Header Ads



கத்தாரில் தொழிலாளர் படும் கஷ்டங்கள்..!

கத்தார் நாட்டில் கட்டுமானத் தொழிலுக்காக சென்றுள்ள தமிழ் கட்டுமானத் தொழிலாளர்கள் குறைவான ஊதியம், மோசமான தங்குமிடம், துஷ்பிரயோகம், மருத்துவ வசதியின்மை போன்ற கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

கத்தாரில் வேலைபார்க்கும் வெளிநாட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் குறைவான ஊதியம், மோசமான தங்குமிடம், துஷ்பிரயோகம், மருத்துவ வசதியின்மை போன்ற கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

தனிநபர் வருமான அடிப்படையில் உலகிலேயே மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் மத்திய கிழக்கின் சிறு தீவுத் தேசமான கத்தாரில், நேபாள கட்டுமானத் தொழிலாளர்களின் நிலை கவலையளிக்கும் விதத்தில் மோசமாக உள்ளது என்று சர்வதேச தொழிலாளர் நல அமைப்புகள் கவலை வெளியிட்டிருந்தது பற்றி bbc ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

20 லட்சம் கொண்ட கத்தாரின் மொத்த ஜனத்தொகையில் எழுபது சதவீதமானோர் வெளிநாட்டுத் தொழிலாளிகள்தான். அதிலும் வேலை பார்க்கும் மக்கள் என்று பார்க்கப்போனால், 94 சதவீதம் பேர் வெளிநாட்டினர்தான்.

2022ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்த தேர்வாகி பெரும் கட்டுமானப் பணிகள் நடந்துவரும் இந்த நாட்டில் கட்டுமானத் துறையில் கஷ்டப்படுகின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களில் ஏராளமானோர் இந்தியர்கள் அதிலும் குறிப்பாகத் தமிழர்கள்.

சுட்டெரிக்கும் அனலில் வேலைப்பார்ப்பதைத் தாண்டி வேறு பல கஷ்டங்களையும் இவர்கள் அனுபவிக்கிறார்கள்.

குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி கூடுதல் நேரம் வேலைவாங்கப்படுவதாகவும் கத்தாரில் ஏழு வருடங்களாக கட்டுமானத் துறையில் எலக்ட்ரீஷியனாக வேலைபார்க்கும் சிவக்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

கத்தாரில் மிக அதிக அளவில் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. 6 பேருக்கு ஒரு சிறிய தங்கும் அறை, 10 பேருக்கு ஒரு கழிப்பறை, 300 பேருக்கு ஒரு சமையல் அறை என்று தங்குமிட வசதி குறைவாக இருப்பதாகவும், இவ்விடங்களில் துப்புரவுச் சூழல் மோசமாக இருப்பதால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு மருத்துவமனைகளுக்கு மட்டுமே செல்லமுடியும் என்பதால் ஒழுங்கான மருத்துவ உதவிகளும் கிடைப்பதில்லை என சிவக்குமார் குறிப்பிட்டார்.

அண்மையில் சில தமிழ் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை வேலைவாங்கப்பட்டு, இரண்டு மாதங்கள் ஊதியமும் வழங்கப்படாமல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக ஒப்பந்தத் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்துகின்ற பெயர் குறிப்பிட விரும்பாத தமிழர் ஒருவர் கூறுகிறார்.

தமது கஷ்டம் குறித்து நீதிமன்றத்தில் முறையிட்ட இந்த ஊழியர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டும் மிரட்டப்பட்டும் இருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை நடத்தத் தேர்வாகியுள்ள கத்தாரில் மிகப் பெரிய கோபுரங்களும், அரங்கங்களும் சொகுசு நகரங்களும் உருவாகிவருகின்றதென்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 இந்தியத் தொழிலாளர்கள் அங்கே உயிர் விட நேர்வதாக சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

கத்தாரின் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்களின் நிலையை ஆராய்ந்த சர்வதேச அமைப்புகள் அதனை நவீன காலத்து கொத்தடிமைச் சூழல் என்றே வர்ணித்துள்ளனர்.

1 comment:

  1. ஆமாம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடையங்களையும் நாம் கண்டு மிகவும் கவலையுற்று இதற்கு நல்லதோரு தீர்வு கிடைக்காத என்று ஏங்கிக்கொண்டிருந்தோம் என்றும் சொல்லலாம் அந்தளவுக்கு எம் தொழிலாளர்கள் நடத்தப்படுகின்றனர், இது தொடர்பாக வருகின்ற செய்திகளைப் பார்க்கின்ற போது கண்டிப்பாக இதற்கொரு நல்ல தீர்வு கிடைக்குமென்றுதான் நன்புகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.