Header Ads



முஸ்லிம்களும், சிங்கள-பௌத்த தேசியவாதிகளும்

(Sudha Ramachandran + நித்தியபாரதி)

"இது சிங்கள-பௌத்த நாடு. நாங்கள் பௌத்த கோட்பாடுகள், கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வு முறைமை போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும்" என சிங்கள ராவயவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவைச் சேர்ந்த சிங்கள-பௌத்த தேசியவாதிகள், சிறுபான்மையினருக்கு எதிரான தமது யுத்தத்தின் புதிய வடிவம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிறிலங்காத் தீவின் சிறுபான்மை மக்களான தமிழ் மக்கள் மீது பல பத்தாண்டுகளாக தமது யுத்தத்தை மேற்கொண்டு வந்த சிங்கள-பௌத்த தேசியவாதிகள் தற்போது பிறிதொரு சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீது யுத்தத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

2011லிருந்து சிறிலங்காவில் உள்ள பள்ளிவாசல்கள், முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது பௌத்த பிக்குகளின் தலைமையில் சிங்களக் காடையர்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரலில், சிறிலங்காவின் வர்த்தகத் தலைநகரான கொழும்பிலிருந்து வடக்காக 150 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தம்புள்ள பள்ளிவாசல் மீது சிங்களக் காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாண்டின் ஆரம்பத்தில், சிங்கள-பௌத்த குழுவான பௌத்த சக்தியின் இராணுவம் எனக் கூறப்படும் பொது பல சேன, ஹலால் தரப்படுத்தப்பட்ட உணவு முறைமை நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஒரு மாதத்தின் முன்னர், கொழும்பிலுள்ள புதிய பள்ளிவாசல் ஒன்றை மூடுமாறு சிங்களக் காடையர் குழுவொன்று முஸ்லீம் மக்கள் மீது வன்முறையை மேற்கொண்டது.

முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைய மாதங்களில் தொடர்ச்சியாக நடைபெறுவதுடன், பயங்கரமானவையாகவும் காணப்படுதாக கொழும்பிலுள்ள முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டில் மாத்திரம் முஸ்லீம்களைக் குறிவைத்து 160 தாக்குதல்கள் வரை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவின் மொத்த சனத்தொகையான 20 மில்லியன் மக்களில் 70 சதவீதத்தினர் பௌத்தர்கள். இவர்கள் அனைவரும் சிங்களவர்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறீஸ்தவர்கள் போன்றவர்கள் சிறிலங்காவில் வாழும் பிரதான சிறுபான்மை மதத்தவர்களாவர். இந்துக்கள் அனைவரும் தமிழர்களாக உள்ள அதேவேளையில், முஸ்லீம்கள் மற்றும் கிறீஸ்தவர்கள் சிங்களம் அல்லது தமிழ் மொழியைப் பேசுகின்றனர். இது அவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து அமைகிறது.

சிறிலங்காவானது பௌத்த நாடாக இல்லாத போதிலும், 1978ல் உருவாக்கப்பட்ட இதன் அரசியல் யாப்பில், அனைத்துக் குடிமக்களும் சுதந்திரமாக தமக்கு விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளையில், இந்த அரசியல் யாப்பில் பெரும்பாலான இடங்களில் பௌத்த மதத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 'புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது இந்த நாட்டின் கடமையாகும்' என இந்த அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிறிலங்காவை ஆண்ட அரசாங்கங்கள் தாம் பௌத்தத்தின் பாதுகாவலர்கள் எனப் பிரகடனப்படுத்தினர். பௌத்தத்தின் முக்கிய கோட்பாடான சமாதானத்தை நாட்டில் நிலைநிறுத்துவதற்குப் பதிலாக சிறிலங்கா ஆட்சியாளர்கள் புத்த பிக்குகளுக்கு புத்த சிலைகள் மற்றும் விகாரைகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டி அவற்றைப் பரிசாக வழங்கினர்.

இதேவேளையில், பௌத்த பிக்குகளின் தலைமையில் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் ஆட்சியாளர்கள் பாராமுகமாகச் செயற்பட்டனர். இவ்வாறான வன்முறைகள் எதனையும் இவர்கள் கண்டுகொள்ளாது மறைமுகமாக இவற்றுக்கு ஆதரவு வழங்கினர். எடுத்துக்காட்டாக, கடந்த மாதம் கொழும்பில் ஏற்பட்ட வன்முறையின் போது எந்தவொரு புத்த பிக்கும் கைதுசெய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் தம்புள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அது அழிவடைந்த போதிலும், எவரும் கைதுசெய்யப்படவில்லை. பதிலாக, பள்ளிவாசல்களை வேறிடங்களுக்கு மாற்றவேண்டும் என காடையர்கள் கோரிக்கை விடுத்த போது சிறிலங்கா அரசாங்கம் இக்கட்டளைக்கு பணிந்து செயற்பட்டது.

"முஸ்லீம்களுக்கு எதிரான சில வன்முறைகளில் முஸ்லீம்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹலால் சான்றுபடுத்தப்பட்ட உணவுகள் நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையானது பொருளாதாரத்துடன் தொடர்புபட்டது" என பெயர் குறிப்பிட விரும்பாத முஸ்லீம் வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

இறைச்சிக்கான ஹலால் சான்றுபடுத்தலுக்கான கட்டணத்தை சிறிலங்காவின் இஸ்லாமிய கல்விமான்களின் பிரதான அமைப்பான All Ceylon Jamiyyathul Ulema - ACJU அறவிடுகிறது. இதற்கு சிங்கள வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரும் கட்டணத்தை வழங்க வேண்டியுள்ளது.

"முஸ்லீம்கள் மட்டுமே இறைச்சிக்கான ஹலால் சான்றுபடுத்தலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லீம்களால்லாதவர்களுக்கு இந்தச் சான்று தேவைப்படாத போதிலும் இவர்களும் இதற்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டியுள்ளனர்" என பொது பல சேனவின் நிறைவேற்று இயக்குனரான டிலந்த விதனேஜ் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களுக்குச் சொந்தமான இறைச்சி விற்பனை நிலையங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. "பௌத்தர்களின் சமய நம்பிக்கைக்கு எதிராக முஸ்லீம்கள் செயற்படுகின்றனர். இதனை சிங்களவர்கள் சவால்கொள்ள வேண்டும்" என முஸ்லீம்களின் இறைச்சி விற்பனை நிலையங்களின் மீதான தாக்குதலை, கால்நடைகள் மத நோக்கங்களுக்காக பலியிடப்படுவதை அரசியல் யாப்பில் தடுக்கப்பட வேண்டும் எனக் கோரும் சிங்கள-பௌத்த நிறுவனமான 'சிங்கள ராவய' வைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் நியாயப்படுத்தியுள்ளார்.

"இது சிங்கள-பௌத்த நாடு. நாங்கள் பௌத்த கோட்பாடுகள், கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்வு முறைமை போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக செயற்பட வேண்டும்" என சிங்கள ராவயவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

'பெரும்பான்மையினரின் கலாசாரத்தை மதிக்குமாறு மட்டுமே நாங்கள் முஸ்லீம்களைக் கோருகிறோம்' என விதனேஜ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காத் தீவானது சிங்கள-பௌத்தர்களின் தேசம் என்பதை வாதிடுவதற்கும் நியாயப்படுத்துவதற்கும் சிங்கள-பௌத்த கடும்போக்காளர்கள் மகாவம்சம் என்கின்ற ஆவணத்தை முன்வைக்கின்றனர். இந்த மகாவம்சமானது கி.பி ஆறாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குவான மகாநாம என்பவரால் எழுதப்பட்டது. இது பின்னர் 16 தொடக்கம் 18ம் நூற்றாண்டுகளில் திருத்தி எழுதப்பட்டது. மகாவம்சமானது ஒரு கட்டுக்கதையாகவே காணப்படுகிறது.

சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தளவில் மகாவம்சத்தின் படி இதில் சிங்களதீப – சிங்களவர்களின் தேசம்- மற்றும் தம்பதீப – பௌத்த மதத்திற்குரியது- போன்ற கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் சிறிலங்காத் தீவானது தமக்கு மட்டுமே சொந்தமானது என நம்புகின்றனர்.

மகாவம்சத்தில் இரண்டு முக்கிய கட்டுக் கதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது இதில் சிங்கள இனத்தின் நிறுவுனரான இளவரசர் விஜய மற்றும் கி.மு 2ம் நூற்றாண்டில் இடம்பெற்ற துட்டுகாமினி-எல்லாளன் யுத்தம் ஆகிய இரு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பௌத்த சிங்கள கருத்தியலை சான்றுபடுத்துவதாக பௌத்தர்கள் நம்புகின்றனர்.

மகாவம்சத்தின் படி, இளவரசர் விஜய என்பவர் சிங்கத்திற்கும் மனித உயிரினத்தைச் சேர்ந்த இளவரசி ஒருவருக்கும் பிறந்த சிங்கபாபு என்பவரின் மகனாவார். சிறிலங்காவுக்கு விஜயாவும் 700 பேரும் வருகை தந்ததாகவும், இதனைத் தொடர்ந்து பௌத்தமானது சிறிலங்காவில் தோன்றியதாகவும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய சிறிலங்காவில் காலடி எடுத்த வைத்த போது புத்தர் மோட்ச நிலைக்குச் சென்றதாகவும் இதனை பௌத்தத்திற்கும் சிங்கள இனத்திற்கும் இடையிலான தொடர்பு என மகாவம்சம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள அரசரான துட்டகைமுனுவுக்கும் தமிழ் அரசரான எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் எல்லாள மன்னன் தோற்கடிக்கப்பட்டதாகவும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான யுத்தமானது பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதை மகாவம்சம் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான நிலையில் பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் யுத்தம் நடாத்தினர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறிலங்காவில் வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் முஸ்லீம்கள் மீது பௌத்த கடும்போக்காளர்கள் தமது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கினர்.

"நாங்கள் முஸ்லீம்களின் தீவிரவாதம் தொடர்பாக கவனம்செலுத்துகிறோம்" என பொது பல சேன ஏன் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை மேற்கொள்கின்றனர் என்பதை இதன் நிறைவேற்று இயக்குனர் விதனேஜ் நியாயப்படுத்துகிறார். சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடனேயே பௌத்த காடையர்கள் முஸ்லீம்களின் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். பொது பல சேனவானது சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாயவின் ஆதரவுடன் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

"சிறிலங்கா அரசாங்கமானது தீவிரவாத பௌத்த அமைப்புக்களுடன் இணைந்து நாட்டில் பௌத்தவாதத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகிறது" என முஸ்லீம் வர்த்தகர் குறிப்பிட்டார். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், இந்து ஆலயங்கள் உள்ள நிலங்கள் உட்பட பெரும்பாலான நிலங்களை 'பௌத்த பிரதேசங்கள்' என சிறிலங்கா அரசாங்கத்தின் தொல்பொருளியல் திணைக்களம் ஆவணப்படுத்தியுள்ள போதிலும், பௌத்தர்களுக்குச் சொந்தமற்ற நிலங்களை பௌத்த காடையர்கள் தமது நிலங்கள் எனக் கூறி அவற்றை கையகப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதனால் இவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். சிறிலங்காத் தீவில் கிறீஸ்தவர்கள், இந்துக்கள் போன்றோர் வணங்கும் இடங்களைக் குறிவைத்து பௌத்த காடையர்களை வன்முறைகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான வன்முறைகள் ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்படுகின்ற அதேவேளையில் நாட்டில் மதங்கள் அனைத்தையும் மதித்து ஒற்றுமையுடன் செயற்படுவதற்கான சில முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள மதத் தீவிரவாதத்தை எதிர்த்து மெழுகுதிரி ஏற்றி அமைதியான பேரணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

*Dr. Sudha Ramachandran is an independent journalist/researcher based in Bangalore, India. She writes on South Asian political and security issues.

1 comment:

  1. இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் மதங்களையும், அவர்களின் கலாசாரங்களையும் பேணத்தக்க வகையில் முன்னைய அரசாங்கங்களில் இந்து சமய கலாச்சார அமைச்சு, முஸ்லிம் சமய விவகார அமைச்சு என தனித்தனி அமைச்சுக்களும் இருந்துள்ளன.

    ஆனால் அவையெல்லாம் இன்றை அரசாங்கத்தினால் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டு இச்சிறுபான்மைச் சமூகங்களின் விவகாரங்களைக் கையாளும் பொறுப்புக்கள் பௌத்த சாசன அமைச்சு என்ற பேரின சமூகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

    இதன் மூலமே இன்றைய சிறுபான்மைச் சமூகங்களுக்கான நெருக்குதல் சிங்கள ராவணா, பொதுபல சேனா போன்ற பௌத்த கடும்போக்கு அமைப்புக்களாலும், இலங்கை அரச அமைச்சரவையிலுள்ள சம்பிக்க ரணவக்க போன்ற இன மத வாத அமைச்சர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன.

    இந்த நிலைமையிலும், இலங்கையின் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து தமது ஆதரவுகளை வழங்கி மேலும், மேலும் சிறுபான்மைச் சமூகங்கள் நெருக்குவாரப்படுவதற்கே வழிசமைத்தும் வருகின்றன.

    குறிப்பாக ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கடந்த வருடம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது இத்தகைய பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை 'காவியுடைப் பயங்கரவாதம்' என பகிரங்கமாகக் கண்டித்துப் பிரச்சாரம் செய்தே முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றது.

    கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை நிர்ணயிக்கின்ற சக்தியாகவும் அது தெரிவாகியது.

    எனினும் அக்கட்சியின் அரசியல் தலைமைத்துவங்களின் சுயநலன்களுக்காக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை மொத்தமாக அரசாங்கத்திற்கே விற்று வரப்பிரசாதங்களை அது பெற்றுக் கொண்டது வரலாறாகும்.

    இந்நிலையில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரதிநிதிகளில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே இலங்கையில் கடும்தேசியவாதப் பிரச்சாரங்களுக்கும், பௌத்த மேலாதிக்க நடவடிக்கைகளுக்கும் மாற்றம் ஏற்படுமேயன்றி இந்த சுயநல அரசியல்வாதிகள் தேர்தலுக்குத் தேர்தல் மறுபிறப்பெடுத்து சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளை அரசாங்கத்திற்கு விற்றுப் பிழைப்பு நடாத்தும் காலமெல்லாம் இந்நிலைமை இன்னும் தீவிர வளர்ச்சியே அடையும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.