தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்லும் பெண்கள் சிபாரிசுகளைப் பெற்றுக்கொள்வது
(ஏ என் எம் ஜுனைட் நளீமி)
(அபிவிருத்தி உத்தியோகத்தர் - வெளிநாட்டு வேலை வாய்ப்பு
மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சு)
மகிந்த சிந்தனை எதிர்கால நோக்கு தேசிய அபிவிருத்தித் திட்டத்தில் இலங்கை தாய்மார்கள், பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வது ஊக்குவிக்கப்படுவதில்லை.
தாய் வெளிநாடு காரணமாக அக்குடும்பமும், சமூகமும் எதிர்நோக்கும் சமூகப்பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்படைந்துள்ள சகல தரப்பினர்களதும் கருத்தாகவும் யோசனையாகவும் இருப்பது முடியுமாயின் தாய்மார்கள் வெளிநாடு செல்வதைக் குறைத்து நிறுத்தவேண்டும் என்பதாகும். சகலரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்குச் செல்வதற்குள்ள வசதிகளை முற்றாக தடைசெய்வது மனித உரிமை மீறலாக உள்ளதனால் மிகவும் பொருத்தமானதாக இருப்பது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு தகுதி அற்றவர்களை அதற்கு அனுப்பாதிருப்பதும், அவர்கள் வெளிநாடு செல்வதை அதைரியப்படுத்துவதுமாகும். எனவே வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சு இதற்கான மாற்று நிகழ்ச்சி திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
அதற்கமைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவரின் சுற்றறிக்கைக்கு அமைவாக 2013 ஜூலை 15 முதல் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பான குடும்ப சூழல் பற்றிய அறிக்கை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நியமிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் பெறப்பட்டு வருகின்றது.
இந்த அறிக்கையின் மூலம் குறித்த பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லத்தகுதியானவரா, இல்லையா என்பதும், இதனை சிபாரிசு செய்ய முடியுமா, முடியாதா என்பதும் இந்த அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடியும். இதனை உள்ளூர் தொழில் முகவர் தொழில் உடன்படிக்கையைக் கைச்சாத்திடுகின்ற பணியக அலுவரிடம் கையளிக்கப்பட்டு, பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சின் அபிவிருத்தி அலுவலர் கையொப்பமிட்டு பிரதேச செயலாளரும் உறுதிப்படுத்தும் வகையில் கையொப்பமிடப்படும்.
அத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையை சிபாரிசு செய்யும் போது பெண்ணுக்குரிய கடவுச்சீட்டு (passport) இலக்கம், தேசிய அடயாள அட்டை இலக்கம் மற்றும் குறித்த பெண்னை சிபாரிசு செய்யமுடியுமா அல்லது முடியாதா என்பது பற்றிய தகவல்கள் என்பன உடனுக்குடன் குறுந் தகவல் (SMS) மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டு சகல தகவல்களும் கணனித் தரவுக் கட்டமைப்பில் உட்புகுத்தப்படுவதுடன், உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு வருகை தரும் போது கொண்டு வருகின்ற அறிக்கையில் உள்ள கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை இலக்கத்தின் தகவல்களும் தரவுக்கட்டமைப்பில் உட்புகுத்தப்படும். அதற்கமைய மேற்படி அறிக்கை அபிவிருத்தி அலுவலர் மூலம் ஒப்பமிடப்பட்ட ஒன்றா என்பதை கண்டறியமுடியும். இதன் காரணமாக எந்தப்பெண்களும் வேறு விதமாகவோ அல்லது மோசடி செய்தோ நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போகும்.
இவ்வாறான அறிக்கையொன்று இல்லாது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெண்களை பதிவு செய்யாமலிருக்க வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தீர்மானித்துள்ளது.
எனவே, குறித்த பெண்ணின் குடும்பப்பின்னணி அறிக்கையை சிபாரிசு செய்வதற்கு முன் அவரின் குடும்பப்பின்னணி ஆராயப்பட்டு அபிவிருத்தி அலுவலர்கள் மூலம் சிபாரிசு செய்யப்படும்.
இந்த விடயங்கள் தொடர்பாக சிறுவர் நன்னடத்தை திணைக்களமும் கவனம் செலுத்தியுள்ளதன் காரணமாக நன்னடத்தை அலுவலர்களின் கண்காணிப்பும் இவ்விடயத்திற்கு அவசியமாக உள்ளது.
Ø அதேபோல், முதற்தடவையாக வீட்டுப்பணிப்பெண்ணாக அல்லது வீட்டுப்பணிப்பெண்களுக்கான உதவியாளராக வெளிநாடு செல்லுகின்ற பெண்கள் பயிற்சியில் கலந்துகொள்வது மற்றும் வெற்றிகரமாக பயிற்சியை பூர்த்திசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதொரு சட்டமாகும்.
Ø மேலும், சிபாரிசை செய்யப்படும் போது 03 வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கும், மேலதிக தேவையுடைய பிள்ளைகளின் தாய்மார்களுக்கும் (Mothers of Disabled children) வெளிநாடு செல்லுவதற்கு சிபாரிசு செய்யப்படுவதில்லை. அத்துடன் 03 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் விடயத்தில் திருப்தி அடைந்தால் மாத்திரமே சிபாரிசு வழங்கப்படும். குறித்த பணிப்பெண்ணின் வெளிநாட்டு ஒப்பந்தக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும் வரை அவருடைய பிள்ளைகளின் முழுப்பொறுப்பும் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற பாதுகாவலரையே சாரும்.
Ø மேலும், தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் உச்ச வயதெல்லை 50 ஆகும். சவூதி அரேபியாவுக்கு செல்வதற்கான ஆகக்குறைந்த வயதெல்லையாக 25 வயதும், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கான ஆகக்குறைந்த வயதெல்லையாக 23 வயதும், ஏனைய நாடுகளுக்கு செல்வதற்கான ஆகக்குறைந்த வயதெல்லையாக 21 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயங்கள் ஆராயப்பட்டு மிகப்பொருத்தமானவர்கள் மாத்திரமே வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
I. குறைந்த வயதையுடைய பெண்கள்,
II. கடவுச்சீட்டு மோசடி மூலம் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பெண்கள்,
III. கணவருக்கோ, அல்லது பிள்ளைகளுக்கோ, பாதுகாவலருக்கோ தெரியாமல் செல்கின்ற பெண்கள்,
IV. கணவனின் வற்புறுத்தலில் வழுக்கட்டாயபடுத்தி அனுப்பப்படும் பெண்கள்,
V. வெளிநாட்டு மோகத்தி தவறான வழிகாட்டலில் செல்லும் பெண்கள்,
VI. சிறுகுழந்தைகளின் (03 வயதுக்கு குறைந்த குழந்தைகளின்) தாய்மார்கள்,
VII. பிள்ளைகளின் (03 வயதுக்கு மேற்பட்ட) பாதுபாப்பை உறுதி செய்யாத தாய்மார்கள்,
VIII. குடும்பத்தைப் பற்றி அக்கறையற்ற பெண்கள்,
IX. பணியகத்தின் அங்கிகாரத்தைக்கொண்ட பயிற்சியை பூரணப்படுத்தாதவர்கள்,
மேற்கூறப்பட்ட இவர்கள் வெளிநாடு செல்வதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நிச்சயமாக, இதன் மூலம் பல்வேறு சமூகக்குற்றங்கள், சமூகப்பிரச்சினைகள் போன்றன ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே சமூக ஆவலர்கள் இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு மக்களுக்கான இது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்படுவது அவசியப்படுகின்றது.
அபிவிருத்தி அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
Ø வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் போதும், தொழில்புரிகின்ற போதும் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அப்பிரச்சினைகளை எப்படி முகங்கொடுப்பது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும்.
Ø வேலை வாய்ப்பை எதிபார்ப்பவர்களுக்கு பணியகத்தின் அங்கிகாரத்தைக்கொண்ட பயிற்சியை பெற்றுக்கொள்வதற்கு அறிவுரைகள் பெற்றுக்கொள்ள முடியும்.
Ø அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள தொழில் முகவர் நிறுவனம் (Agency) ஒன்றை தேடிப்பெற்றுக்கொள்ள மற்றும் நேரடியாக அந்நிறுவனத்திற்கு செல்வதினால் கிடைக்கின்ற நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.
Ø இடைத்தரகர் ஊடாக தொழில் வாய்ப்புக்களை தேடி பெற்றுக்கொள்ளும் போது எதிர்நோக்க வேண்டிய பாதகமான நிலமைகளை அறிந்துகொள்ள முடியும்.
Ø வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் போது ஏற்புடையதாகின்ற பணியகத்தின் நிபந்தனைகள் தொடர்பாக விளக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
Ø பிள்ளைகள் உள்ளவராயின் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற முறைகளை அறிந்துகொள்ள முடியும்.
Ø வங்கிக்கணக்கொன்றின் அவசியத்தன்மை மற்றும் அக்கணக்குக்கு பணம் அனுப்பும் முறை பற்றியும் அவற்றின் முக்கியத்துவமும் பற்றிய தெளிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
Ø ஒரு பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றதன் பின் பிள்ளைகளின் பாதுகாப்பு அல்லது கல்விநிலையில் அதிருப்தி காணும் போது அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.
Ø வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றதன் பின் குறித்த பெண்ணின் கணவர் மதுபோதைக்கு அடிமையாவாராயின் அவற்றிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளும், ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் நாடு செல்வம் செலிப்பாகா இருந்தால் ஏன் அவர்கள் நாடு விட்டு நாடு பாய வ்ஏண்டும்.
ReplyDeleteஉங்கள் நாட்டில் முதலில் அசுர வேகத்தில் வளரும் விலைவாசிகளை குறையுங்கள்,ஊழலை ஒழியுங்கள், அரச பொது சொத்துக்களில் சூறையாடுவதை நீங்கள் அனைவரும் நிருத்துங்கள். நீங்கல் சூறையாடும் ஒவ்வொரு சதமும் பொதுமக்களின் பணம் என்பதை ஏந்தான் நினைக்க மறக்கிறீர்கள்?