சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணர்கள் தகவல்
சிரியாவில், ரசாயன ஆயுதங்கள், பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக, ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.
சிரியா நாட்டில், அதிபர், பஷர் -அல்- ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தைப் பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன. இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் இந்தச் சண்டையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரசாயனக் குண்டு வீச்சில், நச்சுப் புகை பரவி, பலர் இறந்த இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்து உள்ளனர்.
பான் கி மூனிடம் ஒப்படைப்பு:
இது தொடர்பான ஆய்வறிக்கை, ஐ.நா., பொதுச் செயலர், பான் -கி- மூனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ரகசியமாக ஒப்படைக்கப்பட்டுள்ள, இந்த ஆய்வறிக்கையில், "சிரியாவில், 14 சம்பவங்களில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகள் மூலம், இந்த ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிர் கொல்லியான, "சரின்' எனும் நச்சு வாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தியது யார் என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. "சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை, சர்வதேச பார்வையாளர்கள் பார்க்கவும், அவர்கள் முன்னிலையில் அவற்றை ஒப்படைக்கவும் முன்வந்தால், தாக்குதல் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கான மத்தியஸ்த பணியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.
Post a Comment