Header Ads



பொறி...!

(தம்பி)

சொற்கள் தீர்ந்து விடும் பேச்சாளன் மௌனிக்கின்றான். சொல்வதற்கு ஒன்றுமில்லாத பேச்சாளன் உளறத் துவங்குகின்றான். உளறல் என்பது ஆபத்தானது. நமது உளறலே கடைசியில் நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும். அரசியல் மேடைகளில் ஒலிக்கும் பேச்சுக்களில் அதிகமானவை உளறல்கள் மிகுந்தவை. அவை – பேசுபவனுக்கும் புரிவதில்லை, கேட்பவனுக்கும் புரிவதில்லை. ஆனால், சில பேச்சாளர்கள் வேண்டுமென்றே உளறுகின்றனர். கேட்பவனைக் குழப்பியடிக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காகும். இவ்வாறான உளறல்களுக்கு அரசியல் அரங்கில் கரகோசம் அதிகமாகும்.

நாட்டில் மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. அரச தரப்பினர் – தங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரசார மேடைகளில் பேசி வருகின்றனர். ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள், ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அரசுக்குள் இருந்து கொண்டே தனித்துப் போட்டியிடுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் - தமது பிரசார மேடைகளில் சொல்வதற்கு எதுவுமற்றுத் தவித்துக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, இந்த ஆட்சியில் முஸ்லிம்களின் மத விவகாரங்களிலே பௌத்த தேரர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தலையீடுகள், அழுத்தங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை – முஸ்லிம்களை அச்ச நிலைக்குள் தள்ளியுள்ளன. ஆனாலும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் கட்சியாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் மு.காங்கிரஸ், இவை குறித்து – தனது தேர்தல் பிரசார மேடைகளில் வாயைத் திறப்பதாகயில்லை. நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் தமது உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்தால், மேற்சொல்லப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு எதிராக தாங்கள் என்ன செய்வோம் என்றும் மு.காங்கிரஸ் கூறவில்லை.

சரியாகச் சொன்னால், தமது தேர்தல் மேடைகளில் மக்களிடம் சொல்வதற்கு எதுவுமற்ற நிலையில் மு.கா. உள்ளது. அரசாங்கத்தை விமர்சிக்கவும் முடியவில்லை - பாராட்டவும் முடியவில்லை. மு.கா.வுக்கு இது - இரண்டுங்கெட்டான் நிலையாகும். இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக – தமது தேர்தல் பிரசார மேடைகளில் தங்களுடைய கட்சியின் தவிசாளரையே விமர்சிக்கும் நிலைக்கு மு.காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு கட்சியானது தனது தேர்தல் பிரசார மேடைகளில் தனது கொள்கை விளக்கங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்தே பேச வேண்டும். அல்லது, மக்களுக்கு தமது கட்சி செய்த நலலவற்றினைச் சொல்லலாம். இல்லையாயின், எதிர்க்கட்சிகளின் மோசடிகளை விமர்சிக்கலாம். ஆனால், இவற்றில் எதனையும் பேசும் நிலையில் மு.கா. இல்லை. இந்த வங்குரோத்து நிலை குறித்து கட்சியின் தலைவர் ஹக்கீம் மிக நன்றாக அறிவார். அதனால்தான், தமது தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை திட்டித் தீர்க்கும் செயற்பாட்டில் ஹக்கீம் இறங்கியுள்ளார்.

தங்களுடைய கட்சியின் தவிசாளரை விமர்சிப்பதற்குரிய இடமாக தமது தேர்தல் பிரசார மேடைகளையே மு.கா. தலைவர் ஹக்கீம் தேர்வு செய்தமையானது, அவருடைய இயலாமையின் உச்சமாவே பார்க்கப்படுகிறது. மக்களுக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதால்தான் தமது உட்கட்சி விவகாரத்தினை ஹக்கீம் ஊர் விவகாரமாக்கியிருக்கின்றார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டிய செய்தி இதுவல்ல.

மு.காங்கிரசின் தவிசாளர் குறித்து கட்சியின் தலைவர் ஹக்கீம் தேர்தல் பிரசார மேடைகளில் தெரிவித்த கருத்துக்கள் அவருடைய மன உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி உள்ளன. தனக்குச் சமாந்தரமானதொரு அமைச்சுப் பதவியை பஷீருக்கு அரசாங்கம் கொடுத்தமைதான் மு.கா. தலைவரின் கோபத்துக்கான பிரதான காரணம் போல் தெரிகிறது. இல்லாவிட்டால், 'ஊக்குவிப்புத் திறன் அமைச்சு என்றால் என்ன என்று, அகராதியை எடுத்துத்தான் பார்க்க வேண்டும்' என்று தவிசாளர் பஷீரின் அமைச்சுப் பதவியை மு.கா. தலைவர் ஹக்கீம் கிண்டல் செய்து பேசியிருக்க மாட்டார்.

மு.காங்கிரஸ் தலைவர் மட்டுமே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியினை வகிக்க வேண்டும் என்கின்ற எழுதப்படாத விதியொன்றினை ஹக்கீம் வைத்துக் கொண்டிருக்கின்றார். இதனால், கட்சிக்குக் கிடைக்கவிருந்த பல அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகள் இல்லாமல் போயுள்ளன. கட்சியிலிருந்து மிக முக்கியமானவர்கள் பிரிந்து செல்வதற்கும் ஹக்கீமுடைய - இந்த எழுதப்படாத விதியே காரணமாகவும் இருந்துள்ளது என்கிறார் மு.காங்கிரசின் மிக மூத்த பிரமுகர் ஒருவர்.

நியாயப்படி பார்த்தால், மு.காங்கிரசுக்கு ஆகக்குறைந்தது 03க்குக் குறையாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகளை இந்த அரசு வழங்கியிருக்க வேண்டும். ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசுக்கும், அதேபோல், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.மக்கள் காங்கிரசுக்கும் தலா ஒவ்வொரு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, 08 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள மு.காங்கிரசுக்கும் ஒரேயொரு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனாலும், நியாயமற்ற இந்தப் பங்கீட்டினை மு.காங்கிரஸ் பெற்றெடுத்திருந்தது.

ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகளை மு.கா.வுக்குக் கொடுக்க - அரசு தயாராக இருந்தபோதும், கேட்டுப் பெறுவதற்கு கட்சித் தலைமை தயாராக இல்லை என்பதுதான் உண்மையாகும் என்று கட்சிக்காரர்களே கவலைப்பட்டுக் கொள்கின்றனர். அதனால்தான், தலைவருக்குத் தெரியாமல் தவிசாளர் பஷீர் அந்தப் பதவியை பெற்றுக் கொண்டார்.

உண்மையில், தனக்குத் தெரியாமல் தவிசாளர் பஷீர் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டார் என்பதை விடவும், தனக்குச் சமனான அல்லது சமாந்தரமான அமைச்சுப் பதவியொன்றினைப் பெற்றுக் கொண்டார் என்பதே மு.கா. தலைவரின் கோபமாகும். அதனால்தான், 'ஊக்குவிப்புத் திறன் அமைச்சு என்றால் என்ன என்று, அகராதியை எடுத்துத்தான் பார்க்க வேண்டும்' என பஷீரின் அமைச்சினை ஹக்கீம் கிண்டல் செய்துள்ளார். அதாவது, 'என்னைப் போலவே, நீயும்  அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் என்று பெரிதாக அலட்டிக் கொள்ளாதே. எனக்கு கிடைத்திருப்பது நீதியமைச்சு. உனக்குக் கிடைத்திருப்பது வெறும் ஜுஜுப்பி' என்று அந்த கிண்டலினூடாக ஹக்கீம் கூற முயன்றுள்ளார் போல் தெரிகிறது.

மு.காங்கிரசின் தவிசாளர் குறித்து பேசப்பட வேண்டுமாயின் - அதை கட்சியின் உயர்பீடக் கூட்டங்களில் பேசுவதே பொருத்தமாகும். தேர்தல் பிரசார மேடைகளில் உட்கட்சி விவகாரங்களை கட்சியின் தலைவரே பேசிக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. தவிரவும், இப்போதைக்குப் பேசவும், மக்களுக்குச் சொல்லவும் வேறு விடயங்கள் உள்ளன.

ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரின் வருகையினை தமிழ் சமூகம் உச்ச அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம்களின் பிரச்சினையை பேசுவதற்கு ஆளும் தரப்பிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் முன்வரவில்லை. அப்படியென்றால், ஹக்கீம் - நவநீதம்பிள்ளை சந்திப்பின்போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசப்படவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நீதியமைச்சராகவே நவநீதம்பிள்ளையை ஹக்கீம் சந்தித்திருந்தார். அதாவது, அந்தச் சந்திப்பின்போது, இலங்கைக்காக வக்காலத்து வாங்கும் பாத்திரத்தினையே ஹக்கீம் வகித்தார்.

மிகச் சரியாகச் சொன்னால், நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பின்போது, ஆளுந் தரப்பினரின் பிழைகளை ஹக்கீம் பூசிமெழுகிப் பேசினார். ஆட்சியாளர்களின் செயற்பாடுகளையெல்லாம் நியாயப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில அவர் அரசின் ஊதுகுழலாகச் செயற்பட்டிருந்தார்.

ஆட்சியாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வெண்டும் என்பதற்காவே ஹக்கீம் இவ்வாறெல்லாம் செய்கின்றார் என்பது புரிகிறது. ஆனால், மு.கா. தலைவர் தலைகீழாக நடந்தாலும் - அவரை அணைத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பதுதான் இங்குள்ள சோகமான செய்தியாகும்.

இப்படித்தான், ஆட்சியாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக, 18 ஆவது திருத்தச் சட்டத்தை மு.கா. ஆதரித்தது. சரியாகச் சொன்னால், மு.கா. ஆதரித்ததால்தான் 18 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேறியது. 18 ஆவது திருத்தச் சட்டம் என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகப் பெரும் வரமாகும். அவரின் ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருப்பதற்கான சாத்தியத்தினை அந்தத் திருத்தச் சட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், 18 ஆவது திருத்தச் சட்டத்தினை மு.கா.வினூடாக வென்றெடுத்த பிறகும் ஹக்கீமை நம்புவதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.

அதனால்தான், 18ஆவது திருத்தச் சட்டத்தினை ஆதரித்தமையானது, தாம் செய்த மிகப்பெரும் பாவம் என்று – மு.கா. தலைவர் ஹக்கீம் இப்போது கூறத் தொடங்கியுள்ளார். இந்தத் திருத்தச் சட்டத்துக்கு மு.கா. ஆதரவு வழங்கியமை ஒரு வரலாற்றுப் பழியாகும் என்று - சில காலங்களுக்கு முன்னர் ஹக்கீம் கூறிவந்தார். பழி - இப்போது பாவமாக மாறியுள்ளது.
இதேபோன்று, ஆட்சியாளர்களுக்கு தமது விசுவாசத்தினைக் காட்டுவதற்காகத்தான் கிழக்கு மாகாணசபையில் அரசுடன் இணைந்து ஆட்சியமைக்கவும் ஹக்கீம் ஒத்துக் கொண்டார். அந்த முடிவினை ஹக்கீம் தன்னிச்சையாகவே எடுத்தார். கட்சியின் உயர்பீட விருப்பத்தின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஹக்கீம் அவ்வாறு செய்யவில்லை. உயர்பீடத்துக்கத் தெரியாமலேயே கிழக்கில் அரசுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவினை அறிவித்தார்.

ஹக்கீமுடைய இந்த தன்னிச்சையான முடிவு குறித்து, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத் உள்ளிட்ட ஒரு சிலர் உயர்பீடக் கூட்டமொன்றில், கேள்வியெழுப்பியிருந்தனர். நியாயப்படி, இதற்காக மு.கா. தலைவர் ஹக்கீம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பில் கட்சி உயர்பீடத்தின் பெரும்பான்மை விருப்பினை அறிந்து கொள்ளாமல், தலைவர் ஹக்கீம் தன்னுடைய இஷ்டத்தின் பிரகாரம் அரசுக்கு ஆதரவு வழங்கியமையானது பிழையாகும். ஆனால், இதுகுறித்து கட்சிக்குள் உரத்த குரலில் பேசப்படவேயில்லை.

18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மு.கா. ஆதரவு வழங்கியமையானது பாவம் என்றால், கிழக்கு மாகாணத்தில் அரசுடன் இணைந்து மு.கா. ஆட்சியமைத்தது மிகப்பெரும் பாவமாகும். இடையில் இன்னுமொரு பாவமும் உள்ளது. திவிநெகும சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாணசபையில் ஆதரவு வழங்கியதன் மூலம் - அந்தப் பாவத்தினை மு.கா. இழைத்தது.

இப்படி, பாவத்துக்கு மேல் பாவத்தை இழைத்து - தனது விசுவாசத்தினை ஆட்சியாளர்களுக்குக் காட்டி விடலாமென, மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பினார். ஆனால், ஆட்சியாளர்களிடம் இன்றுவரை ஹக்கீமுடைய விசுவாசம் எடுபடவேயில்லை.

கண்களை இழந்தாயினும் சித்திரத்தை வாங்கி விடலாம் என்று ஹக்கீம் நம்;பினார். கடைசியில் கண்களும் இல்லை, சித்திரமும் கிடைக்கவில்லை.

மு.காங்கிரஸ் மிக மோசமானதொரு அரசியல் பொறியொன்றுக்குள் சிக்கியிருக்கிறது. இந்தக் பொறிக்குள் மு.கா. சிக்கியதா? சிக்க வைக்கப்பட்டதா என்பதை ஆராய முயற்சித்தால், இன்னும் இரண்டு மூன்று பக்கங்கங்கள் எழுத வேண்டியிருக்கும். அந்த ஆராய்ச்சி இப்போது தேவையுமில்லை. பொறியில் மாட்டியிருப்பது மு.கா.வின் கால் அல்ல. கழுத்து. எனவே, மிக அவதானமாக - தான் மாட்டியுள்ள பொறியிலிருந்து - மு.கா. தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், மு.கா. தலைவர் ஹக்கீம் அதற்குத் தயாரில்லை போல் தெரிகிறது. பொறியிலிருந்து நாங்களாகக் கழன்று கொள்ள மாட்டோம். ஆட்சியாளர்கள் வேண்டுமென்றால் கழற்றி விடட்டும் என்கிறார் ஹக்கீம்.

ஆனால், பொறி வைத்தவன் வந்து - கழற்றி விடப் போவதில்லை. எனவே, மு.கா.தான் பொறியிருந்து மீள வேண்டும். பொறியிலிருந்து தன்னைக் கழற்றிக் கொள்ளும் போது, தனது அங்கங்களில் சிலவற்றினைக் கூட – மு.கா. இழக்க நேரிடலாம். ஆனால், அதற்குப் பயந்து கொண்டு பொறியில் சிக்கியவாறே காலங்கடத்தி விட முடியாது. பொறியில் சிக்கிக் கொண்டிருப்பதை விடவும் - இழப்புக்களுடன் மீள்வதே தந்திரமும், புத்திசாதுரியமும் மிகுந்த செயற்பாடாகும்.

மு.கா. தலைவர் ஹக்கீம் அரசியல் அனுவமும், முதிர்சியும் கொண்டவர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தாம் சிக்கியுள்ள பொறியில் - அப்படியே இருப்பதுதான், இப்போதைக்குப் பாதுகாப்பானது என்று அவர் எடுத்திருக்கும் முடிவு எந்த வகையிலும் சரியானதாகத் தெரியவில்லை. ஒரு சில இழப்புக்களுக்குப் பயந்து கொண்டு, உயிரை விட முடியாது.

மு.கா. சிக்கியுள்ள அரசியல் பொறி ஆபத்தானது. அதிலிருந்து உனடியாக மீண்டு வருவதே கட்சிக்கு ஆரோக்கியமானதாகும். தாமதித்தால் தவிக்க நேரிடலாம்!

2 comments:

  1. thambi! ethu ungal karuthu matume SLMC poraliklin karutu alla

    ReplyDelete
  2. Unmai. But "sevidan kaathil oodhina sangu".

    ReplyDelete

Powered by Blogger.