உடனடித் தாக்குதல் நடத்தத் தயாராக இருங்கள் - ஒபாமா இராணுவத்தினருக்கு உத்ரதவு
சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லாமல், அமைதி வழியில் தீர்வு கிடைக்குமென்றால் அதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இருந்தாலும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் உடனடித் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கும்படி ராணுவத்தைக் கேட்டுக்கொண்டார்.
புதன்கிழமை தொலைக்காட்சியில் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது:
சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரஷியாவின் முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை இப்போதே சொல்லமுடியாது. சிரியாவும், ரஷியாவும் மிக நெருங்கிய கூட்டாளிகள் என்பதால், ராணுவ நடவடிக்கை இல்லாமலேயே ரசாயன ஆயுத அச்சுறுத்தலை ஒடுக்க ரஷியாவின் முன்முயற்சிகள் உதவும் என்று நம்பலாம்.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சருடன், நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவார். நானும் ரஷிய அதிபர் புடினுடன் பேசுவேன்.
அமைதித் தீர்வு ஏற்படுவதற்கு வசதியாக, சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் கோருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிரியா அதிபர் பஷார் அல்-அஸாதுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தில், அவர் சொன்னதைச் செய்வார் என்பதற்கான உத்திரவாதம் இருக்கவேண்டும்.
அமெரிக்கா உலக பாதுகாப்பின் நங்கூரமாகத் திகழ்கிறது. உலகில் எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ, அங்கெல்லாம் சென்று அதனை சரிசெய்வது அமெரிக்காவின் வேலையில்லை. ஆனால் ரசாயனத் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுக்க நாம் குறைந்தபட்ச முயற்சியையாவது எடுத்துத்தான் ஆகவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
நட்பு நாடுகளான பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் இதுகுறித்து பேசியுள்ளேன். ரசாயன ஆயுதங்களை அஸாத் கைவிடவேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற ரஷியா, சீனா உதவியுடன் அனைவரும் இணைந்து சிரியாவை வற்புறுத்துவோம்.
நட்புநாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவைப் பெற, ஆகஸ்ட் 21-இல் சிரியா நடத்திய ரசாயனத் தாக்குதல் பற்றிய ஐ.நா பார்வையாளர்களின் ஆதாரங்களைக் காட்டுவோம்.
ரசாயனத் தாக்குதலுக்கு எதிராகப் போராடத் தவறினால், மற்ற பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான போராட்டமும் மழுங்கிவிடும். சிரியாவின் கூட்டாளியான ஈரானுக்கு அணு ஆயுதம் தயாரிக்க கூடுதல் தைரியத்தைக் கொடுக்கும்.
அப்படி ஒரு உலகத்தை நாம் விரும்பவில்லை. எனவேதான், உலகப் பாதுகாப்பை உறுதி செய்ய, ரசாயனத் தாக்குதலில் ஈடுபட்ட சிரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு குறிப்பிட்ட இடங்களைக் குறிவைத்துத் தாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம் என்று ஒபாமா கூறினார்.
ஆயுதம் தாயரிப்பது, விற்பனை செய்வது, பின்பு அதற்கு எதிர்ப்புத்தெரிவுப்பது எல்லாம் நீங்கதானே சுண்டெலி சார்.
ReplyDelete