ரசாயன ஆயுதங்கள் இருந்தால் ஒப்படைக்க சிரியா தயார் - போர் அபாயம் நீங்குமா..?
சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்கும் திட்டத்தை தடுக்க, ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் என்று ரஷ்யா யோசனை தெரிவித்துள்ளது. இதை சிரியா அரசு வரவேற்றுள்ளது. இதனால் போர் அபாயம் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் தொடர்ந்து மோதல் நடக்கிறது. கடந்த மாதம் டமாஸ்கசின் புறநகர் பகுதியில் ராணுவம் ரசாயன வெடிகுண்டுகளை வீசி 1,300 பேரை கொன்று விட்டதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஆனால், ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தவில்லை என்று அதிபர் பஷார் கூறி வருகிறார். சிரியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று அளித்த பேட்டியில், போரை தவிர்க்க வேண்டும் என்றால், சிரியா தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றார். போர் ஏற்படும் என்ற பதற்றமான நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை, சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல் முலெம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, சிரியா தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் அல்லது அழித்து விட வேண்டும் என்று செர்ஜி யோசனை தெரிவித்தார். இதை வாலித் வரவேற்றுள்ளார். இதேபோல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும், சிரியா ரசாயன ஆயுதங்கள் உள்ள இடங்களை ஐ.நா. பார்வையாளர்களுக்கு காட்ட வேண்டும். அவற்றை அழிக்க பாதுகாப்பான இடத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சிரியா அமைச்சர் வாலித் கூறுகையில், சிரியா மக்கள் பாதிக்கப்பட கூடாது என்று ரஷ்யா விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ரஷ்யா தெரிவித்துள்ள யோசனை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் எங்களிடம் ரசாயன ஆயுதங்கள் இருந்தால் ஒப்படைக்க தயார். சிரியா மீது அமெரிக்கா போர் தொடுப்பதை தடுக்க ரஷ்யா எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார். இதனால் போர் அபாயம் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment