Header Ads



இலங்கை விமானம், லண்டனில் அவசர தரையிறக்கப்பட்டதற்கான காரணம்

இலங்கையிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் வந்த இலங்கை விமானசேவையின் விமானம் ஒன்று திடீரென ஹீத்ரோவிலிருந்து ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு அங்கே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் இருந்த இருவரை ஸ்டான்ஸ்டட் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். விமானத்தின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏ330 ஏர்பஸ் ரக விமானத்தில் 267 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் ஏழரை மணியளவில் இந்த திசை திருப்பலும் திடீர் தரையிறக்கமும் நடந்திருக்கிறது.

இந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விமானத்தில் பயணம் செய்த இருவரை கைது செய்திருக்கும் காவல்துறையினர், இவர்கள் இருவரும் பிரிட்டிஷ் குடிகள் என்றும், ஒருவருக்கு வயது 49 என்றும் மற்றவருக்கு வயது 57 என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இருவரும் இலங்கையில் தங்களின் அனுமதிக்கப்பட்ட விசா காலத்துக்கும் அதிகமாக தங்கியிருந்தவர்கள் என்றும், இதற்காக இவர்ளை இலங்கை அதிகாரிகள் பிரிட்டனுக்கு பலவந்தமாக திருப்பியனுப்பினார்கள் என்றும் இலங்கை விமானசேவை நிறுனத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி திபால் பெராரா பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர்களில் ஒருவர் தம்மிடம் வெடிகுண்டு இருப்பதாக தமக்கு அருகில் அமர்ந்திருந்த பயணியிடம் கூறியதாகவும், இதைக்கேட்ட அந்த பயணி உடனடியாக விமானப்பணியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததாகவும், இந்த தகவல் காரணமாகவே இந்த விமானம் திடீரென திசை திருப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், மற்றவரிடம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணைகள் நடந்துவருவதாகவும் தெரிவித்திருக்கும் அதிகாரிகள் இது குறித்த புலனாய்வு தொடர்ந்தும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். bbc

No comments

Powered by Blogger.