இந்தியாவுக்கு பின்னால் ஓடுவதை நிறுத்த வேண்டும் - சோயப் அக்தர்
"சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பின்னால் ஓடுவதை நிறுத்த வேண்டும்,'' என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் செப்., 21ல் துவங்குகிறது. இதில் பங்கேற்க இருந்த பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ் அணி வீரர்களுக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக "விசா' அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதுகுறித்து பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற சோயப் அக்தர் கூறியது:
பைசலாபாத் அணிக்கு, இந்திய அரசு "விசா' அளிக்க மறுத்ததில் ஆச்சரியம் இல்லை. இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாத போது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.பி.,) எப்படி ஆதரவாக செயல்படும் என எதிர்பார்க்க முடியும்.
பிச்சை எடுக்காதே:
எங்களுடன் விளையாடுங்கள், பிரிமியர் கிரிக்கெட் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க எங்கள் வீரர்களுக்கு அனுமதி தாருங்கள் என, இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான், பிச்சை எடுத்துக் கொண்டிருப்பது. பல்வேறு காரணங்களுக்காக பி.சி.சி.ஐ., பின்னால் ஓடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
பைசலாபாத் அணிக்கு விசா கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க கூடாது. முதலில் அவர்கள் அழைத்த போதே, துணிச்சலாக முடிவெடுத்து மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும். இதனால், நமது நாடு, பி.சி.பி.,யின் சுயமரியாதையை காப்பாற்றி இருக்கலாம்.
இழப்பு இல்லை:
இதனால், பெரியளவில் இழப்பு வராது. தவிர, இனி எப்போதும் இந்தியாவுக்கு செல்லக் கூடாது என முடிவெடுக்க இது தான் சரியான நேரம். இதற்குப் பதில் உள்ளூர் போட்டிகளை உலக தரத்துக்கு இணையாக உயர்த்த வேண்டும்.
நமது அணி சிறப்பாக இருந்தால், மற்ற அணிகள் போட்டி போட தானாக முன்வரும். அப்போது நமது விருப்பப்படி நிபந்தனைகள் விதிக்கலாம். ஆனால், இதற்கு இம்ரான் கானை போல துணிச்சலான கேப்டன் இப்போது இல்லை.
தோனிக்கு பாராட்டு:
இந்திய கிரிக்கெட் இப்போது இந்தளவுக்கு வளர்ச்சி அடைந்ததற்கு, பிரிமியர் தொடர் காரணமல்ல. கேப்டன் தோனி என்ற ஒரே நபர் தான் காரணம். இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்பு முனை தந்தவர் தோனி. ஒரு வீரர் மற்றும் கேப்டனாக இம்ரான்கானைப் போல தோனி செயல்படுகிறார்.
இவ்வாறு சோயப் அக்தர் கூறினார்.
Post a Comment