கண் அசைவால் பேசும் பக்கவாத நோயாளிகள்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாலும், தங்கள் கண் கருவிழி அசைவின் மூலம்,
சாதாரண மனிதர்களைப் போல பேச முடியும் என, ஜெர்மன் ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
பக்கவாத நோய் தாக்கத்தால், தங்கள் கை, கால்களின் அசைவையும், பேச்சையும் இழந்த நோயாளிகள், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில், சிரமம் ஏற்படுகிறது. எனினும், இவர்களின் கண் கருவிழியின் அசைவைப் பொறுத்து, இவர்களால் பேச முடியும் என, ஜெர்மன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதால், பக்கவாத நோய் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால், பேச முடியாமலும், கை, கால் அசைவு இன்றியும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள, ஜெர்மன் விஞ்ஞானிகள், புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த நோயாளிகளாலும், தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த இயலும் என, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய கேமரா மற்றும் லேப்-டாப் கம்ப்யூட்டரின் மூலம், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களின், கண் கருவிழியின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. ஆம் - இல்லை, என்ற வகையில் பதிலளிக்கக் கூடிய கேள்விகளை கேட்கும் போது, இவர்களின் கண் கருவிழியின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அவ்வகை கேள்விகளுக்கு, இவர்கள் பதில் அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பல நோயாளிகளிடம் செய்த சோதனையில்,
ஆய்வாளர்களின் இந்த கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. "தொடர்ந்து இவர்களின் கண் கருவிழிகளில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பதின் மூலம், இவர்களின் எண்ண வெளிப்பாட்டை புரிந்து கொள்ள முடியும்' என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவ்வாறு பக்க வாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் சரியான விடை அளித்துள்ளதாக, ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும், கண்களின் மூலம் பேசுவதாக, ஜெர்மன் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Post a Comment