Header Ads



அமெரிக்காவின் தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் - ஐ.நா. சபைக்கு சிரியா அவசர கடிதம்

சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் 426 குழந்தைகள் உள்பட 1429 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என அமெரிக்க ராணுவ மந்திரி ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:-

எங்கள் கூட்டு நாடுகளுடனும் அமெரிக்க காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அப்பாவி குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவில் நடைபெற்ற ரசாயன ஆயுத தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். போர்களில் கூட இவ்வகை ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என மனித நேயம் மிக்க 99 சதவீதம் மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், மனிதநேயத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், நாம் தவறான சிமிக்ஞையை அனுப்புகிறோம் என்ற அர்த்தமாகி விடும். அந்த சிமிக்ஞை நமது நாட்டின் பாதுகாப்புக்கே கூட அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.

இந்த விவகாரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏராளமான மக்கள் கருதுகின்றனர். ஆனால், யாருமே, எதுவும் செய்ய முன்வரவில்லை. சர்வதேச விதிமுறைகளை மீறிய வகையில் சிரியாவில் நடைபெற்றுள்ள ரசாயன தாக்குதல் சிரியாவின் அண்டை நாடுகளும், நமது நட்பு நாடுகளுமான இஸ்ரேல், துருக்கி, ஜோர்டான் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதுடன் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், நேரடியாக ராணுவ ஒத்துழைப்பை அளிக்காவிட்டாலும், சிரியா மீது தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் தார்மீக அடிப்படையில் இதர நாடுகளின் ஒத்துழைப்பை பெற வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு கேட்டு ஒபாமா ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு தார்மீக ஆதரவு அளிக்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.

இது தொடர்பாக இன்று ஆஸ்திரேலிய வெளியுறவு துறை மந்திரி பாப் கர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி ஆஸ்திரேலியாவில் ஒத்துழைப்பை கேட்டிருந்தார்.

இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிக்கிறது. எனினும், அமெரிக்கா எங்களிடம் ராணுவ உதவி எதையும் கேட்கவில்லை. நாங்களும் ராணுவ உதவி அளிப்பதாக உறுதி அளிக்கவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி, தங்களின் நாட்டை தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே ஒருநாடு இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஐ.நா. சபை இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஐ.நா.வின் ஒப்புதலை பெறாமல் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும், அது சர்வதேச போர் மரபுகளை மீறிய தாக்குதலாகவே கருதப்படும் என தெரிகிறது.

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இடங்களில் இருந்து சில மாதிரிகளை சேகரித்த ஐ.நா. அதிகாரிகள் தற்போது அந்த மாதிரிகளை ஆய்வகங்களில் பரிசோதித்து வருகின்றனர்.

இந்த சோதனையில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டால் அது அமெரிக்காவின் தாக்குதல் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று பேட்டியளித்த சிரியா வெளியுறவு துறை இணை மந்திரி பைசல் மெக்தாத், 'அமெரிக்காவின் ஆதரவு பெற்ற போராளிகள் குழுதான் சிரியாவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது' என்று கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் முயற்சியை தடுத்து நிறுத்தும்படி ஐ.நா. சபைக்கான சிரியா தூதர் பஷர் ஜாஃப்ரி, ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி-மூன் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவர் மரியா கிரிஸ்டினா பெர்சவெல் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'சிரியா மீது தேவையற்ற தாக்குதலை நடத்த நினைக்கும் அமெரிக்காவை தடுத்து நிறுத்தவும், சிரியாவில் தற்போது நிலவிவரும் சூழ்நிலைக்கு அரசியல் ரீதியான அணுகுமுறையின் மூலம் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச சட்டவரம்புகளை மீறிய வகையில் சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதை ஐ.நா. சபை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.

தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட புனை கதைகளையும், இண்டர்நெட்டில் இருந்து எடுக்கப்பட்ட போலி புகைப்படங்களையும் மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆயத்தமாகி வருகிறது.

தனது கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஆயுத பலத்தை காட்டி ஒடுக்க நினைப்பதை அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா. சபை வலியுறுத்த வேண்டும். சிரியா பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் ரஷ்யாவின் முயற்சியில் ஐ.நா. சபையும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்' என அந்த கடிதத்தில் பஷர் ஜாஃப்ரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.