ஒபாமாவின் வாயை அடைத்த புட்டின் - அமெரிக்க 'ஆதிக்க' சிறகை வெட்டிய ரஷ்யா
சிரியா மீது ராணுவ நடவடிக்கைக்கு எல்லாம் தயார்; எந்த நேரமும் போர் மூளும் என்றெல்லாம் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா ‘சுருதி’ திடீரென அடங்கியதன் பின்னணி பற்றி இப்போது உண்மை வெளிவந்துள்ளது. சோவியத் யூனியனை கூறு போட்டு பல குடியரசுகளாக்கி அதன் வல்லரசு பெருமையை ஒன்றுமில்லாமல் செய்த அமெரிக்காவின் ‘ உலக போலீஸ்கார’ தனத்தை ரஷ்யா இப்போது ஒடுக்குவதில் முதல் வெற்றி கண்டுள்ளது.
சிரியா போரை தடுத்ததில் இந்தியா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு பங்கு உண்டு என்றாலும், ரஷ்யா தான் முன்னனின்று ‘வீட்டோ’ செய்தது என்றால் மிகையல்ல. சிரியாவில் உள்நாட்டு கலகம் அதிக அளவில் நடந்து வருகிறது என்பது உண்மை தான். சிரியா அதிபர் பஷார் ஆசாத்தை கண்டால் ஒபாமாவுக்கு ஆகாது. ஏற்கனவே 2 முறை, அவரை பதவி விலகி விடும்படி கூறினார். ஆனால், ரஷ்ய அதிபர் புடின், ஆசாத்துக்கு நெருங்கிய நண்பர் என்பதால், அவரை ஒன்றும் ஒபாமாவால் செய்ய முடியவில்லை.
சமீபத்தில், சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் ஆயிரக்கணக்கான பேர் இறந்தனர். இதை சாக்காக வைத்து, உடனே சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த ஒபாமா திட்டமிட்டார். ரசாயன ஆயுதங்கள் இருந்தால் உலகத்துக்கே ஆபத்து. அதனால் உலக பாதுகாப்புக்காக சிரியா மீது போர் நடத்துவது முக்கியம் என்று சொல்லிப்பார்த்தார்.
ஆனால், ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த ஜி20 மாநாட்டில் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். மாநாட்டுக்கு வரவேற்ற புடின், வெளிப்படையாக, சிரியா மீது தாக்குதல் நடத்த சரியான நேரம் இல்லை; நியாயமான காரணமும் இல்லை என்று போட்டாரே ஒரு போடு. இந்தியா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளும் தைரியமாக , ஐநா கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் கூடாது என்று சொல்லிவிட்டன. இதை ஒபாமா எதிர்பார்க்கவில்லை.
வாஷிங்டன் திரும்பிய ஒபாமா யோசிக்க ஆரம்பித்தார். ஐநா கவுன்சில் ஒப்புதலுக்கு போனால், அதை கண்டிப்பாக ரஷ்யா ‘வீட்டோ’ அதிகாரத்தை வைத்து ரத்து செய்து விடும் என்று அவருக்கு புரிந்தது. இந்த நிலையில், அவசர அவசரமாக டிவியில் அவர் புதன் அன்று பேசினார். ‘போரை அமெரிக்காவும் விரும்பவில்லை தான். உலக பாதுகாப்புக்கு தான் அப்படி முடிவு எடுத்தேன். ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைக்கட்டும்; போரை நிறுத்த தயார்; இல்லாவிட்டால், போரை சந்திக்கதான் வேண்டும்’ என்று பேசினார்.
இவர் இப்படி பேசியதன் பின்னணியில் ஒரு முக்கிய பின்னணி உள்ளது. அன்று காலை தான், ரஷ்ய அதிபர் புடினிடம் இருந்து அவருக்கு 4 அம்ச திட்டம் கொண்ட ரகசிய அறிக்கை வந்துள்ளது.
1. ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு கூட்டமைப்பு குழுவில் சிரியாவை சேர்ப்பது.
2. ரசாயன ஆயுதங்கள் தயார் செய்யும் இடங்களை சிரியா அடையாளம் காட்டும்.
3. அவற்றை இந்த குழு நேரில் சென்று ஆராய்ந்து, ஆயுதங்களை சேகரிக்கும்.
4. சேகரித்த ஆயுதங்களை அழிப்பது பற்றி குழு முடிவு எடுக்கும்.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரில் வியாழன் அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் பேச்சு நடத்துவர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும். இந்த தகவல்களை தாங்கி தான் அந்த அறிக்கை புடினிடம் இருந்து ஒபாமாவுக்கு சென்றது. இதை பார்த்த ஒபாமா மனம் மாறினார். போரை தவிர்க்க சிரியாவுக்கு நிபந்தனை விதித்தார்.
இந்த வகையில் ஒபாமாவை தடுத்ததில் புடினுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சர்வதேச வெளியுறவு விவகார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜெனிவாவில் நடக்கும் பேச்சில், ஐநா அரபு லீக் தூதர் லக்தர் பிராமியும் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாட்டையும் ரஷ்யா தான் செய்துள்ளது.
ஒபாமா பிளானையே புரட்டி போட்ட புடின்
* ஒற்றுமையாக இருந்தவர்கள் ஒபாமா, புடின். அவர்களை பிரித்ததே எட்வர்ட் ஸ்னோடன் விவகாரம் தான். ஆம், அமெரிக்க உளவு பிரிவு முன்னாள் அதிகாரியான இவர், உலக நாடுகளின் ரகசியங்களை அமெரிக்கா ‘சைபர் போர்’ மூலம் சேகரிக்கிறது என்று ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு, கடைசியில் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தவர்.
* சிரியா அதிபர் ஆசாத், புடினின் நெருங்கிய நண்பர். அவருக்கு ஒபாமா தொந்தரவு செய்கிறார் என்றதும் புடின் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, சோவியத் யூனியனை ஒடுக்கிய அமெரிக்கா வுக்கு பாடம் கற்பிக்க இது தான் வாய்ப்பு என்று முடிவு கட்டினார்.
* கடந்த வாரம் மாஸ்கோவில் புடினை சந்தித்து சிரியா விஷயத்தில் ஒப்புதல் பெற வைப்பது தான் ஒபாமாவின் திட்டம். ஆனால், அப்போதும் ஸ்னோடன், பிரேசிலில் உள்ள எண்ணெய் வள ரகசியங்களை கம்ப்யூட்டர் நெட்வோர்க்குகளில் ஊடுருவி அமெரிக்க என்எஸ்ஏ உளவு அமைப்பு ‘திருடி’யிருப்பது பற்றிய ஆவணங்களை வெளியிட்டது ஒபாமாவுக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது.
* ‘இது ஒரு ஆரம்பம் தான். ஆனால், இந்த பெருமையை அதிபர் புடின் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மத்திய கிழக்கில் அமைதி தவழ்ந்தாலே போதும் என்பது தான் ரஷ்யாவின் நோக்கம்’ என்று புடின் அலுவலக செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க கமென்ட்.
* இஸ்லாமிய நாடுகளை தூண்டுவதாக போர் அமைந்து விடக்கூடாது என்று புடின் எச்சரித்தார். இதை ஒபாமா எதிர்பார்க்கவில்லை. ஈராக், ஆப்கானிஸ்தான் போல நீண்ட நாள் போரை அமெரிக்கா நடத்த திட்டமிட்டுள்ளதா என்று கேட்டதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
11 ஆண்டு பகையின் உச்சம்
சிரியா மீது அமெரிக்கா முதன் முதலில் கண் வைத்தது 2002ல் தான். அதுவரை பனிப்போராக இருந்தாலும், அப்போது தான் சிரியாவுக்கு முதல் எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா. ஈராக்குக்கு சிரியா உதவியது தான் புஷ் கோபத்தை தூண்டியதில் முக்கிய காரணம்.
* 2002: தீயசக்திகளின் மையம் என்று சிரியாவை கூறிய அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், நச்சு ஆயுதங்களை அழிக்க கெடு விதித்தார்.
* ‘நாங்கள் ஈராக்குக்கு ஆயுதங்களை தரவில்லை. நச்சு ஆயுதங்களும் எங்களிடம் இல்லை’ என்று சிரியா கூறியதை அமெரிக்கா ஏற்கவில்லை.
* 2004: ஈராக்குக்கு உதவியதாக, சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா.
* 2006: டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதகரம் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது. இது அமெரிக்காவின் கோபத்தை அதிகரித்தது.
* 2007: சிரியா எல்லையில் இஸ்ரேல் தாக்கி ராணுவ தளத்தை அழித்தது. இது அணுகுண்டு தயாரிக்கும் மையம் என்று அமெரிக்கா கூறியது.
* 2008: சிரியாவில் அணு உலை அமைக்க வடகொரியா உதவியதாக அமெரிக்கா ஆதாரங்களை காட்டியது.
* 2010: நச்சு ஆயுதங்களை அழிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, சிரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீட்டியது.
* 2011: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் அதிகரித்தது. பிரிவினைவாத அமைப்புகளும் அரசு படைகளுடன் மோதின.
* 2012: பிரிவினைவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் மோதல் அதிகரித்தது. வெளிநாட்டு தூதரகங்கள் தாக்கப்பட்டன. ஐநா தலையிட்டது.
* 2013: ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான பேர் இறந்தனர்; பிரிவினைவாத தாக்குதல் என்று அரசு கூறியது.
* இதைத் தொடர்ந்து தான் அமெரிக்கா போர் தொடுக்கும் முடிவை எடுத்தது. ஆனால், அதுவும் இப்போது தடைபட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல்
முதல் உலகப்போருக்கு பின் 1946 ல் விடுதலை பெற்றாலும், சிரியாவில் தொடர்ந்து 1970 வரை அடுத்தடுத்து ராணுவ புரட்சிகள். அதன் பின், 2011 வரை நெருக்கடி நிலை நீடித்தது. 1970 ல் இருந்து ஹபீஸ் ஆசாத் அதிபராக இருந்தார். அவருக்கு பின், 2000ல் இருந்து அவர் மகன் பஷார் ஆசாத் பதவியில் நீடிக்கிறார்.
So,fine. This is your comment. Whatis the solutuion now?? We let this war monker kill millions of people??
ReplyDelete