பொதுபல சேனா, எம்மை அடிப்படைவாத அமைப்பு என்பது வியப்பில் ஆழ்த்தியுள்ளது
பொது பல சேனா அமைப்பினர், எமது நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பை (பி.எம்.ஜே.டி யை) ஒரு அடிப்படைவாத அமைப்பாகச் சித்தரித்திருந்தமை எம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், நாட்டில் முறையான அபிவிருத்தி நடக்க வேண்டும், தாய் நாட்டில் நலன்களில் நாங்களும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பாடுபடுவது அடிப்படைவாதமா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கின்றோம் என்பது அடிப்படைவாதமா என்று எமக்கு விளங்கவில்லை.
எமது அமைப்பையும், அதன் கொள்கையும் பற்றிய விசயமறியாது அவர்கள் இக்கருத்தைக் கூறியிருப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம். கண்டி மாவட்டமானது சகல இன மக்களும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும் வாழ்கின்ற ஒரு நீண்ட வரலாறுப் பிண்ணனி கொண்ட மாவட்டம். இவ்வாறான ஒரு மாவட்டத்தில் வாழக் கிடைத்தமையையிட்டு நாங்கள் பெருமையடைகின்றோம். இம்மாவட்டத்தில், தோன்றுகின்ற மாற்று அரசியல் சிந்தனை சகல இனங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.
தலைவர்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கின்றவர்கள். அவர்கள் செய்கின்ற தவறுகள் அச்சமூகங்களைப் பாதிக்கின்றது. ஏனைய சமூகங்கள் மத்தியில் பிழையான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால், சமூகங்களிடையே ஒற்றுமை பாதிக்கின்றது. நாட்டின் அபிவிருத்தியில் பல பின்னடைவுகள் ஏற்படுகின்றன.
எனவே, மக்களையும், நாட்டையும் மனதார நேசிக்கின்ற, நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டிய கடமைப்பாடு இந்த நாட்டிலுள்ள சகல இனங்களுக்கும் உண்டு. இதற்கான ஒரு சிறிய முயற்சியையே நாம் முன்னெடுத்துள்ளோம். இதனை முழுமையாக வரவேற்று, ஒத்துழைப்பு வழங்கி, வழிகாட்ட வேண்டிய கடமைப்பாடு நாட்டை நேசிக்கின்ற சகலருக்கும் உண்டு. இன மத பேதங்களுக்கு அப்பாலும், கட்சி பேதங்களுக்கு அப்பாலும் இருந்து இவ்விடயத்தை சிந்திக்க வேண்டும்.
சில முக்கிய கொள்கைகளுடனே எமது அமைப்பு செயல்படுக்கின்றது. அவை குறித்து தெளிவு பெற விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.
குறிப்பாக, அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் நல்ல வசனங்களைக் கூறி வாக்குகளைப் பெறுகின்றனர். பின்னர் மக்களது குறைகளை எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும். வாக்குகளைப் பெற்றால், அதற்குறிய கடமைகளை அவர்கள் செய்தாக வேண்டும்.
அடுத்து, இன்றுள்ள அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும். வீண் விரயங்கள் நிறைந்த இன்றைய அரசயலில், தலைவர்களாகின்றவர்களுக்கு பணமும், அரசியல் பிண்ணனி கொண்ட குடும்பமுமாக இருப்பதுதான் அடிப்படைத் தகைமைகளாக இருக்கின்றன. இந்நிலை மாறாவிடின் எதிர்காலத்தில் நல்ல தலைவர்கள் இந்நாட்டில் உறுவாகுவதற்கு வாய்பில்லை.
அதேபோன்று, இந்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் இரண்டரக் கலக்கின்ற ஒரு இடமே அரசியல். இந்த அரசியலில் அனைத்து சமூகங்களது பிரச்சினைகளையும், அபிலாசைகளையும், நீதியாகவும், நேர்மையாகவும் கையால வேண்டிய, ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும், பரஷ்பர புரிந்துணர்வுடன் செயல்படுகின்ற தலைவர்கள் உருவாக வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். இவ்வாறான கொள்கைகளுடனேயே நாம் செயல்படுகின்றோம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அக்குறணைப் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட எமது அமைப்பு இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் வென்றெடுத்தது. அவர்கள் நீதியாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கின்றார்கள். அவர்களது நடவடிக்கைகள் குறித்து, அக்குறணை பிரதேச சபையில் அங்கம் வகிக்கின்ற சிங்கள சகோதரர்களுக்கு நன்றாகத் தெரியும்.
பொதுபல சேனாவின் இவ்வாறான கருத்துக்கள், தாய் நாட்டை நேசித்து, நல்லது செய்ய விளைகின்ற உள்ளங்களை வெகுவாகப் பாதிக்கும். அது நல்லதல்ல என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். அத்துடன், இதன்பிறகாவது அவர்கள் எடுத்த எடுப்பில், எதுவித ஆதாரங்களும் இன்றி, பிழையான கருத்துக்களை முன்வைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் இருப்பதாக ஆதாரங்களற்ற விடயங்களை இவர்கள் கூறி வருகின்றனர். அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பன முஸ்லிம்கள் வெறுகின்ற வார்த்தைகளாகும். இது குறித்து முறையான ஆய்வொன்றை மேற்கொண்டால் உண்மை தெரியவரும். முஸ்லிம்கள் நிம்மதியையும், சமாதானத்தையும், நாட்டின் அபிவிருத்தியையுமே விரும்புகின்றனர்.
கடந்த 30 வருடங்களாக ஒரு கொடூர யுத்தத்தை எதிர்கொண்டு, பல இழப்புக்களைச் சந்தித்த நாட்டு மக்கள் நாங்கள். இன்று அந்நிலை மாற்றமைடைந்து, சமாதான சூழல் ஏற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமைப்பாடு, இலங்கை வாழ் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு.
பொதுபல சேனாவின் இக்கருத்துக்கள் நாட்டை நேசிக்கின்ற சகல இன மக்களது மனங்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன. இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் ஆதரங்களற்ற விடயங்களைக் கூறுவதை விடுத்து, அவ்வாறான குழுக்கள் இருந்தால் அவை குறித்த தகவல்களை, குறித்த ஆதாரங்களுடன பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கி, அவர்கள் மூலமாக உரிய நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும். அதுதான் தாய் நாட்டை நேசிக்கின்றவர்கள் செய்கின்ற நல்ல பணியாக இருக்கும் என நம்புகின்றோம்.
இர்பான் காதர்
ஊடகப் பேச்சாளர்,
பிரதிப் பொதுச் செயலாளர்
Post a Comment