Header Ads



தம்புள்ள பள்ளி அகற்றப்படுமா? இல்லையா? தேர்தலுக்கு முன் பதில் பெற்றுத்தர கோரிக்கை

மாத்தளை மாவட்டம் தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுவது தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியிடமிருந்து உறுதியான பதிலை எதிர்பார்க்கும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 13-09-2013 நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் நடைபெற்ற பள்ளிவாசல் நிர்வாகசபை கூட்டத்திலே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ள புனித பூமித் திட்டத்தின் கீழ் அடையாளமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நெடுஞசாலை விஸ்தரிப்புக்காக பள்ளிவாசல் அகற்றப்படவிருப்பதாக பள்ளிவாசல் நிர்வாகம் கூறுகின்றது.

''ஏற்கனவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என ஜனாதிபதி என உறுதி வழங்கியுள்ளதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்து. இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை தாங்கள் கூடி எடுத்ததாக'' பள்ளிவாசல் நிர்வாக சபையின் துணைச் செயலாளரான சாகுல் ஹமீத் மொகமட் ரவூப் கூறுகின்றார். 

மூன்று தினங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் பள்ளிவாசல் எல்லைக்குள் அடையாளமிடப்பட்ட தடயங்களை இன்று அகற்றுவதற்கு குறித்த வாரியத்தின் அதிகாரிகள் அங்கு வந்த போது தங்களால் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

பள்ளிவாசல் நிர்வாகத்தினால் இன்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் பள்ளிவாசல் அகற்றப்படுமா? இல்லையா ? என ஜனாதிபதியின் பதிலை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் எதிர்வரும் 21ம் திகதி மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக பெற்றுத் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தை உள்ளடக்கிய மத்திய மாகாண சபைக்கான தேர்தலும் அன்றைய தினம் நடைபெறுகின்றது.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பள்ளிவாசல்க்கு விஜயம் செய்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் தற்போது உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விபரங்களை கேட்டறிந்தார்.  எதிர்வரும் வியாழக்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு இதனை கொண்டு வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். bbc

3 comments:

  1. எமது கௌரவ அமைச்சர்களான பௌசி அலவி மௌலானா காதர் அஸ்வர் ஆகியோர் 'இலங்கையில் எந்தப்பகுதியிலும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட வில்லை' என்று கொக்கரிக்கும் போது தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம் இவர்களின் உதவியை எப்படி நாடுகிறார்கள் என்று அறியாத புதிராக உள்ளது....

    ReplyDelete
  2. இந்தக் கிடுக்குப் பிடியை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மாத்திரமன்றி அகில இலங்கை முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கழுத்துப் பிடியாகப் பிடித்து வரும் 21ம் திகதிக்கு முன்னதாக ஒரு இறுதியான முடிவைக்காண ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

    கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது, கல்முனைக்கு வந்த ஜனாதிபதி, தம்புள்ள பள்ளிவாசல் விடயமாக எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் தன்னிடம் எடுத்துக்கூறவில்லை என்று பகிரங்கமாகச் சொன்னார்.

    காத்தான்குடிக்கு வந்தபோது, எந்தவொரு பள்ளிவாசலையும் அகற்றுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிச் சென்றார்.

    இப்போது பள்ளிவாசலுக்கு நடுவில் வீதியமைக்கும் திட்டத்தை ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி அதிகார சபையினரே மேற்கொண்டு வருகின்றார்கள்.

    அப்படியென்றால் கல்முனைக்கும், காத்தான்குடிக்கும் வந்துதான் தம்புள்ள பள்ளிவால் விவகாரத்தை அறிந்து கொண்டு அகற்றப்பட மாட்டாது என உத்தரவாதமளித்து வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி இன்று வரை நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கு 'தம்புள்ள பள்ளியில் கை வைக்க வேண்டாம்' என்று ஒரு ஓடர் போடவில்லையா?

    முஸ்லிம் சமூகத்தை தேர்தல் காலத்தில் மாத்திரம் பயன்படுத்திக் கொள்ள ஜனாதிபதியும், அவருடன் சேர்ந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகின்றார்களா?

    வரும் வியாழக்கிழமை இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பள்ளிவாசல் விவகாரத்திற்கு இறுதியான தீர்வொன்றை ஜனாதிபதி அறிவிக்க வேண்டும். இன்றேல் வெற்றிலைச் சின்னத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கேட்கும் சகல வேட்பாளர்களும் அரசிலிருந்து வெளியேறி தமது சமய உரிமையைப் பேண - இஸ்லாத்தைப் பாதுகாக்க - முன்வர வேண்டும்.

    அதுபோலவே அரசின் மந்திரியாகவுள்ள றவூப் ஹக்கீம், றிசாட் பதியுத்தீன், அதாவுல்லா, ஹிஸபுல்லா முதலான சகல முஸ்லிம் அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் அரச கூட்டிலிருந்து தமது பதவிகளைக் கொடுத்து விட்டு வெளியேறி வர வேண்டும்.

    சும்மா 'ஆர்பிகோ' கம்பனி றப்பரைப் போல இன்னமும் இந்த தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை இவர்கள் எல்லோரும் இழுத்துக் கொண்டு போக முஸ்லிம் சமூகம் அனுமதிக்கக்கூடாது.

    இவ்விடயத்தில் அழ்ழாஹ்வுக்குப் பயந்து மிக உறுதியாக இருக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன். எல்லாம் வல்ல அழ்ழாஹ் அவனது இல்லத்தைப் பாதுகாக்க தமது உயிர், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்து முன்னணியில் நிற்கும் இந்த நம்பிக்கையாளர்களுக்கு ஈருலகிலும் பேரருள் புரிவானாக!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.