ரோசி சேனாநாயக்க உரையாற்றிய போது, வாகனத்தை நிறுத்திய மேர்வின் சில்வா
புத்தளம் மாவட்டம் வென்னப்புவ வைக்கால பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அமைச்சர் மேர்வின் சில்வா சென்றதையடுத்து ஏற்பட்ட மோதல் நிலைமை பொலிஸாரின் தலையீட்டை அடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படடது.
இந்த சம்பவம் நேற்றிரவு 7.20 அளவில் நடந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வைக்கால பிரதேசத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற அமைச்சர்கள் வாகன தொடரணியில் சென்ற வாகனம் ஒன்று கூட்டம் நடைபெற்ற இடத்தில் நிறுத்தப்பட்டது.
அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய அமைச்சர் மேர்வின் சில்வா, “யார் ஹூ சத்தமிடுவது, யாருக்கு எதிராக ஹூ சத்தம் போடுகிறீர்கள் ”என கேட்டார்.
“நாங்கள் யாருக்கு எதிராக ஹூ சத்தமிடவில்லை. கை தட்டிக்கொண்டிருந்தோம் ” என்று அங்கிருந்த ஒருவர் கூறினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஹூ சத்தமிட்டு கோஷமிட ஆரம்பித்தனர்.
நிலைமை பாரதூரமாக செல்வதை உணர்ந்து கொண்ட அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும், அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினரும் தலையிட்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்தனர். இறுதியில் அங்கிருந்த மக்களின் கேலி கோஷத்திற்கு மத்தியில் அமைச்சர் மேர்வின் சில்வா தனது வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Post a Comment