Header Ads



பொட்டுஅம்மானின் சகோதரர் மாரடைப்பு ஏற்பட்டு வீதியில் வீழ்ந்து மரணம்

யாழ்ப்பாணத்தில் மரணமான விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானின், மூத்த சகோதரரின் சடலம், ஜேர்மனி தூதரகத்தின் தலையீட்டின் பேரிலேயே, பாதுகாப்பு அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டு, ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
20 ஆண்டுகளுக்கு மேலாக, ஜேர்மனியில் வாழ்ந்து வந்த பொட்டு அம்மானின் மூத்த சகோதரர், சண்முகலிங்கம் சிவஞானகுமார், இரண்டு மாதங்களுக்கு முன்னர் இரகசியமாக யாழ்ப்பாணம் திரும்பியிருந்தார்.

நல்லூர் கந்தசுமாமி கோவிலுக்கு அண்மையில் கடந்த ஓகஸ்ட் 21ம் நாள், அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போதே அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானதாக, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக,  காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொட்டு அம்மானின் சகோதரர் என்பதால், அவரது சடலத்தை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், ஜேர்மனி தூதரக அதிகாரிகள் தலையிட்டு, சடலத்தை கொழும்பில் இருந்து ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 28ம் நாள் பிற்பகல், 1 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது உடல், அன்றிரவு ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரியாலை திரும்பியிருந்த சிவஞானகுமார், மரணமாவதற்கு முதல்நாளான, ஓகஸ்ட் 20ம் நாள் சிறிலங்கா படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தனது பூர்வீக வீட்டைத் தேடி வந்திருந்த அவருக்கு, அதை வழங்க படையினர் மறுத்துள்ளனர்.

இதையடுத்தே, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு வீதியில் வீழ்ந்து மரணமாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.