வாஸ் குணவர்த்தன கிறீஸ் மனிதன் குற்றச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம்..!
பம்பலப்பிட்டி பிரபல பாதணி வர்த்தகர் மொஹமட் சியாமைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வானிலிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரியும் அவரின் இரத்த மாதிரியும் ஒன்றென மரபணு பரிசோதனையினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் சானி அபேசேகர தெரிவித்தார். ஜீடொக் நிறுவனத்தின் பரிசோதனையினூடாக இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை புதுக்கடை இல. 5 நீதிமன்ற நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.
வழக்கு விசாரணையின் போது ஒன்பதாவது சந்தேகநபர் திமுது ஸ்ரீமால் ஹெட்டியாராச்சியை தவிர ஏனைய எட்டு சந்கேநபர்களையும் சிறைச்சாலை அதிகாரிகள் மன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் சானி அபேசேகர விசாரணை அறிக்கையை நீதவானிடம் சமர்ப்பித்து விளக்கமளித்தார், அதன்படி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மரண விசாரணை அறிக்கை கம்பஹா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இம்மாதம் எட்டாம் திகதி வர்த்தகர் மொஹமட் சியாமின் கொலை தொடர்பில் 4 மற்றும் 5 ஆவது சந்தேக நபர்களான லக்மின இந்திக பமுனுசிங்க (உபபொலிஸ் பரிசோதகர் ). காமினி சனந்த சந்ர (கான்ஸ்டபிள்) ஆகியோரிடம் விளக்கமறியலில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்த அவர் 6 மற்றும் 7 ஆவது சந்தேகநபர்களான பிரியந்த சஞ்சீவ ( கான்ஸ்டபிள்), கெலும் ரங்கன திஸாநாயக்க (கான்ஸ்டபிள்) ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததால் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனதாகத் தெரிவித்தார்.
எனவே வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு நீதிவானிடம் கேட்டுக் கொண்டனர். வர்த்தகரைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டபிள்.யூ. பி. 2855 என்ற இலக்கத்தையுடைய வானிலிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரியும் கொலை செய்யப்பட்ட வர்த்தகருடைய இரத்தமும் ஒன்றென மரபணு பரிசோதனையின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து மூன்றாவது சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தமது பக்க வாதங்களை முன்வைத்தார். தமது கட்சிக்காரர் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் என்பதை ஞாபகமூட்டியவர் பொலிஸ் திணைக்களத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதை மறந்துவிடக்கூடாது. காவத்தையில் இடம்பெற்ற தொடர் கொலைகள், கிறீஸ் மனிதன் என்று அனைத்துக் குற்றச் செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவர். பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அனைத்து கொள்ளைக் கொலைகளுக்கும் அன்று முற்றுப்புள்ளி வைத்திராவிட்டால் இன்றைய நிலைமை மோசமாக இருந்திருக்கும். இவரின் உயர்வை எண்ணி பொலிஸ் நிலையத்தின் ஏனைய அதிகாரிகள் வாயடைத்துப் போய் நின்றதாகத் தெரிவித்த அவர் எப்போதும் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காமல் இரண்டு பக்கங்களையும் பார்க்கவேண்டிய அவசியத்தை மன்றில் கூறினார்.
இருதரப்பினரின் வாதப் பிரதிவாதங்களை கவனத்தில் கொண்ட நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரை சந்தேக நபர்களான லக்மின இந்திக பமுனுசிங்க (உபபொலிஸ் பரிசோதகர் ),காமினி சனந்தசந்ர (கான்ஸ்டபிள்), பிரியந்த சஞ்சீவ (கான்ஸ்டபிள்) கெலும் ரங்கன திஸாநாயக்க (கான்ஸ்டபிள்) ஆகிய நான்கு பேரிடமும் காலை 9 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடையில் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் எதிர்வரும் 24 ஆம் திகதி இரண்டு மணிவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Post a Comment