சர்வதேச முதலுதவி தினம்
ஒருவருக்கு சுகாதார குறைபாடு அல்லது பாதிப்பு ஏற்படும் போது, அவர்களது உயிரைக் காப்பாற்றுவதற்கு, உரிய சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு, உயிரைக் காப்பாற்றுவதே முதல் உதவி. காயங்கள் ஆபத்தான நிலையை அடையாமல் தடுப்பதும் முதல் உதவியே.
முதல் உதவி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக ரெட்கிராஸ் அமைப்பால், செப்டம்பர் 2வது சனிக்கிழமையை (செப்., 14) "உலக முதல் உதவி தினமாக' கடைப்பிடிக்க 2000ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
அடிப்படை விஷயங்கள்:
முதலில் பாதிப்படைந்தவர், உணர்வுடன் இருக்கிறாரா (ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா) என்பதை சோதிக்க வேண்டும். எவ்வகை பாதிப்பானாலும் இந்த மூன்றும் அவசியம். ஒருவர் மயக்கமடைந்து விட்டால், அவரை சூழ்ந்து நிற்கக்கூடாது. காற்றோட்டத்துக்கு வழி செய்ய வேண்டும். ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தனியாக இருந்தால், அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். அப்போது தான் மனப்பதட்டம் குறையும். ஆம்புலன்ஸ் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பொறுத்து, முதல் உதவியை தொடர வேண்டும்.
பயற்சி தேவை:
ஒவ்வொரு பாதிப்புக்கும் அளிக்கப்பட வேண்டிய முதல் உதவி பற்றி சுகாதார துறை சார்பில், மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மருத்துவ வசதி குறைவான கிராமப்புறங்களில் இதை உடனே செய்ய வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும் முதல் உதவி பெட்டிகள் நிறுவப்பட வேண்டும்.
டாக்டர்.வி.டி., பிரேம்குமார்பொது மருத்துவ நிபுணர், மதுரை அரசு மருத்துவமனை:காய்ச்சல், தலைவலி வந்தால் அவசரத்திற்கு, அதிகம் பக்கவிளைவு இல்லாத "பாரசிட்டாமல்' மாத்திரை சாப்பிடலாம். குழந்தை, பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் "ஓ.ஆர்.எஸ்.,' அல்லது "எலக்ட்ரால்' பாக்கெட் வைத்திருக்க வேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க, "எலக்ட்ரால்' கொடுக்க வேண்டும். வயிற்றுப் போக்கின் போது, அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இருமல் மருந்தை, டாக்டர் ஆலோசனையின்றி சாப்பிடக்கூடாது. சில இனிப்பு மருந்துகளை சாப்பிட்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்னை ஏற்படலாம். வலிப்பு நோய் வந்தால், கீழே விழுந்து அடிபடாமல் மெல்ல படுக்க வைத்து, கால்பகுதிக்கு தலையணை கொடுத்து சற்றே உயரமாக்க வேண்டும். இரும்போ, சாவிக்கொத்தோ தேவையில்லை. நாக்கு கடிபடாமல் இருக்க, பற்களுக்கு இடையில் துணியை வைக்கலாம். ஒன்றரை நிமிடங்களுக்குள் வலிப்பு நின்று விடும். உடனடியாக மருத்துவ உதவியை நாடுவதே நல்லது.
மாரடைப்பிற்கு முதலுதவி என்ன?
டாக்டர் ஜி.துரைராஜ்இருதய நோய் நிபுணர், மதுரை: 40 வயதை தாண்டிய ஆண்கள், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இருதய நோய் வரலாம். தாடையின் கீழ்ப்பகுதியில் இருந்து தொப்புள் வரை அனைத்துப் பகுதியிலும் தொடர்ந்து வலி இருக்கும். வலியின்றி அசவுகரியமாக உணர்ந்தாலும், பிரச்னை தான். வலியுடன், வாந்தி, தலைசுற்றல் வந்தால், "ஆஸ்பிரின்' மாத்திரையை கடித்து சாப்பிட வேண்டும். திடீரென மயக்கமாகி மூச்சு, பேச்சின்றி இருந்தால், மூக்கில் விரல் வைத்து பார்க்க வேண்டும். சுவாசமின்றி இருந்தால், அவரது மார்பின் நடுப்பகுதியில், இரு கைகளை வைத்து, ஒன்றரை "இன்ச்' அழுத்தத்திற்கு கைகளை அழுத்த வேண்டும். நிமிடத்திற்கு நூறுமுறை, இப்படிச் செய்ய வேண்டும்.ஆம்புலன்சிற்காக காத்துக் கொண்டிருக்காமல், ஆட்டோ, டாக்சி என, எது கிடைத்தாலும் பரவாயில்லை. மருத்துவமனைக்குச் செல்லும் வரை தொடர்ந்து, கைகளால் "மசாஜ்' செய்ய வேண்டும்.
வீட்டில் முதலுதவி எப்படி?
பி.லட்சுமி, ஆசிரியை காக்கைபாடினியார் ஆரம்பப்பள்ளி, மதுரை சளி, இருமல் இருந்தால் ஓமவல்லி, துளசி இலைகளை சாப்பிட கொடுப்பேன். நெஞ்சுச்சளியாக இருந்தால், பாலில் மிளகு, மஞ்சள்பொடி, பனங்கற்கண்டு கலந்து கொடுப்பேன். தலைவலி வந்தால் "நீராவி' பிடிக்க வைப்பேன். எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மாத்திரைகளைப் பொறுத்தவரை, "கால்பால்' மாத்திரை வாங்கி வைப்போம். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால், ஈரத்துணியை அக்குள், நெற்றிப் பகுதியில் வைத்து மாத்திரை கொடுப்பேன். மாத்திரைகளின் காலாவதி தேதியை, சரிபார்த்துக் கொள்வோம்.
முதலுதவி செய்வது எப்படி:
*முதலுதவி செய்யும் முன், "தைரியமாக இருங்க; இது சாதாரணமானதுதான்' என நம்பிக்கை வார்த்தைகளை சொல்ல வேண்டும்.
*ஒருவர் மயக்க நிலையில் இருந்தால், கழுத்து, முதுகெலும்பில் அடிபடாமல் இருக்க, சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இல்லையெனில், வாயில் உள்ள ரத்தம் அல்லது உமிழ்நீர், மூச்சுக்குழாய் வழியாக சென்று இறப்பை ஏற்படுத்தும்.
*காயம் ஏற்பட்டு ரத்தபோக்கு ஏற்பட்டால், சுத்தமான துணி அல்லது பஞ்சால் அழுத்தி பிடித்து, அதிக இறுக்கமின்றி கட்டுப்போட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
*உறுப்புகள் துண்டாகிவிட்டால், அதை பாலிதீன் பையில் வைத்து, ஐஸ் கட்டிகளின்மீது எடுத்துச் செல்ல வேண்டும்.
கழுத்து எலும்புமுறிவு ஏற்பட்டால், தலை ஆடாமல் இருக்க, தலையைச் சுற்றி செங்கல் மற்றும் துணியை வைக்க வேண்டும்.
*வலிப்பு ஏற்பட்டால், அருகில் எந்த பொருளும் இருக்காதவாறு செய்ய வேண்டும். தலையின்
அடியில் துணி வைக்க வேண்டும். அப்போதுதான், தலை அடிபடாமல் இருக்கும். குழந்தை எனில், மெத்தையில் படுக்கவைத்து, இருபுறமும் தலையணை வைக்க வேண்டும்.
*மயக்கம் அடைந்துவிட்டால், அவரது கால்களை மேல்நோக்கி தூக்க வேண்டும். இதன்மூலம் ரத்த ஓட்டம் சீராக வாய்ப்புள்ளது.
*மயக்கம் வருகிற மாதிரி இருந்தால், மலம்கழிப்பது போல் உட்கார்ந்து (இந்தியன் டைப்), தலையை முன்பக்கமாக வைத்து அழுத்த வேண்டும்.
*பாம்பு கடித்தால், அந்த இடத்தை துணியால் சுத்தப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்து வரவேண்டும். வீட்டு விலங்குகள் கடித்தால், சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
*நெஞ்சுவலி வந்தவர்களை "செமி ஸ்லீப்பில்' படுக்க வைக்க வேண்டும். ஏற்கனவே நெஞ்சுவலிக்கு மாத்திரை எடுப்பவர் என்றால், அதை கொடுக்க வேண்டும்.
*பக்கவாதம் ஏற்பட்டால், அவரை கைத்தாங்கலாக படுக்க வைக்க வேண்டும். உள்உறுப்புகள் செயல்படுகிறது என உறுதி செய்தபிறகே குடிக்க கொடுக்க வேண்டும்.
*மூக்கில் ரத்தம் வழிந்தால், மூக்கை பொத்திக் கொண்டு, வாய் வழியே மூச்சு விடவேண்டும். அல்லது மூக்கின்மீது ஐஸ் கட்டிகளை வைத்து உத்தடம் கொடுக்கலாம்.
*எலும்புமுறிவு ஏற்பட்டால், அந்த இடத்தில் அட்டை அல்லது ஸ்கேலால் கட்டி, கழுத்துடன் இணைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
*கம்பியோ, வேறு பொருளோ குத்திவிட்டால், அதை வெளியே எடுக்காமல் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
*தீக்காயம் ஏற்பட்டால், தண்ணீரால் சுத்தப்படுத்துவதோடு, கொப்புளங்களை உடைக்கக்கூடாது. ரசாயன தீயால் பாதிக்கப்பட்டால், டாக்டரிடம் செல்லும் வரை, காயம்பட்ட இடங்களில் லேசாக தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
good..அருமையான தகவல்கள் .... நன்றி !!!
ReplyDelete