Header Ads



மனச்சாட்சியைக் கொன்றவர்கள்!

(தம்பி)

வைத்தியத் தொழிலைப் புனிதமானது என்பார்கள். இந்தப் புனிதம் என்பது வைத்தியர்களின் அகம், புறம் - இரண்டிலும் இருக்க வேண்டும். அழுக்கான கரங்களோடும், புனிதமற்ற மனதோடும் தொழிலாற்றுவதில் அர்த்தங்களில்லை.
வைத்தியர்களிடம் - நோயாளிகள் தம்மை முழுமையாக ஒப்படைப்பதற்குக் காரணமே, வைத்தியத்துறை மீது, மக்கள் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கைதான். ஆனாலும், இந்த நம்பிக்கை – அப்வப்போது மிக மோசமாக மீறப்பட்டு வருகிறது.

நோயாளியின் கிட்னியை வைத்தியர் திருடினார் என்றும், வைத்தியம் பார்க்க வந்த பெண்களை டொக்டர் ஆபாசமாகப் படமெடுத்தார் எனவும், வைத்தியசாலையின் மருந்துகளைத் திருடி வெளியாருக்கு வைத்தியர்கள் விற்றதாகவும் - ஊடகங்களில் வரும் செய்திகளெல்லாம்  வைத்தியத்துறையில் நிகழும் குற்;றங்களுக்கும், மோசடிகளுக்கும் உதாரணங்களாகும். 

நோயாளிகளோடு வன்மமாகப் பேசுவதென்பதே – வைத்தியத் தொழிலுக்கு முரணானதாகும். வைத்தியர்கள் எப்போதும் கருணையாளர்களாக இருக்க வேண்டும். இந்தத் தொழிலுக்கு கருணை அவசியமாகும். துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடுவதற்கு கருணை மனம் ஒருபோதும் இடம்கொடாது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் முரணாகவும், விரோதமாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஏராளமான விடயங்கள் நடந்தேறியுள்ளன. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் - திரைப்படங்களில் வருகின்ற வில்லன்களை விடவும் மோசமாக நடந்துள்ளார் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. அந்த வைத்திய அத்தியட்சகர் புரிந்ததாக் கூறப்படும் ஊழல் மோசடிகள் - கீழ்தரமானவை, கருணையற்றவை, மனச்சாட்சி இல்லாதவை!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் பெயர் எம்.எம். தாஸிம். தற்போது இவர் பணியில் இல்லை. சுகாதார அமைச்சு - இவரை தற்காலிமாகப் பணிநீக்கம் செய்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் வை.டி. நிஹால் ஜெயதிலக மேற்படி பணிநீக்கக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். அரச நிறுவனங்கள் சட்டத்தின் XLVIII பிரிவு 31 இன் பிரகாரம் மேற்படி பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் - கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் - அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரை சுகாதார அமைச்சின் செயலாளர் பணிநீக்கம் செய்துள்ளதோடு, அவருக்கான குற்றப் பத்திரிகையினையும் அனுப்பி வைத்துள்ளார். வைத்திய அத்தியட்சகர் தாஸிம் புரிந்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை - அவருக்கான பதவி நீக்கக் கடிதத்தில், சுகாதார அமைச்சின் செயலாளர் பட்டியலிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

•    அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு அரச நிறுவன ஒழுங்கு விதிகளை மீறியமை.
•    வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியிலும் மேலதிக தொழில் கொடுப்பனவு, விடுமுறைக்கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்டமை.
•    வெளிநாட்டில் இருந்த போதும், கடமைக்குச் சமூகமளித்ததாக அலுவலகப் பதிவில் குறிப்பிட்டமை.
•    சட்ட ரீதியற்ற முறையில் எரிபொருள் கொடுப்பனவினைப் பெற்றுக் கொண்டமை.

போன்ற குற்றங்களைப் புரிந்ததன் காரணமாகவே - குறித்த வைத்திய அத்தியட்சகரைப் பணிநீக்கம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவை தவிர வைத்திய அத்தியட்சகர் தாஸிம் மீதான மேலும் பல குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 90 லட்சம் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மோசடி செய்யப்பட்டமை தொடர்பிலும் - ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி 90 லட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கென சுகாதார அமைச்சிலிருந்து பணம் பெறப்பட்டிருந்தது. ஆனால், கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ உபகரணங்கள் எவையும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படவில்லை. மேலும், வைத்தியசாலை ஆவணங்களிலும் - குறித்த உபகரணங்கள் பற்றிய பதிவுகள் எவையும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மறைக்கப்பட்டு, அவைகளுக்குப் பதிலாக – 'யுனிசெப்' அமைப்பிடமிருந்து அன்பளிப்பாகப் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தாகவும்; விசாரணைகளின் போது தெரியவந்திருந்தது.

இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம், தனது தனிப்பட்ட தேவைகளுக்காக 04 தடவைகள் வெளிநாடு சென்றிருந்ததாகவும், அப் பயணங்களின்போது - அனுமதிக்கப்பட்ட விடுமுறையினை விடவும் 30 நாட்கள் அதிகமாக வெளிநாடுகளில் தங்கிருந்ததாகவும் தெரியவருகிறது.

மேலும், குறித்த அத்தியட்சகர் வெளிநாட்டில் மேலதிகமாகத் தங்கியிருந்த 30 நாட்களும் கடமையில் இருந்ததாகக் காட்டியுள்ளதோடு, அந்த நாட்களுக்குரிய சம்பளம், மேலதிகக் கொடுப்பனவுகள் மற்றும் பிரயாணக் கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றினைப் பெற்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு இவர் பெற்றுக்கொண்ட தொகையானது சுமார் 01 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாகும்.

சுகாதார அமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள குற்றப் பத்திரிகையில் இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த அத்தியட்சகர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பொருட்டு, அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு தனது குடும்பத்துடன் பயணிப்பதற்காக 08 தடவைகள் வைத்தியசாலைக்குச் சொந்தமான 'அம்புலன்ஸ்' வண்டியைப் பயன்படுத்தியதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தப் பயணத்துக்காக வைத்தியசாலையின் நிதியிலிருந்து சுமார் 03 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.

மேற்படி அத்தியட்சகர் தாஸிம் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தனக்கு அனுமதிக்கப்படாத நிதியிலிருந்து சுமார் 02 மில்லியன் ரூபாவினை மோசடியாகப் பெற்றிருந்தார் எனவும் தெரியவருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து, வைத்திய அத்தியட்சகர் தாஸிம் - மோசடியாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு தொகைப் பணத்தினை மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையிலிருந்து மோசடியாகப் பெற்றுக் கொண்ட 09 லட்சத்து 89 ஆயிரத்து 750 ரூபாவினை வைத்திய அத்தியசட்சகர் தாஸிம் மீளவும் வைத்தியசாலைக்குச் செலுத்தியிருந்தார்.

மேற்கண்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம். தாஸிம் தற்போது - அவருடைய பணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஆயினும், இவ்விவகாரங்களையெல்லாம் மூடி மறைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது. குறித்த வைத்திய அத்தியட்சகர் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களையெல்லாம் - இந்தப் பிரதேசத்திலுள்ள அமைச்சர் ஒருவரின் அரசியல் செல்வாக்குடன் தோண்டிப் புதைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அறியக்கிடைக்கிறது.

மேற்படி வைத்திய அத்தியட்சகரின் மோசடியினை விடவும், அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள அமைச்சரின் செயற்பாடானது மிகக் கேவலமான பாவமாகும். மக்களின் சுகாதாரத் தேவைக்கான உபகரணங்களையும், நிதியினையும் விழுங்கி ஏப்பமிட்ட ஒரு நபரை – மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரொருவரே காப்பாற்ற முயற்சிப்பதென்பது – அருவருப்பான அரசியலாகும்.

'ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன்' என்பார்கள். அந்தப் பழமொழியினை 'ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்' என்று நம்மில் சிலர் பிழையாகச் சொல்வதுண்டு. உண்மையில், வைத்தியசாலை நிதியினையும், நோயாளிகளுக்கென கொள்வனவு செய்யப்பட்ட வைத்திய உபகரணங்களையும் மோசடி செய்யும் வைத்தியர்களின் - இவ்வாறான செயல்கள்தான் ஆயிரம் பேரைக் கொல்வதை விடவும் கொடுமையான பாவமாகும்.  

அந்தவகையில், குறித்த வைத்திய அத்தியட்சகர் இழைத்ததாகக் கூறப்படும் மோசடிகள் பாரதூரமானவையாகும். மோசடி செய்யப்பட்ட பணத்தொகையும் அதிகமாகும். எனவே, இவ் விவகாரம் தொடர்பில் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும் என்பதே – பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.  

பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியாது என்பார்கள். அந்தப் பழமொழியெல்லாம் பொய்த்துப் போய் விட்டது. மலையைக்கூட தங்கள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்துப் பழக்கப்பட்ட அரசியல்வாதிகள் நம் மத்தியில் உள்ளார்கள்.  அவ்வாறான அரசியல்வாதிகளுக்கு – மேற்படி வைத்திய அத்தியட்சகரின் மோசடிகளை இருட்டடிப்புச் செய்வதென்பது சிறியதொரு விடயமாகும்.

ஆனால், அப்படியெல்லாம் நடந்து விடக்கூடாது என்பதே இந்தப் பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும். மோசடிப் பேர்வழிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுதல் வேண்டும். அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளை சமூகம் நிராகரிக்க வேண்டும்.

6 comments:

  1. பொதுபல சேனாவுக்கு முஸ்லிம் வைத்தியர்களைப் பற்றி ஏற்கனவே மஞ்சள்காமாலை இது போதும் அடுத்த மீடிங்கில்....................

    ReplyDelete
  2. Dear Bro, neegkal ugkal arisiyal vathiyai payanpaduththi igku vandumanal thappithu kollalam, but ON THE DAY OF JUDGMENT??? allah will be the perfect JUDGE

    ReplyDelete
  3. is this a copy of some other writers article that was published couple of weeks back? My Sri Lanka establishment code book has only XXXIII chapters!

    ReplyDelete
  4. actually i could not find chapter XLVIII in the volume 2 as well

    ReplyDelete
  5. குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும். அதேவேளை வைத்தியத்துறையின் தலைமத்துவம் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவது மன்னிக்கமுடியாதவிடயம். இது யாராக இருப்பினும் சரியே அதேவேளை இக்குற்றங்கள் சரியான ஆதாரங்களுடன் நிருபிக்கப்படுமிடத்து அவைகளை நீயாயப்ப்டுத்தும் விதமாக அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் மூடிமறைக்கப்படுமிடத்து அப்பிரதேச மக்கள் விட்டுக்கொடுக்காமல் தமது எதிர்ப்பைத்தெரிவிப்பதன் மூலமே இதுபோன்ற தவறுகள் பிற்காலத்தில் நடக்க்காமல் தடுக்கலாம். அதேவேளை வைத்தியர்கள், தாதியர்கள் சிலரின் செயல்பாடுகள் சம்மந்தமான பதிவுகள் பல தொடர்ந்தும் ஏற்பட்டு வருவது கவலைக்குரிய விடயம். இது சம்மந்தமான ஒன்றுபட்ட தீர்வொன்று அவசியம் இதற்கான ஏற்பாடுகள் பிரதேச இழைஞர்கள், புத்தி ஜீவிகள் கையிலேயே உள்ளன. ஏழைகள் நம்பிவாழும் வைத்தியசாலையை உமது சுயபொழுதுபோக்கான இடமாகவும் இலாபமீட்டும் இடமாகவும் பாவிக்காமல் சமுக சேவை நோக்குடன் செயல்படுமாறு பணிக்கின்றோம்.

    ReplyDelete
  6. கேவலமான இந்த மனிதர்கள் எப்படித்தான் புனிதமான வைத்திய தொழிலுக்கு தேர்வு செய்யப்பட்டார்களோ தெறியாது. முஸ்லிம் பெயர் தாங்கிகளான இவர்களை தூய்மைப்படுத்த எந்த மன்னிப்புமில்லாமல் தூக்கிலிட வேண்டும். அல்லது தற்காலிகமாக நிருத்திவைக்கபட்ட இவரது தொழிலை நிரந்தரமாக நிருத்தி எந்த அரச தொழிலுக்கும் தகுதி அற்றவர் என பிரகடணப்படுத்த வேண்டும். சமுக விரோதிகள் மன்னிக்கபடக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.