கச்சை கட்டிக் கொண்டு கிளம்பியுள்ள வல்லரசுகள்
(லதீப் பாரூக்)
ரஷ்யாவும், அமெரிக்காவும் என்ன விலை கொடுத்தாவது சிரியாவின் இரசாயன ஆயுதங்களை உடனடியாக அழித்தொழிப்பதற்கு முடிவு செய்திருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் இடம்பெற்று வரும் அழிவுகள் மற்றும் கொலைகள் தொடர்பில் இரண்டு துருவங்களாக செயற்பட்டு வந்த இவ்விரு சக்திகளும், அதன் இரசாயன ஆயுதங்கள் காரணமாக சிரியாவைக் கட்டிப் போடுவதற்குக் கரம் கோர்த்திருக்கின்றன.
இதற்கான காரணம் இரசாயன ஆயுதங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக இருப்பதுதான். எனவே, அவை அழித்தொழிக்கப்பட வேண்டும். இதற்காக வேண்டி அமெரிக்காவும், ரஷ்யாவும் இதனைத் தமது முதன்மைப்படுத்த வேண்டிய பட்டியலில் வைத்திருக்கின்றன.
வழமை போலவே, இந்நகர்வை சட்ட ரீதியானதாக ஆக்கிக் கொள்வதற்கு ஐ.நா சபையைக் கருவியாக அவை பயன்படுத்திக் கொள்கின்றன. மறுபுறத்தில் சிரியாவை எச்சரித்தும் வருகின்றன.
தனது சொந்த நாட்டை அழித்து, சொந்த மக்களையே படுகொலை செய்து வருகின்ற சிரிய சர்வதிகாரி பஷார் அல் – அஸத், தான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றார். சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்குரிய களநிலமையை உண்டு பண்ணுவதற்காக ஆயுதக் குழுக்களாலேயே இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என அவர் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
இரசாயன ஆயுதத்தைப் பாவித்தவர்கள் யார் என்பதைக் கண்டறிவது தொடர்பில் ஐ.நா தீர்மானம் எதுவும் குறிப்பிடவில்லை. ஐ.நாவின் தேவை எல்லாம், இரசாயன ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இருக்கின்ற அபாயம் களையப்பட வேண்டும் என்பதும்தான்.
இஸ்ரேலைப் பொறுத்த வரை, இரசாயன ஆயுதங்களை மாத்திரமல்ல, மத்திய கிழக்கையே தரைமட்டமாக்கி விடக் கூடிய அணு ஆயுதங்களையும் அது வைத்திருக்கிறது. அது பற்றி எவராலும் கேள்வி எழுப்ப முடியாது. பராக் ஒபாமாவோ, விளாடிமிர் புடினோ இது பற்றிக் கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர் பார்க்கவும் முடியாது. சொல்லப் போனால், இவர்கள்தான் இஸ்ரேலை உருவாக்கியவர்கள். என்ன விலை கொடுத்தாவது, அதனை இப்போது காப்பாற்றியாக வேண்டும்.
ஏற்கனவே, மத்திய தரைக் கடலில் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் நிலை கொண்டுள்ளன. இரசாயன ஆயுதங்களை உருவாக்கியவர்கள் பற்றியதான முரண்பட்ட ஆதாரங்கள் குறித்து எதுவும் அலட்டிக் கொள்வதற்கு அமெரிக்காவோ, மற்றையவர்களோ தயாராக இல்லை. அசாதின் மீதான குற்றம் குறித்துக் கதைத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி, அஸாதின் குற்றம் குறித்து உலகம் தெளிவாகவும், தீர்மானமாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
யஹ்யா அபாப்னே, மற்றும் டேல் கவ்லக் ஆகிய மத்திய கிழக்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்கள் இருவரினதும் அறிக்கையொன்றின் படி, ஆயுதக் குழுக்களே இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி இருக்கின்றன. சவூதியப் புலனாய்வுத் துறையின் மூலம் இவர்களுக்கு இவை கிடைத்துள்ளன.
புலனாய்வு செய்தியாளார் றுயலநெ ஆயனளநn பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'அல் காஇதாவுடன் தொடர்புடைய ஜப்ஹாத் அல் நுஸ்ரா உள்ளடங்கலாக, சிரிய ஆயுதக் குழுக்களிடம் இரசாயன ஆயுதம் இருந்ததா என்பது குறித்தும், சிவிலியன்களுக்கும் அரச படைகளுக்கும் எதிராக அதனை அவர்கள் பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் சிறிய சந்தேகமே காணப்படுகிறது. எவ்வாறாயினும், டாக்டர்கள், கௌடா பிரதேசவாசிகள், ஆயுதப் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் மூலம் மற்றொரு பிம்பம் உதயமாகிறது. சவூதிப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பண்டார் பின் சுல்தான் மூலமாக, ஆயுதப் போராளிகளில் சிலர் இரசாயன ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும், கேஸ் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இவர்களே பொறுப்பு எனவும் பலர் சந்தேகிக்கிறார்கள்.
இதன் காரணமாகத்தான் ஐ.நா. தீர்மானம், இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிப்பதை உள்ளடக்காமல் இருந்திருக்க வேண்டும்.
அமெரிக்க தலைமையிலான ஐரோப்பா ஒரு புறமும், சோவியத் யூனியன் மறுபுறமுமாக இருந்து, முதலாளித்துவ நாடுகள், சோஷலிச நாடுகள் என உலகம் இரு துருவமாக பிரிந்திருந்த நிலையை எவரும் மறந்து விட முடியாது. ஆனால், இன்று இஸ்ரேலைப் பாதுகாத்தல், மத்திய கிழக்கில் உறுதியற்ற நிலையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளல், இஸ்லாமும் முஸ்லிம்களும் தலை தூக்குவதைத் தடுத்தல் போன்ற தமது பொது இலக்குகள் விடயத்தில் அவை ஒன்று பட்டுள்ளன.
பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனில் இருந்து எவரும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், சோவியத் யூதர்கள் பலஸ்தீனுக்கு இடம்பெயர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இங்குதான் இடம்பெயர்ந்த யூதர்கள் பலஸ்தீனியர்களைப் படுகொலை செய்து, எஞ்சியவர்களை இன்று வரை மிக மோசமான வசதிகளுடன் அவதியுறுகின்ற அகதி முகாம்களுக்குள் முடக்கி, அவர்களது நிலங்களை அபகரித்து, யூதர்களுக்கு ஒரு தனி நாடு தேவை என்பதற்காக உலக வரலாறு அறிந்த மிக மோசமான குற்றங்களை இழைத்துக் கொண்டிருந்தார்கள். இழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்'.
ஐ.நா வின் பல அடிப்படைகளையே மீறும் வகையில், ஏமாற்று மற்றும் குழறுபடி வேலைகள் மூலமாக 1947 இல் இஸ்ரேல் ஒரு தனி நாடாக ஐ.நாவினால் பிரகடனம் செய்யப்பட்டது. அமெரிக்காவே இஸ்ரேலை முதன் முதலாக அங்கீகரித்தது. சில நிமிடங்களில் சோவியத் யூனியன் அங்கீகரித்தது.
அதில் இருந்து அமெரிக்கா இராணுவ, இராஜாங்க, நிதி மற்றும் வேறு பல உதவிகளை இஸ்ரேலிற்கு- பல நேரங்களில் அமெரிக்காவின் சொந்தத் தேசிய நலன்களுக்கு விரோதமாகக் கூட- வழங்கி வந்திருக்கிறது. இதே வேளை, யூதர்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கு அனுமதி வழங்கியதன் மூலம், சோவியன் யூனியன் இஸ்ரேலிற்குத் தேவையான மனித வளங்களை வழங்கியது.
1989 இல் சோவியன் யூனியன் உடையும் வரை, இந்நிலை தொடர்ந்தது. அதன் பிறகு அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள், முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்தன. இவை ஒவ்வொன்றிலும், முஸ்லிம் நாடுகளை அழித்தொழிப்பதற்கும், மில்லியன் கணக்கானவர்களைப் படுகொலை செய்வதற்கும், அமெரிக்க, ஐரோப்பிய சக்திகளோடு ரஷ்யா - சோவியத்தின் உடைவிற்குப் பிந்தைய சக்தி- கைகோர்த்துக் கொண்டது.
சிரிய விவகாரத்திலும் இதுதான் நிலமை. சிரியர்களே சிரியர்களைக் கொலை செய்கின்ற நிலமை கட்டமைக்கப்பட்டதன் மூலம், நாடு அழிக்கப்படுவதோடு, மத்திய கிழக்கு ஒரு கொலைக்களமாக்கப்பட்டு, இஸ்ரேல் தொடர்ந்தும் ஒரு பெரும் சக்தியாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக அமெரிக்க, பிரித்தானிய, ஐரோப்பிய சக்திகளும், அரபு முல்லாக்களும் சிரியப் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய போது, ரஷ்யா, சீனா, ஈரான் என்பன அஸாத் அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கின.
இதன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியா ஒரு கொலைக் களமாகவே காட்சி தருகிறது. கீழ்க் கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அசாதின் அடக்கு முறை ஆட்சிக் காலத்தில் கூட அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், இன்று அகதி முகாம்களுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
தற்போது மட்டும் சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக கச்சை கட்டிக் கொண்டு கிளம்பி இருக்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் சிரியாவில் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற கொலைகளையும், அழிவுகளையும் நிறுத்துவதற்கு ஏதேனும் செய்தார்களா? அந்த விவகாரம் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதே உண்மை.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.நா சபை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. சுமார் மூன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்ட பிறகு இப்போதுதான் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் விழித்திருக்கிறார்.
Post a Comment