Header Ads



ஹஜ் முகவர்களின் அதிகரித்த கட்டண அறவீட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யார்..?

ஹஜ் முகவர்களின் அதிகரித்த கட்டண அறவீட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யார். 4 இலட்சம் என அறிவித்துள்ள இணைத்தலைவரா? அல்லது கட்டணம் தீர்மானிக்கப்படவில்லை என அறிவித்துள்ள இணைத்தலைவரா? இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது விடயமாக அச்சங்கத்தின் தலைவர் மௌலவி முஹம்மட் அனஸ் கையோப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வழமைபோல் இம்முறையும் முகவர் நியமனம்,கட்டண அறிவிப்பு,நிபந்தனைகள் விதிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தயாரான முதலாவது ஹஜ்குழு செப்டம்பர் இரண்டாவது வாரம் 13ஆம் திகதியளவில் புனித யாத்திரைக்கான பயணத்தை ஆரம்பிக்கயிருக்கின்றது.

இம்முறை, ஹஜ் பயணிகளிடமிருந்து முகவர் நிலையங்கள், ஹஜ் கட்டணமாக 4 இலட்சம் ரூபாவே அறவிட வேண்டும் எனவும், அதற்கு அதிகமாக எவரும், முகவர் நிலையத்திற்கு செலுத்தக் கூடாது எனவும் ஹஜ் குழுவின் இணைத் தலைவர்களுள் ஒருவர் தெரிவித்திருக்க, மற்றைய இணைத்தலைவர், ஹஜ் விவகாரங்களுக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தனியொருவர் தனித்துத் தீர்மானம்; எடுக்க முடியாதெனவும் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில், ஹஜ் குழுவின் உறுப்பினர் ஒருவர், ஹஜ்ஜாஜிகளுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, கட்டணத்தை 4 இலட்சத்து 25 ஆயிரமாக நிர்ணயிக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றார். மற்றொரு உறுப்பினர், முகவர்கள் நேர்மையாகச் செயற்பட வேண்டும் எனவும், தங்களது மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கட்டணங்களை அறவிட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார். 

அத்தோடு, ஹஜ் ஜாஜிகள் ஹரம் ஷரீபில் தொழுகை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஹரம் ஷரீபிற் கருகில் தங்க வைக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கடந்த வருடம் முதல் ஹஜ்குழு உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இதுதவிர, ஹஜ் யாத்திரைப் பயணிகள், தெரிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்களுடன் தெளிவான எழுத்து மூல ஒப்பந்தமொன்றைச் செய்து கொள்ள வேண்டும் என்றும், சகல கட்டணங்களுக்கும் பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளல்வேண் டும் எனவும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

இதேவேளை, புனித ஹரம் ஷரீப் பிரதேச அபிவிருத்தி செய்யப்பட்டுவருவதன் காரணமாக கடந்த காலங்களில் 30 இலட்சமாக அனுமதிக்கப்பட்டுவந்த ஹாஜிகளின் எண்ணிக்கையை, சவுதி அரசாங்கம், இவ்வருடம் 15 இலட்சமாகக் குறைத்துள்ளது. இதனால் இலங்கைக்கு இம்முறை 2240 பேருக்கான அனுமதியே கிடைத்துள்ளது. இதன்காரணமாக முன்னுரிமை அடிப்படையில் முதல் 3250 விண்ணப்பதாரிகளில் இருந்து 2240 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது தோன்றியுள்ள கட்டண முரண்பாட்டால் இவர்களில் 1500 பேர் விண்ணப்பத்தை மீளப்பெற்றுள்ளனர்.

இதுதவிர, கடந்த வருடம் 4 இலட்சத்து 25 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக அறவிட்டால் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முகவர் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 7 இலட்சம் வரை அறவிட்ட முகவர் நிறுவனங்களுக்கெதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த முகவர்நிறுவனங்களுக்கும் இம்முறை அதிகளவிலான கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

இவ்வருடம் கிடைக்கப்பெற்ற ஹஜ் கோட்டாக்களை நேர்முகப் பரீட்சையின் பின் 91 முகவர் நிலையங்களுக்கு 05,10, 15, 20, 25, 30, 40, 45, 55, 60, 80 என்ற அடிப் படையில் பங்கிட்டுள்ள திணைக்களம், ஆகக்கூடுதலாக தலா 80 வீதம் இரு முகவர் நிலையங்களுக்கும், ஆகக்குறைவாக தலா 05 வீதம் 16 முகவர் நிலையங்களுக்கும் பங்கிட்டுள்ளதால், பகிர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முகவர் நிலையமொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹஜ் குழுவின் இணைத்தலைவர், கடந்த வருடம் முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களப் பணிப்பாளருக்கு கெதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இவ்வருடம் ஹஜ் கோட்டா பங்கீட்டில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முகவர் நிலையமொன்று அத்திணைக்களத்திற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

அந்த முகவர் நிலையம் உள்ளிட்ட41 முகவர் நிலையங்களின் அங்கத்துவம் பெறும் ஹஜ் முகவர் சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில், இணைத்தலைவர் 4 இலட்சமாகவும், வேறுசில ஹஜ்முகவர் நிலையங்கள் ஐந்தரை இலட்சம் முதல் ஏழு இலட்சம் வரையும் அறிவித்துள்ள நிலையில், ஹஜ்கோட்டா நியாயமாகப் பங்கிடப்பட்டு எமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், எமது சங்கத்தின் 41முகவர் நிலையங்களும் 3 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு ஹஜ் யாத்திரைக்கு பயணிகளை அழைத்துச் செல்லத் தயார் என்று அறிவித்துள்ளது.

இத்தனைக்கும் தீர்வாக,எதிர்காலத்தில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரசபையொன் றினால் ஹஜ் விவகாரங்கள் கையாளப்படும் வகையில் நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ள நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யபபட்ட வேண்டும் என ஹஜ்குழு இணைத்தலைவர் ஒருவர் யோசனை ஒன்றையும் முன்வைத்துளார்.

No comments

Powered by Blogger.