எங்களால் நம்ப முடியவில்லை.

ஏனென்றால் ஒரு அமைச்சராக இருப்பவருக்குரிய சட்ட ரீதியான கொடுப்பனவுகள் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும்.  இந்நிலையில் சட்ட ரீதியான உங்கள் வருமானத்தை மாத்திரம் கொண்டு இத்தனை தூரம் கோடி கோடியாகஉங்களால் பணம் சேர்த்திருக்க முடியாது.

இந்நிலையில் விடை காண முடியாத மர்மமான விடயம் என்னவென்றால்… எந்த அகதி மக்களுக்காக அரசியல் நடாத்துகின்றீர்களோ அந்த மக்கள் வாழ்வின் அடி மட்டத்திலேயே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அம்மக்களின் பெயரால் அரசியல் நடாத்தும் நீங்களும் உங்கள் குடும்பமும்உங்களைசுற்றியிருப்போரும் மாத்திரம் பெரும் வசதி கொண்டோர்களாகவும் கோடீஸ்வரர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது…?

இத்தனை காலமும் இம்மக்களின் பெயரால் கிடைத்த அதிகாரங்களை 100 வீதமும் இம்மக்களுக்காகவே நீங்கள் பயன்படுத்தி நேர்மையாக நடந்து கொண்டிருந்தால் எப்படி உங்களைப் போன்றவர்களால் அரசியல் மூலம் இத்தனை பொருளாதாரங்களையும் சேர்க்கமுடிந்தது..?

ஆக உங்களைப்போன்ற அரசியல் வாதிகள் பெரும் பெரும் செல்வந்தர்களாக மாறியிருப்பதனை நமது மக்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்தினதும் அதிகார துஸ்பிரயோகத்தினதும் அடையாளமாகவே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இதனை உங்களால் நிராகரிக்க முடியுமா..?

இந்தக் கேள்விகளை நான் தனிப்பட்ட முறையில் உங்களிடம் முன்வைத்தாலும் உங்களைப்போன்ற அரசியல் வாதிகளைப் பார்த்து முஸ்லிம் சமூகத்தில் சிந்திக்கக்கூடிய பெரும் பாலானவர்கள் கேட்கத் துடிக்கின்ற கேள்விகளே இவையாகும்.

பகிரங்கமான இந்தக் கேள்விகளுக்கு பகிரங்கமான பதில்களை வழங்குவீர்களேயானால் எம் சமூகத்திற்கு இருக்கும் கேள்வி கேட்கும் உரிமையையாவது நீங்கள் மதித்து செயற்பட்டமைக்காக நானும் எம்மைப்போன்றவர்களும்சந்தோசப்படுவார்கள்.

நிச்சயம் இவற்றுக்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்கள் சகோதரன்

அப்துல் வஹாப்

1 comment:

  1. நியாயபூர்வமான மடல்....
    ஒன்பதாவது கேள்விக்கு மட்டுமாவது அமைச்சர் பகிரங்கமாக பதில் அளிப்பாரா....?

    ReplyDelete

Powered by Blogger.