கூரியர் பார்சல்களில் கருந்தேள்
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த கூரியர் பார்சல்களை சுங்க அதிகாரிகள் நேற்றிரவு சோதனை செய்து கொண்டிருந்தனர். சென்னை அண்ணாநகரில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பெர்னான்டோ என்பவருக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. இந்த பார்சலை நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூர் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றுவதற்காக வைத்திருந்தனர். சந்தேகத்தின்பேரில் அந்த பார்சலை அதிகாரிகள் ஸ்கேன் செய்தனர். அதில் உயிருடன் ஏதோ பொருட்கள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் துணையுடன் பார்சலை பிரித்து பார்த்தனர். அதற்குள் இரு அறைகள் இருந்தது. ஒரு அறையில் 9 கருந்தேள், மற்றொரு அறையில் ஒரு சிலந்தி பூச்சி இருந்தது. இதை பார்த்ததும் சுங்கத்துறை அதிகாரிகள் அலறிடியத்து ஓட்டம் பிடித்தனர். இதனால் ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கத்துறை ஊழியர்கள், தேள்களை அடித்து கொல்ல முயன்றனர். அவர்களை தடுத்த அதிகாரிகள், ‘இவற்றை அடிக்க கூடாது’ என கூறி பத்திரமாக பிடித்து பிளாஸ்டிக் வாளியில் அடைத்தனர். பின்னர் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று அண்ணா நகரில் இருந்து இத்தாலி நாட்டில் உள்ள சவ்மரியா என்பவருக்கு ஒரு பார்சல் அனுப்ப இருந்தது. அதிகாலை 2 மணிக்கு பிராங்பர்ட் செல்லும் லுப்தான்சா விமானத்தில் இந்த பார்சல் அனுப்பப்பட வேண்டும். அதையும் அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதற்குள் ஒரு கருந்தேள், 2 சிலந்தி பூச்சி இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றையும் வாளியில் போட்டு பாதுகாப்பாக மூடி வைத்தனர்.
அடுத்தடுத்து கருந்தேள், சிலந்தி பிடிபட்டது அதிகாரிகளிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பார்சல்களில் இருந்த முகவரியை சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தபோது போலி என தெரிந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேளச்சேரி வன உயிரின ரேஞ்சர் டேவிட்ராஜ் வந்து கருந்தேள் மற்றும் சிலந்தி பூச்சிகளை பெற்று சென்றார்.
இதுபற்றி டேவிட்ராஜ் கூறும்போது, ‘வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி கருந்தேள், சிலந்தி பூச்சிகள் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்வதோ, பார்சலில் அனுப்பி வைப்பதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். போலி முகவரியில் இந்த பார்சல்கள் அனுப்ப இருந்தது. ஏற்கனவே பாம்புகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக அனுப்ப இருந்தனர் என்பது பற்றி விசாரித்து குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.
Post a Comment