சீனாவில் இப்படியும் பரிதாபம்
சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து இந்திய ரூ.16,740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை உள்ளது. இதை மீறுபவர்களை தண்டிப்பதற்காக குறிப்பிட்ட அளவிலான தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது. குடும்ப கட்டுப்பாட்டுத் துறையினர் இந்த அபராதத்தை வசூலிக்கின்றனர்.
ஆனால், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் அபராதம் வசூலிப்பதற்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த வக்கீலான வூ யூசூ என்பவர், சீனாவில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த அரசுகள் இத்தொகையை தங்களுடைய செலவினத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீஜிங் நியூஸ் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவில் ஒவ்வொரு மாகாண அரசிடமும், கடந்த ஆண்டு குடும்பக் கட்டுப்பாட்டை மீறியதற்காக பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்த விவரத்தை தருமாறு கடந்த ஜூலை 31ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன்.
எனக்கு கிடைத்த தகவலின்படி 19 மாகாண அரசுகள், கடந்த ஆண்டில் ரூ.16,740 கோடியை அபராதத் தொகையாக வசூலித்துள்ளன. 12 மாகாண அரசுகள் பதில் தெரிவிக்கவில்லை. இந்த அபராதத் தொகை தேசிய அளவில் வசூலிக்கப்படுவதால் தங்களிடம் புள்ளிவிவரம் இல்லை என்று தெரிவித்துள்ளன.
அபராத வசூலில் ஜியாங்ஷி மாகாணம்தான் முதலிடத்தில் உள்ளது. இந்த மாகாணத்தில் மட்டும் ரூ.343 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஷிசுவான் மாகாணமும், பியூஜியன் மாகாணம் 3வது இடத்திலும் உள்ளன. பெற்றோர்தான் தாங்கள் எத்தனை குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அவ்வாறின்றி மற்றவர்கள் அதை நிர்ணயம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார். இதற்கிடையே, சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருக்கலைப்பு செய்வதாகவும், இரண்டாவது குழந்தையை அதிகாரிகளே எடுத்து சென்று அநாதை விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர் என்றும் புகார்கள் எழுந்துள்ளன. அநாதை விடுதிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள், வெளிநாட்டு தம்பதிகளுக்கு பெரும் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
எக்ஸ்ட்ரா தகவல்
சீனாவில் 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்குப்படி குடும்பங்களில் அதிகபட்சமாக 1.181 குழந்தை பிறக்கிறது. அதாவது அதிகபட்சமாக ஒரு குழந்தைதான். நகரங்களில் குழந்தை பிறப்பு மிக குறைவாகவும், கிராமங்களில் சற்று அதிகமாகவும் உள்ளன.
Post a Comment