Header Ads



''அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு ஒரு பகிரங்க மடல்'' சம்பந்தமாக....

(எஸ்.ஹமீத்)

ஆதாரங்களும் அர்த்தங்களுமற்ற அபாண்டங்களை அள்ளி வீசியிருக்கிறார் சகோ. அப்துல் வகாப். ஓர் எதிரியைக் கூட இவ்விதம் பொதுத் தளத்தில் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பது நாகரீகமோ, நல்ல விடயமோ அல்ல.

SLMC யில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினரான ரிசாத், அதிலிருந்து வெளியேறியதற்கான உண்மைக் காரணங்கள் உலகத்திற்கே தெரியும். வெளியேறியது அவர் மட்டுமல்ல; மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த இன்னும் பலரும்தான். அதற்கான காரணங்களை இங்கே சொல்லப் போனால், SLMC  யின் தற்போதைய தலைவருக்குத்தான் அவமானம். அதனால் அதனைத் தவிர்ப்பது நல்லதென நினைக்கிறேன்.

வடமாகாணத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் தமிழ் இனவாத சக்திகளே. இதில் சிங்களவர்களைச் சேர்த்து அப்துல் வஹாப் கூறியிருப்பது வேடிக்கையானது. எனினும் தமிழ் இனவாத சக்திகள் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்குத் தடையாக இருக்கிறார்கள் என்று அவர் ஒத்துக் கொண்டிருப்பது ஆறுதலைத் தருகிறது.

வட மாகாணத்தில்-குறிப்பாக வன்னி மாவட்டத்தில் மக்கள் ரிசாதின் தனிப்பட்ட நல்ல குணங்களுக்காகவே அவரை அதிகமாக விரும்புகிறார்கள். இந்த விருப்பம் அவரது அரசியற் கொள்கைகளுக்காக  அவரை மக்கள் விரும்புவதை விட அதிகமாகும்.

வாக்களிக்கும் மக்கள் அரசியலை மட்டும் பார்ப்பதில்லை; அரசியல்வாதியையும் பார்க்கிறார்கள். என்வே, அவரது தனிப்பட்ட செல்வாக்கு இன்னொருவருக்கன்றி, அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு பகிரப்படும் சாத்தியக் கூறுகளே அதிகம். இந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் அவரது சகோதரருக்குத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, தனது தமையனோடு தோளோடு தோள் நின்று மக்களுக்கான சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்தான் அவரது சகோதரர் ரிப்கான் என்பது, அப்துல்  வஹாபுக்குப் புரியாவிட்டாலும் வன்னி மக்களுக்கு நன்கு தெரியும்.

சிங்கள இனவாதிகளுக்கெதிராக மிக ஆக்ரோஷத்தோடு குரல் கொடுத்த ஓர் அரசியல்வாதி ரிசாதேயன்றி வேறொருவரல்ல என்பது முழு உலகமும் அறிந்த விடயமாகும். கிராண்ட்பாஸ் சம்பவத்தில் கூட அவர் பொலிஸ் மா அதிபருடன் மோதிய சம்பவத்தை அப்துல் வகாப் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். பேஷன் பக் தாக்கப்பட்டபோது உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சரைத் தொடர்பு கொண்டு நிறுத்தியவர் ரிசாத்தான் என்பதை நினைத்துப் பாருங்கள். தம்புள்ள பள்ளி விவகாரத்தில்லும் அவர் பல காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.....

ஒரு குறுகிய வட்டத்துக்குள் நின்று கொண்டு, ஒருவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதென்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமா என்று முதலில் சிந்தியுங்கள்.

ரிசாத் ஒரு பொறியியலாளர். மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர் என்று எண்ணுகிறேன்.

வட மாகாணத்திலிருந்து அகதிகளானோரில் பலர் அல்லாஹ்வின் அருளால் இன்று கோடீஸ்வரர்களாகி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் அரசியலிலா சம்பாதித்தார்கள்?

ரிசாதின் உறவினர்கள், நண்பர்களிற் பலர் பெரும் தொழிலதிபர்கள். அவரது மாமனார் கூட பெரும் தொழிலதிபர்தான். அந்த வகையில் ரிசாதும் முன்னேறியிருக்கலாம் என்ற ரீதியில் சிந்தித்துப் பாருங்கள்.

தேர்தல் காலத்தில் செலவு செய்யப்படும் பணமெல்லாம் அவரது சொந்தப் பணம் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? தேர்தல் செலவுக்கென்று கட்சிகள்-நலன் விரும்பிகள் என்று நிறையவே பணம் கொடுப்பார்கள் என்பதை ஏன் மறந்து போனீர்கள்?

உங்கள் கேள்விகள் பலவற்றில் அடிப்படையே இல்லாமல் இருக்கிறது. உன்மையிலேயே நீங்கள் இது பற்றிய விளக்கங்களைக் கேட்க விரும்பியிருந்தால் ரிசாதிற்கே நேரடியாகக் கடிதம் எழுதியிருக்கலாம். அதைவிடுத்து, ஒரு பொதுத் தளத்தில் எழுதி அவதூறு பரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் யாரென்று ரிசாதிற்குத் தெரியாது. ஆனால் அவரை எனக்குத் தெரியும். அவரை-அவரது சேவைகளை நான் தூரத்திலிருந்து அவதானித்துக் கொண்டிருக்கிறேன். மக்களுக்கான அவரது தன்னலமற்ற சேவைகளை ஊக்குவிக்க எண்ணுகிறேன். அதன் வெளிப்பாடுதான் அவரைப் பற்றி நான் எழுதுவது.
 
சகோ.அப்துல் வகாப் ரிசாத் என்ற சிறந்த அமைச்சரின் மீது-எல்லாவற்றுக்கும் மேலாக ரிசாத் என்ற ஒரு நல்ல மனிதர் மீது சுமத்தியிருக்கும் குற்றச் சாட்டுகளும் அடிப்படையற்றவை என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

2 comments:

  1. கையைக் கொடுங்கள் ஹமீது சார்.அருமையான விளக்கம் சார்.

    இலங்கையில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்மாரில் ரிஷாத் பதியுத்தீன் என்ற அமைச்சர் இறைவனுக்குப் பயந்தும் மனச்சாட்சியுடனும் எல்லா மக்களுக்கும் சிறப்பான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மேலே இப்படி மனச்சாட்சி இல்லாமல் குற்றம் கூறுபவர்கள் முதலில் ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

    ReplyDelete
  2. யாருக்கோ எழுதப்பட்ட மடலுக்கு வேறு யாராலோ பதில் மடல் வரையப்பட்டுள்ளது. ஜனாப் வஹாபின் மடலுக்கு அமைச்சர் ரிஷாத் அல்லது அவரின் சகோதரர் அல்லது அவரின் அரசியலில் நேரடித் தொடர்புள்ளவர் பதில் வழங்கியிருந்தால் பொருத்தமாக இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.