கொள்கை பிடிக்கவில்லை - ஆட்சியாளரிடமிருந்து பிரிந்த மகள்
உஸ்பெகிஸ்தான் அதிபரின் கொள்கை, கோட்பாடுகளில் விருப்பம் இல்லாத அவரது மகள், தந்தையுடன் தொடர்பில்லாமல் வாழ்கிறார். முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு உஸ்பெகிஸ்தான், இந்த நாட்டின் அதிபர் இஸ்லாம் கரிமோவ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகளான, லோலா கரிமோவா தில்யாவ்வா, 35, பிரான்ஸ் நாட்டின், பாரிசில் உள்ள, "யுனெஸ்கோ' அமைப்பில், உஸ்பெகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாக, லோலா இருக்கிறார். சமீபத்தில், பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த லோலா, தந்தையின் கொள்கை கோட்பாடுகளில் விருப்பம் இல்லாததால், அவரை விட்டு பிரிந்து வந்து விட்டதாக தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: இந்த விவகாரத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கும், என் தந்தைக்கும் குடும்ப ரீதியாக, எந்தவொரு உறவும் இல்லை. குடும்ப சம்பந்தமாக, நாங்கள் இருவரும் சந்திப்பது கூட கிடையாது. அதுபோல், எனக்கு அரசியலிலும் எந்த ஆர்வமும் இல்லை. என் இரண்டு பெண் குழந்தைகளுக்கு, நல்ல தாயாக இருக்கவே விரும்புகிறேன். என் தந்தையின் ஆட்சியில், வேலையின்மை அதிகரித்துள்ளது. படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். இதனால் தான் தீவிரவாதமும் அதிகரித்துள்ளது. ஆனால், இதை அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாது. நான், உஸ்பெகிஸ்தானின் அதிபர் மகள் என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. என் கொள்கை, கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, நான் அறியப்படவேண்டும். இதுதான், என் விருப்பம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Post a Comment