Header Ads



அரசாங்கத்தின் அடாவடி போக்கை கண்டிக்க அருமையான சந்தர்ப்பம் - அஸாத் சாலி

(அஸாத் சாலி)

தம்புள்ளை பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்து முற்றாக அகற்றுவதற்கு சூட்சுமமான முயற்சிகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.தம்புள்ளை புனித நகர அபிவிருத்தித் திட்டத்தின் முக்கிய அம்சமாக அங்கிருந்து பள்ளிவாசலையும் இந்து கோயிலையும் அகற்றுவதைக் குறியாகக் கொண்டே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.

ஏற்கனவே சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல் இப்போது அங்கு இருக்கின்றதா அல்லது இல்லையா என்று வெளியே தெரியாத வகையில் பிரதான வீதியில் இருந்து மிகவும் உள் பகுதி நோக்கி தள்ளப்பட்ட நிலையிலேயே இயங்கி வருகின்றது.

இந்நிலையில் இன்று அங்கு வருகை தந்த அதிகாரிகள் சிலர் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தரவின் பேரில் பள்ளிவாசலின் இன்னொரு புறத்திலிருந்து நில அளவைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி விசாரிக்கப்பட்டபோது வீதி அபிவிருத்திக்காக மேலும் இடம் தேவைப்படுவதாகவும் அதனால் பள்ளிவாசலின் பின்பகுதி வழியாக காணி பெறப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடக்கும் பட்சத்தில் பள்ளிவாசலின் பெரும்பாலான பகுதி இல்லாமல் போகும் ஆபத்து தோன்றியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மையில் இந்த நாட்டில் என்னதான் நடக்கின்றது. சிறுபான்மை இனத்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது ஏன் இந்த வெறித்தனம்? பௌத்த புனிதப் பிரதேசங்களுக்குள் பள்ளிவாசல்களும் கோயில்களும் இருக்கக் கூடாது.ஆனால் ஹோட்டல்களும் விடுதிகளும் இருக்கலாம் என்பது தான் இவர்கள் போதிக்கும் பௌத்த தர்மமா?

மத்திய மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி முஸ்லிம் மக்களை தனது இல்லத்துக்கு அழைத்து தான் ஒரு உண்மையான பௌத்தன்.ஏனைய மதங்களையும் நேசிப்பவன். எல்லா இனங்களினதும் மதங்களினதும் காவலன் நானே என்று மார்தட்டிக் கொள்ளுகின்றார். என்னை நம்புங்கள் என்று மக்களிடம் மன்றாடுகின்றார்.

மறுபுறத்தில் அவரது தம்பியின் தலைமையிலான நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ள பள்ளிவாசலையும் கோயிலையும் அகற்றுவதைக் குறியாகக் கொண்டு செயற்படுகின்றது. இந்த நாட்டு முஸ்லிம்கள் தீவிர வாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று சர்வதேச அரங்குகளில் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றார்.

ஜனாதிபதியின் தம்பியின் உரை முஸ்லிம்கள் மத்தியில் பலத்த கண்டனத்துக்கு ஆளான நிலையில் சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர் பௌஸி வலிந்து வந்து அவருக்கு வக்காளத்து வாங்குகின்றார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாகக் கூறுவது வெறும் பிரசாரமே என்று முழுப் பூசனிக்காயையும் சோற்றுக்குள் மறைக்க முயலும் அமைச்சர் பௌஸி தம்புள்ளை பள்ளிவாசலில் இன்று என்ன நடக்கின்றது என்பதை அறிவாரா? அவர்தானே நகர அபிவிருத்திக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர். உண்மையில் அவர் அதிகாரம் உள்ள ஒரு அமைச்சராக இருந்தால் தமபுள்ள பள்ளிவாசலைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுப்பாரா? அல்லது விடயம் முற்றி தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு தனது அமைச்சின் செயலாளருக்காக மீண்டும் வக்காளத்து வாங்குவாரா?

இனங்களின் நல்லுறவு, இனஒற்றுமை, சகல இனங்களுக்கும் சமஉரிமை, இந்த நாட்டில் இனங்களையும் மதங்களையும் காப்பவன் நானே என்றெல்லாம் மக்களை கூட்டிவைத்து மணிக்கணக்காக கதை அளப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொண்டு இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் அவரை உண்மையில் நம்பக் கூடியவாறு உருப்படியான நடவடிக்கைகளுக்கு அவர் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். அதுவே சகல இன மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ ஒரே வழியாக இருக்கும்.

இந்த அரசாங்கத்தின் அடாவடி போக்கை கண்டிக்க வடமேல்,மத்திய மற்றும் வட மாகாண சபைகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு அருமையானதோர் சந்தர்ப்பம் எதிர்வரும் 21ம் திகதி காத்திருக்கின்றது. அதை அந்த மக்கள் குறிப்பாக தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் சரியாகப் பயன்படுத்தி இந்த அரசின் இறுதி ஊர்வலத்தை தொடக்கிவைக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

4 comments:

  1. ஜனாதிபதியை யார் நம்பியது. இந்த மானங்கெட்ட அரசியல் வாதி பெளசி போன்றவர்கள் ஜனாதிபதிக்கு வக்காளத்து வாங்கும்வரை முஸ்லிம்களுக்கு நெருக்கடி இருந்துகொண்டே இருக்கும். மொத்தத்தில் இந்தக்கூட்டத்துக்கே முடிவு கட்டுவதுதான் சிறப்பு, அதற்கு பெளத்த மக்கள் இன்னும் சேரவேண்டியுள்ளது. முயற்சியுங்கள் வெல்லலாம்.

    ReplyDelete
  2. Mr ranees what you wrote absolutely correct specially our politician will realize after the coming provincial election result.

    ReplyDelete
  3. பௌசியின் சுயநலவாத அரசியலை ஆசாத் சாலி அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வியப்பாக உள்ளது.???????

    ReplyDelete
  4. Mr Akram i dont know because of his uncle.but asath salee must ask to the fausy how can he say like this lie in the international community fausy he is a mental man.

    ReplyDelete

Powered by Blogger.