அரசுக்குள் இருந்துகொண்டு, அதனை விமர்சிப்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை - அஸ்வர்
(Tn) வாக்களிப்பு தினத்தன்று வாக்காளர்களை அழைத்துச் சென்று வாக்களிக்கச் செய்வதற்கு கொழும்பில் பஸ் வண்டிகள் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் கருத்துத் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் விசாரணை நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பியுமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தக் கருத்தானது தேர்தல் விதிகளை மீறும் கூற்றாகும். முன்னாள் நீதியரசராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறான போலியான குற்றச்சாட்டுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கூறினார்.
புத்தளம் நகரில் 7600 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்துவைக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்ட நிகழ்வு மற்றும் கற்பிட்டி திகலி, ஏத்தாளை, கடையாமோட்ட மற்றும் வன்னி முந்தல் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி மேற்கண்டவாறு கூறினார். அருந்திக பெர்னாண்டோ எம்.பி, இரத்தினபுரி மாகாண அமைச்சர் ராகுபத்த, புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கத்திற்குள் உள்ளே இருந்துகொண்டு சிலர் அரசை விமர்சித்து வருகின்றனர். அவ்வாறு விமர்சிக்க அவர்களுக்கு உரிமை கிடையாது. அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து அவர்களுக்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளது. இவ்வாறு அரசுக்குள் இருந்துகொண்டு அதனை விமர்சிக்கும் நடவடிக்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிப்பதாயின் அரசாங்கத்தைவிட்டு வெளியேறிச் சென்றே விமர்சிக்க வேண்டும். அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சுப் பொறுப்புக்கள் போன்ற வரப்பிரசாதங்களை அனுபவித்துக்கொண்டு அரசாங் கத்தையே விமர்சிக்கும் உரிமை அவர் களுக்குக் கிடையாது.
அதேநேரம், புலிகளால் உருக்குலைந்த வடபகுதியை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் துரிதநடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் உயிர்வாயுவான ஒட்சிசன் வழங்கி வருகிறது. வடக்கின் இருண்ட யுகத்தில் ஒளி ஏற்றும் வகையில் அரசாங்கம் சுன்னாகத்தில் மின்விநியோக நிலையத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளது. பதுங்கு குழிகள் அமைப்பதற்காக புலிகளால் கழற்றிச் செல்லப்பட்ட தண்டவாளங்கள் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு யாழ் தேவி ரயில் சேவையை மீண்டும் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசின் அபிவிருத்திச் செயற்பாடுகளை அங்குள்ள தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதுதான் தமது எதிர்காலம் ஏற்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தால் பலியாக்கப்பட்ட இளைஞர்கள் தற்பொழுது அபிவிருத்தியின் பலாபலன்களை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களின் முன்னோர் அனுபவித்ததைப் போன்று இரத்த ஆற்றில் குதிப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்தியில் 80 வீதமான அபிவிருத்திகள் வடக்கிலேயே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருந்தார். அவ்வாறு நல்ல மனம் கொண்ட அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகிறது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டு வருகின்றனர். கூட்டமைப்பினர் இன்னமும் சாதி துவேசத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். உயர்ந்த சாதியினரின் கிணற்றை குறைந்த சாதியினர் இறைக்க முடியாது. சில கோவில்களுக்கு குறைந்த சாதியினர் உள்நுழைய முடியாது போன்ற சாதித் துவேசம் இன்னமும் உள்ளது. அதேபோல, புலிகளால் விதவைகளாக்கப்பட்டவர்களைக் கவனத்தில் கொள்ளக் கூட்டமைப்பு தவறிவிட்டது.
இவ்வாறான மனித உரிமை மீறல்களில் கூட்டமைப்பினரே ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுதான் எதிர்காலம் என்ற உண்மையை அவர்களும் உணர்ந்துள்ளனர். ஆனால் மக்களைத் தூண்டி குளப்புவதற்கே கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர்.
இது இவ்விதமிருக்க 70,000 முஸ் லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டனர். வடக்கிலுள்ள ஒஸ்மானியா கல்லூரி கதீஜா பாட சாலைகள் மீண்டும் அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்டு, கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளை முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்வதுடன், ஏனைய கட்சிகளின் விதண்டாவாதங்களை முஸ்லிம் மக்கள் நிராகரித்து அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த வீராப்பும் ஆவேசமும் முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைக்கும் BBS இடம் ஏன் வருவதில்லை.
ReplyDeleteதிருவாளர் அஸ்வர் அவர்களே.... நேற்று பொகவந்தலாவையில் மனோ கணேசனின் கருத்திற்கு காது கொடுத்தீர்களானால்.... இந்த வெட்கம் கெட்ட தொழிலிற்கும் சொந்த மக்களுக்கு இளைத்து வரும் துரோகத்துக்கும் நீங்க்ள் பிரியாவிடை கொடுப்பதை தவிர வேறுவழிதெரியவில்லை.
செஹ்..... மானம் கெட்ட பொழப்பு....... தேவைதானா???
அரசுக்குள் இருந்துகொண்டு எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டவேண்டும் என்பது சிலரைத்தவிர பலருக்கு தேவையே இல்லை. மக்கள் ஆதரவு உள்ளவர்கள் தைரியமாக பேசுவார்கள் உண்மையையும் நடந்தவைகளையும் பேசுவார்கள் ஆதரிக்கவேண்டிய இடத்தில் ஆதரிப்பார்கள் எதிர்க்கவேண்டிய விடயங்களை எதிர்ப்பார்கள். இதுதானே மனிதனாகப்பிறந்தோர்க்கு அழகு இல்லையேல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்பது விதியா என்ன?
ReplyDeleteஇது அரசாங்கத்தில் இணைந்து கொண்டு தண்டச்சோறு தின்பவரின் வழமையான முழக்கம்! கணக்கில் எடுக்க முடியாத நக்குண்டாரின் நாவிழந்த கருத்து!!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-