Header Ads



உலக ஆசையும், அதிகார மோகமும்

(A.J.M.மக்தூம்)

பதவி மோகம், புகழாசை, பேராசை, பெருமை ஆகிய தீய பண்புகளே இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு பிரச்சினைகள், குழப்பங்கள், நெருக்கடிகள் போன்ற வற்றுக்கு மூல காரணியாக விளங்குகின்றன என்ற உண்மையை நம்மில் பலரும் உணர்ந்து கொள்ளாமல் இருந்த போதிலும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி எமக்கு உணர்வூட்டி விட்டு சென்றுள்ளார்கள்.

ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் நாசத்தையும், அழிவையும் விட பாரிய குழப்பத்தை ஒரு மனிதனுடைய உலக ஆசையும், அதிகார மோகமும் அவனுடைய மார்க்கத்தில் எற்படுத்தி விடும் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)

எல்லை மீரிய பொருளாசையும், பதவி மோகமும் ஒரு முஸ்லிமுடைய மார்கத்திலும், இறை விசுவாசத்திலும் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவை தெளிவு படுத்தும் சிறந்ததோர் உதாரணத்தை இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் எடுத்துக் கூறியுள்ளார்கள். இதனையே நோக்காகாக் கொண்டு ஒருவன் செயற்படுகின்ற போது இந்த உலகில் பாரிய அழிவையும், நாசத்தையும் அவன் சம்பாதித்துக் கொள்வதோடு, உலகின் அற்ப பொருளுக்காக மறுமையிலும் பெறும் நஷ்டத்தை அடைகிறான்.

நபிகளாரின் இந்த உதாரணத்தை சற்று உற்று நோக்கினால் இத்தீய பண்புகளின் கொடூரத்தை புரிந்து கொள்ளலாம். இந்த குருகிய ஆசையை அடைந்து கொள்ள எந்த குற்றச் செயல்களையும் அச்சமின்றி செய்ய துணிந்து விடும் எத்தனையோ மனிதர்களை நாம் அன்றாடம் காண்கின்றோம். இவர்கள் பொய், புரட்டு, மோசடி, களவு, கொள்ளை ஏன் கொலை போன்ற எந்த குற்றச் செயல்களை அரங்கேற்றியேனும் அவர்களின் இலக்கை அடைய தலைப் பட்டு விடுகின்றனர்.  இதன் மூலம் பாரிய குழப்ப நிலை தோன்றி விடுகிறது. அழிவும், நாசமும் ஏற்படுகிறது. அச்சம் நிறைந்த நிம்மதியற்ற வாழ்வுக்கு அது வழிகோல்கிறது.

இப்படியாக ஒருவன் எந்த கட்டுப் பாடோ, வரையறையோ இன்றி உலகின் அற்ப பொருள் மற்றும் அதிகாரங்களில் மோகங்கொள்ளும் போது அவனுள் அது மிருக பண்பை உருவாக்கி விடுகிறது. இதனால் யாரை பலித் தீர்த்தேனும் அவன் ஆசையயை அடைய முற்பட்டு விடுகிறான். இதனால் பிறருக்கு ஏற்படும் அநீதங்கள், பாதிப்புக்கள், துன்பங்கள் பற்றியும் அவன் அலட்டிக் கொள்ளவும் மாட்டான். இதனால்தான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள்  இவ்விரு தீய பண்புகள் பற்றி எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

ஆகவே இத்தீய பண்புகளின் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் நம்மனைவரையும் இறைவன் தற்காத்தருள்வானாக... ஆமீன்

No comments

Powered by Blogger.