Header Ads



சிரியர் ரசாயன ஆயுதங்களை பதுக்கி வருகிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு

சர்வதேச பார்வையாளர்கள் சோதனையிடுவதற்கு முன்னதாக, சிரியா அரசு, ரசாயன ஆயுதங்களை பல்வேறு இடங்களில் பதுக்கி வருவதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியா நாட்டில், அதிபர், பஷர் - அல் - ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் இந்தச் சண்டையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரசாயனக் குண்டு வீச்சில், நச்சுப் புகை பரவி, பலர்  இறந்த இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்து உள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை, வரும்,16ம் தேதி வெளியிடப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்குதல் நடத்த திட்டம்: சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய சிரியா மீது, ராணுவத்  தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. "சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை, சர்வதேச பார்வையாளர்கள் பார்க்கவும், அவர்கள் முன்னிலையில் அவற்றை ஒப்படைக்கவும் முன்வந்தால், தாக்குதல் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அறிவுறுத்தலின் பேரில், தங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்களைப் பார்வையிட, சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்கவும், ஒப்படைக்கவும், சிரியா அரசு முன்வந்து உள்ளது. ஆனால், தங்களிடம் உள்ள, 1,000 டன்னுக்கும் அதிகமான ரசாயன மற்றும் உயிர்கொல்லி ஆயுதங்களை, சிரியா, 50க்கும் மேற்பட்ட இடங்களில் பதுக்கி வருவதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா எதிர்ப்பு : ""சிரியா மீதான ராணுவ தாக்குதலை இந்தியா ஆதரிக்காது,'' என, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தானின், பிஷ்கெக் நகரில் நடக்கும் மாநாட்டில் பsங்கேற்ற சல்மான் குர்ஷித் இது குறித்து மேலும் கூறியதாவது: சிரியா விஷயத்தில் பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும். ஐ.நா.,விதிமுறைக்கு உட்பட்டு அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிரியாவில் நடக்கும் உள்நாட்டு சண்டையில், வெளிநாட்டு படைகள் தலையிடுவது ஏற்புடையதல்ல. சிரியா வைத்துள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க, ரஷ்யா மேற்கொண்டு வரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார். 

No comments

Powered by Blogger.