சிறு பள்ளிவாசல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமாக உள்ளது - எகிப்து மத விவகார அமைச்சர்
(Tn) சிறிய பள்ளிவாசல்களை தவிர்த்து பெரிய பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்மா கடமையை நிறைவேற்றும்படி எகிப்து மத விவகார அமைச்சர் மொஹமட் முக்தார் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
‘தமது வெள்ளிக்கிழமை தொழுகையை முறையாக மேற்கொள்ள அனைவரும் பெரிய பள்ளிவாசல்களில் அதனை மேற்கொள்ளுங்கள்’ என்று முக்தார் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களிடம் கூறினார். எகிப்தில் இருக்கும் பெரும்பாலான சிறு பள்ளிவாசல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமாக இருப்தாக அவர் குறிப்பிட்டார்.
‘சிறிய பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதை சட்டத்தால் மாத்திரம் தடைசெய்துவிட முடியாது’ என்று கூறிய அவர், ‘நாம் இந்த பள்ளிவாசல்களை தவிர்த்தால் அவை செயலிழந்துவிடும்’ என்றார். சிறிய பள்ளிவாசல்களில் ஜும்மா தொழுகையை நடத்துவதற்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் தடைவிதிக்க மத விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது. அனுமதி பெறாத மதப் போதகர்கள் மற்றும் இமாம்களை ஒடுக்கும் செயற்திட்டத்தின் கீழே அரசு இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளது.
முன்னதாக எகிப்தின் மதிப்புக்குரிய மதக் கல்வி பெறும் நிறுவனமான அல் அஸ்ஹரின் அனுமதி பெறாத சுமார் 45,000 இமாம்களுக்கு தடைவிதிக்க மத விவகார அமைச்சு தீர்மானித்தது.
சிறிய பள்ளிவாசல் அல்லது அரபு மொழியில் சாவ்யா என்றழைக்கப்படும் தொழுகை அறைகள் பெரும்பாலும் 80 சதுர மீற்றர்களுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. இவ்வாறான பள்ளிவாசல்களில் ஜும்மா தொழுகை நடத்தவே அரசு தடைவிதிக்கவுள்ளது. எகிப்தில் சுமார் 100,000 பள்ளிவாசல்கள் மத விவகார அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் சுமார் 60,000 பேரே இமாம்கள் மற்றும் மதப் போதகர்களாக பதிவாகியுள்ளனர். அதேபோன்று அமைச்சின் கீழ் சுமார் 13,000 சாவ்யாக்கள் பதிவாகியுள்ளன. ஆனால் நாடு பூராகவும் எண்ணற்ற சாவ்யாக்கள் உள்ளன.
இந்த தடைகள் மூலம் மதப் போதகர்கள் தமது போதனைகளில் அரசியல் பேசாமல் இருப்பதை உறுதி செய்ய மத விவகார அமைச்சு முயன்று வருகிறது. இதன்படி மத விவகார அமைச்சு அல் அஸ்ஹரில் பட்டப்படிப்பை முடிக்காத மதப் போதகர்களுக்காக வருடாந்தம் 70 மில்லியன் எகிப்து பெளண்ட்களை (சுமார் 10 மில்லியன் டொலர்) செலவு செய்கிறது.
இந்நிலையில் மதப் போதகர்களை தாக்குவதற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்டம் வரையப்பட்டு வருவதாக முக்தார் குறிப்பிட்டார். ‘மதப் போதகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் களத்தில் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். பள்ளிவாசல்களுக்கான மதிப்பு மற்றும் புனிதத் தன்மையை மீளக் கொண்டுவர முயற்சிக்கிறோம்’ என்றார் மொக்தார். அதேபோன்று மதப் போதகர்கள் கட்டாயம் அரசியல் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இதில் மொக்தார், எகிப்தின் முன்னாள் தலைமை முப்தி அலி கொமாவையும் அண்மையில் விமர்சித்திருந்தார். முன்னாள் முப்தி பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
Post a Comment