Header Ads



கட்சிகளின் இறுதிக் கூட்டங்கள் இன்றுடன் நிறைவு


தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் 18-09-2013 நிறைவடையும் நிலையில் இறுதிநேரப் பிரசாரங்களில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான கட்சிகளின் இறுதிக் கூட்டங்கள் இன்று மாலை இடம்பெறுகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வென்னப்புவவிலும், ஜே.வி.பி யின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் தலைமையில் கண்டி அக்குறணையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையிலும் நடைபெறவுள்ளன.

 வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இவ்வேளை தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று நள்ளிரவின் பின்னர் கட்சிகளோ அல்லது சுயேச்சைக் குழுக்களோ தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கக் கூடாது என்றும், இலத்திரனியல் ஊடகங்கள் மூலமான தேர்தல் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவின் பின்னர் அரசியல் விளம்பரங்கள் மற்றும் அறிக்கைகள் ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்புவது தடைசெய்யப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.