Header Ads



ஈரான் சிறையில் இருந்த மனித உரிமை ஆர்வலர் விடுவிப்பு

கடந்த 2011-ம் ஆண்டில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதினேஜாத் பதவியில் இருந்தபோது வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான நஸ்ரின் சோடௌடே கைது செய்யப்பட்டார். மனித உரிமைகளைக் காக்க முயன்றதால் கைது செய்யப்பட்ட இந்த சம்பவத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பயத்தினால் விளைந்த நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். இவர் மட்டுமின்றி கடந்த 2009 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் பனிரெண்டுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறை வைக்கப்பட்டனர்.

தற்போது ஈரானின் புதிய அதிபரான ஹசன் ருஹானி அடுத்த வாரம் தனது அமெரிக்கப் பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார். இந்த நிலையில் அவர் அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவரது வாக்குறுதிகளின் வெளிப்படைத் தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. நஸ்ரினுடன் விடுதலை செய்யப்பட்டவர்களில் மோஷென் அமின்சடே, சீர்திருத்தவாதியான அதிபர் முஹமது கட்டாமியின் அரசில் துணை வெளியுறவுத்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்தவர் ஆவார். அதே அரசில் வணிகத்துறையில் துணை அமைச்சராகப் பணியாற்றிய பைசொல்லா அரப்சொர்கி, பிரபல பத்திரிகையாளரான இசா சஹார்கிஸ் போன்றோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மிர் ஹுசைன் முசாவிக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட மிர் டாஹெர் முசாவியும் விடுவிக்கப் பட்டுள்ளார். மேலும் ஆறு பெண் பத்திரிகையாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டின் மனித உரிமை சர்வதேச பிரச்சாரக் குழு ருஹானியின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளது. வரும் திங்களன்று ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் ருஹானி தனது உரையை நிகழ்த்த உள்ளார். அத்துடன், ஈரான் நாட்டின் அவசர மனித உரிமைகள் நிலையை மேம்படுத்தவும் அதிபர் ருஹானி உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று இந்தக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.