மிகவும் கேவலமான இழிசெயலை இந்த அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது - ரவூப் ஹக்கீம்
(டாக்டர். எ.ஆர்.ஏ. ஹபீஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சமூகத்தின் பாதுகாப்புக் கேடயம் என்றும், அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ தமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்ட அக் கட்சியின் தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து கொண்டே தமது கட்சி அதனை நெருக்கடிக்குள் தள்ளுவதாகவும், கடிவாளத்தைக் கையில் வைத்துக்கொண்டு சமூகத்தின் ஒரு தார்மீகக் கடமையைச் செய்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.
மாத்தளை ஹரிசன்ஸ் ஜோன்ஸ் வீதியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். ஏராளமானோர் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாண சபைக்கான தேர்தலை நடாத்துமாறு சர்வதேசத்தினால் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக வடக்கில் ஏற்படவுள்ள சரிவை சரி செய்துகொள்வதற்காக மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளை உரிய காலத்திற்கு முன்னரே கலைத்து விட்டு தேர்தல் நடாத்தப்படுகின்றது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மிகவும் இக்கட்டான கால கட்டத்தில் நடைபெறும் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் சர்வதேசத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்தத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்துத்தான் இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படப்போகின்றது.
சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் தலைவர்கள் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும். எதற்கும் அஞ்சாத ஓர் அரசு ஆட்சியில் இருக்கின்றது. ஆனவம், அகங்காரத்துடன் மிகப் பலமாக இருப்பதாக அரசாங்கம் இறுமாப்புடன் இருக்கின்றது. ஒரேயொரு விஷயத்திற்குப் பயப்பட்டது. அதுதான் வடமாகாணத் தேர்தல். இத் தேர்தலை நடாத்தாமலிருப்பதற்கு காரணம் தேடலாமா என இழுத்தடிக்கப்பட்டது. ஆனால் அதனை நடாத்தியே ஆக வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பது பற்றி ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் என்ன நடக்கப் போகின்றது எனத் தெரியும்.
அவ்வாறிருக்க, இது ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டுவர வேண்டுமென்று அதிகபிரங்கித்தனமாக பேசுபவர்கள் ஏராளமாக மலிந்துள்ள காலம் உண்மை நிலைவரம் என்ன? நாட்டு நிலைவரம் என்ன என்பன மிகத் துலாம்பரமாகத் தெரிந்த விடயங்களாகும். இவ்வாறான குழப்ப நிலையில் தான் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடனான ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் காட்டமாக வெளிக்காட்டலாமென வடிகாண் தேடிக்கொண்டிருப்பர்வர்கள் மிகவும் நேர்மையாகச் சிந்திக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி நான் தரக்குறைவாகவும், கேவலமாகவும் பேசுவது கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சிக்காக நான் அரசாங்கத்திலிருந்து வெளியேற, வெளியேற்றப்பட நேர்ந்தது ஒரு வருத்தம். அப்போதைய ஆட்சி கவிழந்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏற்பட உதவினோர் ஆனால் அந்த ஆட்சியை இரண்டரை வருடங்களாவது ரணில் விக்கிரமசிங்கவினால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. போகப் போகப் பலவீனப்பட்டுக் கொண்டு செல்லும் ஐக்கிய தேசியக் கட்சியால் மாகாண ஆட்சியையோ, மத்திய ஆட்சியையோ இப்போதைக்கு கைப்பற்றவே முடியாது.
இந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெற விடாது தடுப்பதற்கே நாங்கள் எத்தனிப்பதாக கூறுகின்றனர். அவர்களது வெற்றியை நாங்கள் தடுக்கத் தேவையில்லை. அவர்களே தடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நாங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியை அப்பொழுது ஆட்சியில் அமர்த்துவதற்காக நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். வீட்டில் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லை.
அப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சிக்காக நான் மடவளையிலும், கம்பளையிலும், தெல்தோட்டையிலுமாக எனது பன்னிரண்டு முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆதரவாளர்களை பலி கொடுத்திருக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியை பதவியில் அமர்த்துவதற்கு நான் கொடுத்த விலை பெறுமதியான பன்னிரண்டு மனித உயிர்கள். அரசாங்கத்திற்கு நாங்கள் கூஜாத் தூக்குபவர்களாகவும், அரசாங்கத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருப்பவர்களாவும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் கூறித்திரிகின்றார்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதற்கு எங்களுக்கு குறை கூறிப் பயனில்லை.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தச் சமூகத்தின் பாதுகாப்புக் கேடயம். இந்தக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கோ, எதிர்கட்சிக்கோ எமது மக்கள் இடமளிக்க மாட்டார்கள். நாங்கள் வீரவசனங்கள் பேசிவிட்டு, கிழக்கில் அரசாங்கத்தோடு ஆட்சியமைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பல்லவிபாடுகின்றனர். அப்பொழுது கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நாங்கள் ஆட்சி அமைத்திருந்தால் இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கும் என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தோம் அப்படி நடந்திருந்தால் கிழக்கு மாகாண ஆட்சி இரண்டு மாதங்களாவது நீடித்திருக்காது எமது உறுப்பினர்களில் சிலரை விலைக்கு வாங்கியிருப்பார்கள் அவர்கள் அரசாங்கத்தினால் காவு கொள்ளப்பட்டிருப்பவர்கள்.
ஏனைய கட்சி உறுப்பினர்களை காவு கொள்ளும் மிகவும் கேவலமான இழி செயலை இந்த அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது. எங்களது கட்சி உறுப்பினர்களையும் பறித்தெடுத்து, பதவிகொடுக்கும் கழுத்தறுப்பு வேலைச் செய்துகொண்டு அரசாங்கம் எங்களைக் கருவறுக்கின்றது. உள்ளே வைத்துக்கொண்டே அரசாங்கம் எமது கட்சியை பலவீனப்படுத்தப் பார்க்கின்றது. நாங்கள் மிகவும் நிதானமாக இருந்து காய் நகர்த்துகின்றோம். மிகவும் சமயோசிதமாக நடந்துகொண்டு இந்த ஜனாதிபதிக்கு நாங்கள் உரிய மரியாதையைக் கொடுக்கின்றோம்.
அரசாங்கத்தில் இருந்துகொண்டே நாம் அதனை நெருக்கடிக்குள் தள்ளுகின்றோம். கடிவாளத்தைக் கையில் வைத்துக் கொண்டு சமூகத்தின் ஒரு தார்மீகக் கடமையச் செய்துகொண்டிருக்கின்றோம். இதை முஸ்லிம்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சுக்கானம் எங்களிடம் இருக்கின்றது. கிழக்கு கை நழுவிப் போனது போன்று வடக்கும் பறிபோகப் போகின்றது என்ற அச்ச உணர்வு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் நான் தங்கியிருப்பவன் அல்லன். அரசாங்கம் தான் எங்களில் தங்கியிருக்கின்றது. அதற்காக அரசாங்கம் எதனையும் செய்யலாம். எங்களைப் பழி வாங்கலாம்.
அரசாங்கத்திற்குள் வேறு முஸ்லிம் அமைச்சர்களும் உள்ளனர். அவர்களது நிலை வேறுவிதமானது. ஆனால், அமைச்சர் பௌசி விதிவிலக்கானவர். அமைச்சர் பௌசி, ஆளுநர் அலவி மௌலான ஆகியோர் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு சமூகத்தின் விமோசனத்திற்காகப் பேசுகின்றார்கள். எனக்கும் பக்கபலமாக இருந்து ஒத்துழைக்கின்றார்கள். ஆனால், உள்ளேயிருந்து கொண்டு குரல் எழுப்பவும் அவர்கள் இருவராலும் வெளியில் வந்து என்னைப் போல பகிரங்கமாக எதையும் பேச முடியாது. ஆனால் நான் உள்ளும், புறமும் பேசுகின்றேன். நான் இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சுபவன் அல்லன்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பத்திலிருந்தே மாகாண சபை தேர்தலை பகிஷ்கரித்து வந்தது. ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது. அப்பொழுது ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதில் உயிர்களைப் பறி கொடுத்திருக்கின்றோம்.
அரசாங்கம் கொண்டுவர பதின்மூன்றாம் திருத்திச் சட்டத்தை நீக்கும் முயற்சியையும், காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியையும் நாம் முறியடித்திருக்கிறோம். வடக்குத் தேர்தலுக்கு முன்னர் அதிகாரங்களை பறித்துவிட்டு முதல் அமைச்சரையும் ஏனைய மாகாண அமைச்சர்களையும் தொடர்ந்தும் கைபொம்மைகளாக வைத்திருக்கவே எத்தனித்தார்கள் என்றார்.
நயவஞ்சகம், முதுகில் குத்துதல், வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுதல். ஊருக்குத்தான் உபதேசம் இந்த சொற்களுக்கு ரவுப் ஹக்கீமின் அகராதியில் இருந்து விளக்கம் தரவும்
ReplyDeleteதேர்தல் காலங்களில் சத்தம் ஆவேசத்துடன் வருகின்றது ஆனால்ல்ல்ல்ல்ல்..
ReplyDeleteதேர்தல் அல்லாத காலங்களில் வேறும் காற்றுமட்டும்தான் வாயில் இருந்து வருதே ஏன் கண்ணா?
அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் ஹக்கீம் அரசின் உள்ளக விவகாரங்களை இவ்வாறு சந்திகளில் மேடையமைத்து விமர்சிப்பது கேவலத்திலும் கேவலமாகும்.
ReplyDeleteமாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கமே எத்தகைய அழுத்தங்களும் இன்றி நடாத்துவதாக வட மாகாணத்தில் ஜனாதிபதி பகிரங்கமாகத் தெரிவித்திருக்கும் நிலையில், அமைச்சர் ஹக்கீம் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கமையவும், வட மகாணத்தில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சரிவைச் சமப்படுத்தவுமே முன்கூட்டியே மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான தேர்தலை நடாத்துவதாகவும் அப்பட்டமாகப் போட்டுடைத்திருப்பது அரசியல் நாகரீகமான செயலன்று.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான செயற்பாடுகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக இப்போது கூறும் ஹக்கீம், ஒரு வருடத்திற்கு முன்னரும் இவ்வாறுதான் கிழக்கில் சந்திக்குச் சந்தி உசுப்பேத்தும் வகையில் உரையாற்றி கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையிட்டு அரசாங்கத்தின் காலடியில் கொண்டு சென்று குவித்திருந்தார். இப்போது மத்திய மற்றும் வட மேல் மாகாண முஸ்லிம்களின் வாக்கு வியாபாரத்திற்காக அவர் மீண்டும் வேதாளம் முருங்கையில் தாவிய கதைபோன்று ஓலமிடுகின்றார்.
இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இவரைப்போன்ற அரசியல் வியாபாரிகள்தான். சிறுபான்மைத் தலைவர்களிடம் ஒற்றுமை இருக்க வேண்டும் என இப்போது வலியுறுத்தும் ஹக்கீம், முஸ்லிம் கவுன்ஸில் தலைவர்கள் மேற்கொண்ட அரசியல் தலைமைத்துவங்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளுக்கு என்ன காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியிருந்தார் என்பதைப் பகிரங்கப்படுத்துவாரா?
மிகவும் பலவீனமான நிலையில் அமைக்கப்பட்ட இந்த மகிந்த அரசாங்கத்திற்கு அதீதமான பலத்தை 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தன் மூலம் அள்ளி வழங்கியது அமைச்சர் ஹக்கீமும், அவரது நாடாளுமன்ற சகாக்களும்தான் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது. இதற்காக அவரே சமீபத்தில் வருத்தப்பட்டிருந்தார் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகின்றேன்.
அரசாங்கத்தின் மீதான் ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் காட்டாமல் இப்போது ஹக்கீம் என்ன ஆதரவுக் குரலா எழுப்புகின்றார்? அப்படியென்றால் அவரும் சேர்ந்துதான் வடிகால் தோண்டிக்கொண்டிருக்கின்றாரா?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
தொடர்ச்சி...
ReplyDeleteஸ்ரீ.ல.மு.கா. முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக் கேடயமாக இருந்தால் அது சமூகத்தின் பாதுகாப்புக்காக எத்தகைய அர்ப்பணிப்புக்களையும் எப்போதும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் அது அக்கட்சியின் உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காகவே அவசியமான நேரங்களில் சமூகத்தை விலைபேசி விட்டு அதன் உறுப்பினர்களைப் பாதுகாத்து கட்சியைப் பாதுகாத்து வந்துள்ளது.
மு.கா. உறுப்பினர்கள் உண்மையில் சமூகத்தின் போராளிகளாக இருந்திருப்பின் அவர்களை இந்த அரசாங்கத்தினால் என்ன விலை கொடுத்தும் வாங்க முடிந்திருக்காது. த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்களைப் பாருங்கள். அவர்களை இந்த அரசாங்கத்தினால் எப்போதாவது வாங்க முடிந்திருக்கின்றதா?
ஆனால் மு.கா. வின் நடாளுமன்ற மற்றும் மாகாண, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இலட்சங்களைச் செலவழித்து கோடிகளை உழைக்கும் நோக்கில் மக்கள் முன்வந்த அரசியல் வியாபாரிகள். அதனால்தான் அவர்களால் விலைபோக முடிகின்றது. இதற்கு சமூகத்தைக் குறை கூறிப் பயனில்லை. சமூகம் மிகத் தெளிவாக இவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தே வருகின்றது.
அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவது என்பது எவ்வளவு துரோகத்தனமான செயல். இதனால் சமூகத்திற்கு அரசாங்கத்தின் எதிர்ப்பே பலனாகும். வேறு என்ன நன்மை சமூகத்திற்கு கிடைக்கும்?
ஆனால் தேர்தல் காலத்தில் இப்படியெல்லாம் பொரிந்து தள்ளிவிட்டு ஆட்சியமைக்க அரசாங்கத்திற்கு தனது உறுப்பினர்களை விற்பனை செய்வது என்பதுதான் ஹக்கீமின் அகராதியில் நாணயமோ?
அமைச்சர் ஹக்கீம் உண்மையில் அரசாங்கத்தில் தங்கி இருப்பவர் அல்ல. அவர் தொங்கிக் கொண்டிருப்பவர். அதனால்தான் தெரிவுக்குழுவில் அவரை அப்பட்டமாகப் புறக்கணித்தபோது, தெரிவுக்குழு அறிக்கையைக் குப்பையில்தான் வீசவேண்டும் என சூளுரைத்து விட்டும் அவர் இன்னமும் அதே குப்பைக்கூடைக்குள்தான் சீவித்துக் கொண்டிருக்கின்றார்.
இத்தனை வீறாப்புரைகளுக்கு மத்தியிலும் அமைச்சர் பௌஸியையும், அலவி மௌலானாவையும் தாஜா செய்து துதி வேறு பாடுகின்றார். இவர்களின் முஸ்லிம் சமூக விரோத நடவடிக்கைகளையும், அறிக்கைகளையும் முஸ்லிம் சமூகம் நன்கறியும்.
இவர்களைப் புனிதர்களாகக் காட்டி முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் கைங்கரியத்தை இவர் ஏன் செய்னகின்றார் என்றால், தேர்தலின் பின் இவரை அரசாங்கத்துடன் சமரசமாக்கும் கைங்கரியத்தை அவர்கள் இருவரும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் புறக்கணித்து எழுதப்பட்ட இலங்கை இந்திய உடன்பாட்டில் பிறந்த இந்த மாகாண சபை முறைமையை ஸ்ரீ.ல.மு.காவும் முதலில் எதிர்த்தே வந்தது என்பது அமைச்சர் ஹக்கீமுக்கு தெரியாதிருக்கலாம். இந்தியா கொடுத்த அழுத்தம் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டுதான் 1988ல் இருந்து இந்த மாகாண சபை முறைமையில் இக்கட்சி பங்கேற்று வருகின்றது.
இந்திய அரசின் வரப்பிரசாதங்களையும், அழுத்தங்களையும் புறக்கணித்து முஸ்லிம் சமூகத்தின் மீது எழுதப்பட்ட இந்த அடிமைச் சாசனத்தைப் புறந்தள்ளும் தைரியம் தலைவருக்கும் இருந்ததில்லை.
நாட்டின் தலைவரை ஆயுட்காலம் முழுவதும் தேர்தலில் பங்குபெறச் செய்யும் சர்வாதிகாரத்திற்கான சந்தர்ப்பத்தை 18வது திருத்ததின் மூலம் தாரைவார்த்து விட்டு 13வது திருத்தத்தை நீங்கள் எதிர்த்தால்தான் என்ன? ஆதரித்தால்தான் என்ன?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Rauf your time is over nobody will belive you.
ReplyDeleteMr. Hakeem Playing a good role, he doesnt have any right to talk about muslims. what he did to the muslim community so far. He is fooling entire muslim community for his personal benifit. Allah is there Mr. Hakeem, He will catch the munafiqs.
ReplyDelete